Showing posts with label ai art. Show all posts
Showing posts with label ai art. Show all posts

AI Art - செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் - வரமா சாபமா?

2023 ஆரம்பித்ததிலிருந்து ChatGPT, AI Art போன்ற வார்த்தைகள் காதில் விழ ஆரம்பித்துவிட்டன. இதெல்லாம் ஏற்கெனவே பல வருடங்களாக ஆராய்ச்சியில் இருந்ததுதான் என்றாலும் மிகவும் பரவலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்போதுதான் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன. ChatGPT போன்ற ஆப்களை மென்பொருள் துறையிலிருப்பவர்கள் இப்போது தமது அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். மென்பொருள் நிரலெழுதுபவர்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லிவிட்டால் அதுவே எழுதிக் கொடுத்துவிடுகிறது. மொபைல் ஆப்களுக்கான டிசைன்கள், வீடியோக்கள், இசைத் துணுக்குகள் என எதைக் கேட்டாலும் செய்துகொடுத்துவிடுகிறது. ஆனால் எல்லாமே ஆரம்ப நிலைகளில்தான். நான்கூட ChatGPT-ஐ மேலெழுந்தவாரியாக எனது சின்னச் சின்ன வேலைகளுக்கு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தச் சமாச்சாரத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட யூட்யூபில் வீடியோக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன.

இங்கே நாம் பார்க்கப் போவது குறிப்பாக AI Art எனப்படுகிற செயற்கை நுண்ணறிவு ஓவியங்கள் பற்றி. அதன் பிரச்சனைகள் பற்றி. இந்த மாதிரி மோஸ்தரில் ஒரு ஓவியம் வேண்டும் என்று டைப் அடித்து அதனிடம் சொல்லிவிட்டால் ஒரு சில விநாடிகளில் நாம் கேட்டதுபோல ஒரு அபாரமான ஓவியத்தை உருவாக்கி நம்மிடம் நீட்டுகிறது. அதுவும் பிரமிக்க வைக்கும் தரத்துடன், துல்லியத்துடன் (இணைப்புப் படங்களைப் பாருங்கள்). இது இப்போது உலகளாவிய ஓவியர்களின் வாழ்க்கையில் கிலி ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு என்பது அதற்கு நாம் அளிக்கும் விவரங்களையும், செய்திகளையும், கோப்புகளையும் அலசி, ஆராய்ந்து, கற்றுக்கொண்டு தொடர்ந்து அசுர வேகத்தில் தனது அறிவை விருத்தி செய்துகொண்டே போகிற சமாச்சாரம். இப்போது பரவலாயிருக்கும் AI Art என்கிற செயற்கை நுண்ணறிவுக் கலை 'Generative Art' என்றழைக்கப்படுகிறது. படங்கள், ஒலிகள் மற்றும் பிற ஊடகங்களை உருவாக்கும் அல்காரிதம்களால் நெய்யப்பட்ட இது கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இப்படியாக ஓவியங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழல், கலையுலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது. கொஞ்சம் வரவேற்பு. கொஞ்சம் எதிர்ப்பு. பாரம்பரிய ஓவியர்களின் படைப்புகளின் மேல் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தைப் பற்றிய கொஞ்சம் கேள்விகள் என்று இந்தச் சூழல் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்கை நுண்ணறிவு ஓவியத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம். இவைகள் எல்லையில்லா இணையத்திலிருந்து உருவப்பட்ட கோடிக்கணக்கான படங்களை அலசி ஆராய்ந்து, காயப்போட்டு, அதிலிருந்து தாமாகவே கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உட்படுத்தப்படுகின்றன. இதில் படைப்பாளிகளின் ஏற்கெனவே காப்புரிமை பெற்ற படங்களும் அடங்கும். அது பெற்ற ஓவிய அறிவின் தொகுப்பிலிருந்து நாம் கேட்பதற்கேற்ற விதத்தில், பதத்தில், கலவையில், சுவையில் மிக்ஸியில் போட்டு அடித்து பிரமாதமான ஒரு புது ஓவியமொன்றைச் சமைத்துக் கொடுக்கிறது. Stable Diffusion, Midjourney போன்ற எண்ணற்ற AI மாடல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சமயம் இதில் பிரபல ஓவியர்களின் பிரபல ஓவியங்கள் அடிப்படையாக (base) உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட ஓவியர்கள் வழங்கியிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. ஆக இது ஒரு மாதிரியான அனுமதியற்ற திருட்டு மற்றும் அத்துமீறல் என்றே சொல்லலாம். இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லித் தப்பித்துவிட முடியாது.

இம்ப்ரெசனிஸம், க்யூபிஸம், பாப் ஆர்ட் என் உங்களுக்கு எந்த ஸ்டைலில் ஓவியங்கள் வேண்டுமானலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் கேட்டபடி உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது என்பது ஆச்சரியம்தான். செயற்கை ஓவியங்களை உருவாக்குவதற்கென்று நிறைய இணைய தளங்களும், செயலிகளும் புற்றீசல்கள் போல நாளுக்கு நாள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதில் சில fotor, playgroundai, inatantart.io, lexica, Dall-E இன்னபிற. இங்கே சென்று Prompt என்று கேட்கப்படும் இடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு நீங்கள் விரும்பியபடி சில பல செட்டிங்ஸ்களை மாற்றி அமைத்தால் போதும். சுடச் சுட இன்ஸண்ட் ஆர்ட் தயார்.

தனித்துவமான AI Art ஓவியங்களைப் படைக்க கீழே கொடுத்திருப்பது போன்ற 'Prompt'-களைப் பயன்படுத்துகிறார்கள். (இப்போதைக்கு இதெல்லாம் நிபுணர்களுக்கு மட்டுமே புரியும்படி உள்ளது.)

Aztec Indian shot down,pain face, in a scenic dystopian environment, intricate, elegant, highly detailed, centered, digital painting, artstation, concept art, smooth, sharp focus, illustration, artgerm, tomasz alen kopera, peter mohrbacher, donato giancola, joseph christian leyendecker, wlop, boris vallejo, perfect composition, beautiful detailed intricate insanely detailed octane render trending on artstation, 8k artistic photography, photorealistic concept art, soft natural volumetric cinematic perfect light, chiaroscuro, award - winning photograph, masterpiece, oil on canvas, raphael, caravaggio, greg rutkowski, beeple, beksinski, giger.

சில பிரபல ஓவியர்கள் கூட இதைப் பயன்படுத்தி சவாலான, தனித்துவமான ஓவியங்களை உருவாக்க இயலுமா என்று முயன்று வருகிறார்கள். சில ஓவியர்கள் AI-உருவாக்கிய ஓவியங்களை அரை மனதாக ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது பாரம்பரிய ஓவியக் கலை வடிவங்களை மதிப்பிழக்கச் செய்யக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஒரு இயந்திரம் கலையை உருவாக்க முடியும் என்கிற விஷயம் மனிதர்களின் கலைப் படைப்புத்திறனின் மதிப்பு பற்றிய கேள்விகளை இங்கே முன்வைக்கிறது.

இணையத்திலிருந்து படைப்புகள் எடுக்கப்பட்டு, கலக்கிப் பிசையப்பட்டு உருவாக்கும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது என்கிற வகையில் தற்போதைய AI Art என்பது ஒரு நெறிமுறையற்ற விஷயம் என்பதில் உலகளாவிய படைப்பாளிகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. படைப்பாளிகளின் காப்புரிமை என்பதும் இங்கே காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும் இப்படி உருவாக்கப்படும் AI ஓவியங்கங்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்தும் தெளிவின்மை நிலவுகிறது.

AI துணைகொண்டு உருவாக்கப்படும் ஓவியங்களுக்கு ஆழமில்லை என்றும், அது பாரம்பரிய ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வலைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் இவை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லையென்றும் சில ஓவியக் கலைஞர்கள் வாதிடுகிறார்கள்.

ஓவியக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த ஓவியர்கள் ஒரு நல்ல உன்னத படைப்பை உருவாக்க பல நாட்கள், ஏன் பல மாதங்கள்கூட எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் AI Art அதே போன்ற ஓவியங்களை வரைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே. மேலும் செயற்கை நுண்ணறிவானது கற்றுக்கொள்ளுதலிலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலிலும் காட்டும் மிதமிஞ்சிய வேகம் இன்னும் கொஞ்ச காலத்தில் ஓவியர்களுக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சமும் லேசாக தலைதூக்கத் தொடங்கிவிட்டது.

ஆனாலும் இதிலுள்ள பெரிய சவால் இவ்வகை ஓவியங்களை அசலான, உண்மையான ஓவியப் படைப்புகளாகக் கருத முடியுமா என்பதுதான். செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் என்பவை வெறும் கருவிகள்தான். அதன் படைப்புத் திறன் மனிதர்களின் படைப்புத் திறனை ஒரு போதும் நெருங்கமுடியாது என்பதும் சிலரின் நியாயமான வாதம்.

இருப்பினும், AI ஓவியங்களின் இந்த திடீர் எழுச்சியானது, ஓவியர்களுக்கு புதிய படைப்புச் சாத்தியங்களைக் குறித்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் கலையை பாரம்பரிய கலை நுட்பங்களுடன் இணைந்து பயன்படுத்தும்போது அது தற்கால ஓவியருர்களுக்கு வேறொரு தளத்தில் புதுமையான மற்றும் உணர்வுபூர்வமான கலப்பினப் படைப்புகளை (Hybrid creations) உருவாக்கும் வாய்ப்பைக் கொடுக்கக்கூடும் என்று கருதுபவர்களும் உண்டு.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரிதங்கள் மனிதர்களைப் போல உணர்வுகளை அனுபவிக்க இயலாதவை. ஆக அவைகளால் உருவாக்கப்படும் படைப்புகள் உணர்வு ஆழம் இல்லாமல்தான் இருக்கும் என்று அநேகம் ஓவியர்கள் நம்புகிற அதே நேரம் இதன் சாத்தியங்கள் கற்பனைக்கெட்டாத வகையில் விஸ்வரூபமாக விரிந்துகொண்டே போகின்றன. எதிர்காலத்தில் ’எந்திரன் சிட்டி’ போல ஒரு ரோபோ கருத்தாழமிக்க, உணர்வு பூர்வ ஓவியமொன்றை AI Art Diffusion Model-களைக் கொண்டு வரைந்து கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

புத்தக அட்டை வடிவமைப்பு, போஸ்டர்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஓவியங்களை அநேகம் பேர் இந்த முறையில் உருவாக்கிப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன. இப்போதைக்கு இவைகள் இலவசம் என்பதும் வசதி.

இந்த மாதிரி செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் இத்தோடு நிற்கப் போவதில்லை. ஒரு பக்கம் இது தொடர்ந்து வேகமாக பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொண்டேதான் இருக்கும். இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி வரமா, சாபமா என்கிற விவாதம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்சத்தின் நோக்கமே தன்னை எல்லா வகைகளிலும் விரிவுபடுத்திக்கொண்டே போவதும், படைத்துக்கொண்டே இருப்பதும்தான். அதன் திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். நடப்பதை பொருத்திருந்து கவனிப்போம்.