அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!

"A customer is the most important visitor on our premises. he is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so." -Mahatma Gandhi

வாடிக்கையாளர் என்பவர் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் எவ்வளவு முக்கியம், ஒவ்வொரு வியாபாரத்திலும் அவர் எப்படி ஜீவநாடியாக இருக்கிறார் என்று மஹாத்மா காந்தி சொன்னதாக மேற்கண்ட வாசகங்கள் தாங்கிய போர்டு நிறைய இடங்களில் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். கஸ்டமர் சர்வீஸ் என்று ஆங்கிலத்தில் நளினமாகச் சொல்லப்படுகிற 'வாடிக்கையாளர் சேவை' குறித்து தொங்க விடப்பட்டிருக்கிற அந்த போர்டை எத்தனை பேர் முழுசாகப் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் அதை வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்தை உணர்ந்து நடந்துகொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதற்கான நேரங்கள் எனக்கு எப்படியோ அடிக்கடி வாய்த்துவிடுகின்றன.

கொஞ்ச நாள் முன்பு சென்னையிலுள்ள ஒரு பிரபலமான காமிரா ஷோரூமில் ஒரு காமிரா வாங்கினேன். கையில் காமிரா கிடைத்த மகிழ்ச்சியில் சில உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு ஃபிலிமைக் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்த்தால் எல்லா போட்டோவிலும் இடது பக்கம் கொஞ்சம் கருப்பாக தீற்றல். போதாதற்கு ஃப்ளாஷூம் வேலை செய்யவில்லை. என்னடா இது என்று அதை எடுத்துக்கொண்டு வாங்கின கடைக்கே போனால், 'காமிரா வாரண்டியில் இருக்கிறது, ஆகவே சரி செய்ய முயற்சிக்கிறோம் இல்லையேல் வேறு புதிய காமிரா தருவோம்' என்றாள் அங்கொரு பெண். புதிய காமிரா பற்றிய அறிவிப்பில் நான் அகமகிழ்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் என் மனக் கஷ்டத்தை எடுத்துச்சொன்னேன். வாங்கி கொஞ்ச நாட்கள்கூட ஆகாத நிலையில் இப்படி பழுதடைந்து போனது வருத்தத்தைத் தருவதாகவும், கூடிய விரைவில் அது நல்ல முறையில் திரும்பக் கிடைத்தால் நல்லது என்றும் தெரிவித்தேன். அதற்கு அவள் சளைக்காமல் சர்வீஸ் ஆள் லீவில் போயிருப்பதாகவும் ஒரு பத்துநாள் ஆகும் என்றும் தெரிவித்தாள். அது சீக்கிரம் சரி செய்யப்பட்டு திரும்பக் கிடைப்பதன் தேவையை நான் அவளிடம் மறுபடி மறுபடி வலியுறுத்தினேன். உணர்ச்சியே இல்லாமல் எல்லாம் கேட்டுவிட்டு "ஏன் சார் இப்படி சலிச்சுக்கறீங்க!" என்றாள். எனக்கு வந்த கோபத்தில் பற்களை நறநறத்துவிட்டு அவளிடம் அவளுக்கு உறைக்கிற மாதிரி என்னமோ சொன்னேன். வார்த்தைகள் சரியாக நினைவில்லை.

காமிராவைக் கொடுத்துவிட்டு வந்து ஒரு மாதம் ஆகிறது. நான்கு முறை போன் பண்ணியபோதும் ஏனோ தானோவென்று பதில் வந்தது. இன்றைக்கு மறுபடி போன் பண்ணி கொஞ்சம் கடுமையாய் பேசினதுக்குப் பலனாக ஒழுங்காக பதில் வந்தாலும் காமராவின் நிலைபற்றி இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள முடியவில்லை. பயங்கரக் கோபம் வருகிறது. ஆனால் என்னை மாதிரி இறைந்து பேசாத, அதிகாரம் செய்யத் தெரியாத, அமைதியாய் பேசுகிற ஆட்களுக்கு இதுதான் கதிபோலும். என் குணத்திற்கு நேர் மாறான நண்பர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் போன ஒரு சில இடங்களில் அவர்கள் நடந்து கொண்ட முறையால் நான் பல முறை வியந்திருக்கிறேன். அதிலும் ஒரு நண்பன் அவன் வீட்டில் மாட்ட ஏர்கண்டிஷனிங் மெஷின் வாங்க ஒரு பிரபல ஷோரூமுக்குப் போய் அடித்த கூத்து இருக்கிறதே! ஷோரூமில், ஏ.ஸி சாதனத்தை நாளைக்கு வீட்டில் டெலிவரி செய்துவிடுவோம், இப்போது இந்த டெலிவரி ரசீதில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போங்கள் என்றார்கள். அதில் Goods received in good condition என்றிருப்பதைப் பார்த்து அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான் நண்பன். பொருளைப் பெற்றுக் கொள்ளாமலே எப்படி பெற்றுக்கொண்டதாக கையெழுத்திட முடியும் என்பது அவன் வாதம். அதுவும் in good condition!! நியாயந்தான். கடைசியில் அவன்தான் ஜெயித்தான். அடுத்தநாள் ஏ.ஸி கிடைத்தபிறகு அதன் ஜில்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தான். நானானால் என்ன செய்திருப்பேன் என்று நீங்கள் சுலபத்தில் ஊகித்துக்கொள்ளலாம். நம்பிக்கையே வாழ்க்கை! நம்பிக் கெடுவதும் கூட!

மேற்கண்ட அனுபவங்களுக்கு நேர் மாறான அனுபவங்களும் ஏற்படுகின்றன. வீட்டுக்கு அருகாமையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரபல காலணியகத்திற்கு ஷூ லேஸ் வாங்கப் போனேன். அங்கிருந்த கல்லாப் பெரியவர் புன்னகையுடன் சலாம் போட்டு வரவேற்று என்னிடமிருந்து ஒரு கணிசமான வியாபாரத்தை எதிர்பார்த்து நிற்க நான் தயக்கத்துடன் ஷூ லேஸை மட்டும் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கினேன். திரும்பும்போது இன்னொரு சலாம் போட்டு மறுபடியும் வாங்க சார் என்றார். அவர் சொன்ன வாய் முகூர்த்தம் மறுபடி அங்கே போக வேண்டியதாகப் போயிற்று. காரணம் இருக்கிறது. வாங்கிப் போன ஷூ லேஸை ஷூவின் துளைகளில் நுழைத்தெடுத்துவிட்டு கடைசியில் ஒரு நாட் போடுவோமில்லையா? அதற்கு நீளம் போதாமல் ரொம்ப்ப்ப்ப சின்னதாக இருந்தது. நுனியை விரலிலேயே பிடிக்க முடியவில்லை. ஆறு ரூபாய் வேஸ்ட். மறுபடியும் அதே கடைக்குப் போனபோது அதே பெரியவர். அதே புன்னகை. அதே சலாம். விஷயத்தைச் சொல்லிவிட்டு வேறு ஷூ லேஸ் பெரிதாக வாங்கிக்கொண்டேன். (மறுபடி எட்டு ரூபாய் கொடுத்துத்தான்). அப்போது அவர் ஒரு கூப்பனை என் கையில் கொடுத்து, உங்கள் குழந்தைக்கான ஸ்கூல் ஷூவை ஏப்ரலில் இங்கே வாங்கினால் ஒரு பரிசு கொடுப்பதுடன், அதிர்ஷ்டக்குலுக்கலிலும் உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்புண்டு என்றும் மேலும் உங்கள் குழந்தை பரீட்சையில் முதல் மார்க்கில் தேற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்தார். கடைசி வாக்கியம் நிஜமாகவே மனதை நெகிழ்த்துவதாக இருந்தது. சும்மா சொல்கிறார் என்று தோன்றவில்லை. அவர் நேர்மையாகவே அதைப் பண்ணுகிறவராகவும் இருக்கலாம். எனக்கு மறுபடி அந்தக் கடைக்குப் வரவேண்டும் என்று அங்கே நின்றுகொண்டிருக்கும்போதே தோன்றியது. எதுவும் வாங்காவிட்டாலும் குறைந்தபட்சம் அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்காவது. இது வாடிக்கையாளனின் ஒரு வகையான உணர்வு நிலை.

இதே மாதிரி என் இரு சக்கர வாகனத்துக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டப் போனபோதும்கூட நடந்தது. ஒரு அரசு விடுமுறைக்கு முந்தைய தினம் என்பதால் அதிகம் பணியாட்கள் வராத நிலையில் அந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளரே இறங்கிவந்து நான் உட்பட ஒரு சில வாடிக்கையாளர்களை மிக மரியாதையுடன் நடத்தி கேஷியர் முதல் டெஸ்பாட்ச் வரை எல்லா வேலைகளையும் தாமாகவே செய்து முடித்து பாலிஸியை கையில் தந்தார். அவருடைய பொறுமையும் பணிவும், கடமையுணர்வும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

ஒரு சில பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையின் உன்னதத்தை உணர்ந்து செயல்பட்டு பெரிய அளவில் உயர்ந்த கதைகளும் உண்டு. எங்கே பணியாட்கள் வாடிக்கையாளர்களிடம் பணிவாகவும், சேவை மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்களோ அங்கே வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வருவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டும் வாடிக்கையாயர்கள் முகம் சுழித்தாலோ, கோபப்பட்டாலோ, பொறுமையிழந்து திரும்பிப் போனாலோ அங்கே அந்த நிறுவனத்தில் கண்ணுக்குத் தெரியாத சரிவு ஏற்பட்டுவிடுகிறது. இதை நிறைய வளர்ந்த நிறுவனங்கள் தெளிவாய் தெரிந்து வைத்துள்ளன. உதாரணத்திற்கு என் அப்பா ஒரு மளிகைக் கடையில் வாங்கிவந்த ஒரு 7'O Clock ப்ளேடு பாக்கெட்டில் ஒரு ப்ளேடுகூட இல்லாமல் காலிப் பெட்டியாய் இருப்பதைப் பார்த்து (25 ப்ளேடுகள் அதில் இருக்கவேண்டும்) அந்த நிறுவனத்திற்கு தன் பணவிரய விஷயத்தை ஒரு கார்டில் எழுதிப் போட்டார். ஒரு வாரம் கழித்து 7'O Clock தயாரிப்பு நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரிடமிருந்து மன்னிப்புக் கோரி ஒரு கடிதமும் இரு ப்ளேடு பாக்கெட்டுகளும் வந்து சேர்ந்தன. அப்பா புல்லரித்துப் போனார். இந்த மாதிரி விஷயங்கள் அத்தி பூத்தாற்போல் என்றைக்காவது நடப்பதால் புல்லரிப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக என்னென்னமோ செய்கிறார்கள். பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். பொங்கல் கொடுக்கிறார்கள். குடும்பத்தினர் பிறந்த நாட்களைக் குறித்து வைத்துக்கொண்டு வாழ்த்துக் கார்டு அனுப்புகிறார்கள். கஸ்டமர் உட்காரும்போது நாற்காலியை பிருஷ்டத்திற்கு சரியாக நகர்த்திக்கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் அல்லது பலூன் கொடுக்கிறார்கள். வாசல் கண்ணாடிக் கதவை நமக்காகத் திறந்து மூடுகிறார்கள். எங்களிடம் சர்வீஸ் பண்ணின உங்கள் டூ வீலர் எப்படி ஓடுகிறது என்று போன் பண்ணி விசாரிக்கிறது ஒரு சர்வீஸ் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ சார் என்று கேட்டு பாங்குகளில் டெபாசிட் ஃபார்ம் நிரப்பித் தருகிறார்கள். இது எல்லாமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

ஈஃதிப்படியிருக்க ஒரு பெரிய துணிக்கடையில் ஏராளமான பேரை ஆங்காங்கே நிறுத்திவைத்து சேவை என்கிற பெயரில் ரொம்ப சோதிப்பதும் உண்டு. அப்படி இப்படி திரும்பினால் போதும் இரண்டு பேர் ஓடி வந்து நின்று என்ன சார் வேணும் என்பார்கள். கண்ணைக்கூட சிமிட்ட முடியாது. உடனே பக்கத்தில் ஓடோடி வந்து நின்று விழுந்து விழுந்து கவனித்து நம் அசைவுகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுவார்கள். ஓவர் சர்வீஸூம் திகட்டிவிடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. ஒரு பிரபல தனியார் செல்லுலார் கம்பெனியில் நாம் மொபைல் இணைப்பு எடுத்திருக்கும்போது நாம் சொல்கிற குறைகளுக்கெல்லாம் செவி சாய்க்காமல், நாம் கனெக்ஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தால் போதும் பத்துப் பதினைந்து பிரதிநிதிகள் வீட்டுக்கும் ஆபிஸூக்கும் படையெடுப்பார்கள். ஏன் சார் கட் பண்றீங்க என்று பதறுவார்கள். போதாததற்கு இணைப்பை நாம் சரண்டர் லெட்டரில் எழுதிக்கொடுத்த தேதியில் துண்டிக்காமல் ஒரு நாலைந்து மாதங்களுக்கு பாராமுகமாக இருப்பதுடன், நாம் பேசாத, உபயோகிக்காத இணைப்புக்கெல்லாம் பில் அனுப்பிக்க்க்க்கொண்ண்டே இருப்பார்கள். சரியான டார்ச்சர் அது! இத்தனைக்கும் தனியாக 'வாடிக்கையாளர் சேவைப் பிரிவு" ஒன்றை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.

ஒரு நாள் காலை அவசரமாய் ஏதோ வாங்க ஒரு மளிகைக் கடைக்குப் போனபோது அங்கேயிருந்த வேலையாள் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார். விசாரித்தபோது முதலாளி பூஜை பண்ணிக்கொண்டிருப்பதாகவும் அது முடிந்த பிறகே வியாபாரம் என்றார். நான்தான் முதல் போணியாம். அவர் பூஜையை செய்வதைப் பார்த்தால் அன்றைக்கெல்லாம் முடியாதுபோல் தோன்றியது. அத்தனை விலாவாரியாக பூஜை நடந்துகொண்டிருந்தது. எனக்கு காத்திருக்க நேரமில்லையாதலால் வேறு கடைக்குப் போய்விட்டேன். திரும்பும்போது ஒரே யோசனை. முதலாளி பூஜை செய்வது நல்ல விஷயம். ஆனால் எதற்காக? வாடிக்கையாளர் கடையைத் தேடி வரவேண்டுமென்பதற்காக. முழுசாய் முன்னால் வந்து நின்ற வாடிக்கையாளனும் அவர் பண்ணின பூஜையில் திரும்பிப்போய்விட்டானென்றால் அப்புறம் எதற்காக அதையெல்லாம் செய்கிறார் என்று கேள்வி எழுகிறது. செய்யும் தொழிலே தெய்வம். கஸ்டமரே கடவுள் என்று அவருக்கு ஏன் புரியவில்லை என்று நினைத்தேன். ஒரு வேளை என்னைப் போன்றவனுக்கு சில்லறை வியாபாரமல்லாமல் மொத்த விற்பனை, மெகா சேல் என்று பெரிய ப்ளான் எல்லாம் கைகூடவேண்டுமென்று வேண்டுதலோ என்னவோ!

கோடி கோடியாய் சம்பாதித்தும் கடைக்குள் வந்து நிற்பவன் வேர்த்து வடிய நின்றிருக்கும்போது மின் விசிறிகூட போடாதவனும் இருக்கிறான். காற்றே நுழைய முடியாத இடத்தில் புறாக்கூண்டு மாதிரி கடையை வைத்துக்கொண்டு நாம் போனதும் கூல்ட்ரிங் சாப்பிடறீங்களா சார் என்று கேட்பவனும் இருக்கிறான். வாங்குவது பதினைந்து பைசா தீப்பெட்டியானாலும் பின்னதுதுதான் வாடிக்கையாளனுக்கு மன நிறைவைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதெல்லாம் இருக்கட்டும். நான் இன்று வாங்கி வந்த ஷூ லேஸ் முடிச்சுப்போடத் தேவையான நீளத்தைவிட ரொம்ப அதிகமாக இருந்து ஷூக்கு வெளியே ரொம்பத் தொங்குகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்க்கிறதா என்ன? என்னமோ போங்கள்! நானொரு அப்பாவி "கஷ்ட"மர்தான்.

கலையும் கலை சார்ந்த இடமும்

சென்னை கவின் கலைக் கல்லூரிக்கு (Madras Collage of Fine Arts) எதையாவது சாக்கிட்டு ஒரு முறையாவது போய்வர வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பின்னே ஓவியத்தின்பால் கொஞ்சம் ஆர்வம் வைத்திருக்கிற நான், அதுவும் சென்னையிலேயே இருந்துகொண்டு இதைப் பண்ணாமலிருந்தால் எப்படி?

போன வாரம் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆபிஸில் திடீரென கரெண்ட் கட்டாகி சும்மா உட்கார்ந்திருந்த நேரத்தில் போகலாமா என்று பாஸ் கூப்பிட்டார். ஆனால் சும்மா அல்ல. சந்தோஷ் என்கிற ஒரு நண்பன் கவின்கலைக் கல்லூரி வளாகத்திற்குள் வைத்திருந்த புகைப்படக் கண்காட்சியை பார்ப்பதற்கு.

நான் முன்பே எதிர்பார்த்திருந்த மாதிரி இல்லாமல் வேறு விதமான தோற்றத்தோடு இருந்தது கவின் கலைக் கல்லூரி. ஒரு குறுகலான கேட்டைத் தாண்டிப் போனால் அதற்கப்புறம் அதிகம் நடக்கிறதுக்கு வகையில்லாமல் உடனடியாக கட்டிடங்கள் வந்துவிடுகின்றன. சந்தோஷின் புகைப்படக் கண்காட்சி வாசலை ஒட்டின ஒரு ஹாலிலேயே இருந்தது. நல்ல கான்ட்ராஸ்ட்டுடன் கூடிய அழகிய புகைப்பட முயற்சிகள். இன்னும் உழைத்தால் பெரிய அளவில் வர வாய்ப்பு உண்டு.

கல்லூரி வளாகத்தினுள் நிறைய மரங்கள். மரங்கள் உதிர்த்த ஏராளமான சருகுகள். வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாமாங்கம் இருக்கும் என்றாலும் அதுவே அந்த சூழ்நிலைக்கு ஒரு இயற்கை அழகுபோல் பொருந்தியிருக்கிறது. மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே முழுசாகவும், சிதைந்தும் நிறைந்து கிடக்கிற சிலைகள். எல்லாம் மாணவர்களாலோ அல்லது ஆசிரியர்களாலோ உருவாக்கப்பட்டவை. பல கோணங்களில் பல போஸ்களில் ஒரு முதியவர் சிலை ஆங்காங்கே கண்ணில் பட்டது. அந்தப் பெரியவர் அந்த கல்லூரிக்கு மாடலாக வேலை செய்கிறவராம். ரொம்பத் தள்ளாடி பலவீனமாக நடந்துவரும் அந்தப் பெரியவர் ஓய்வு நேரங்களில் எப்போதும் ஏதாவது குறுகிய இடத்திலேயே உடலைச் சுருக்கிக் கொண்டு உட்கார்ந்து டீ குடிப்பாராம். ஆனால் மாடலிங் க்ளாஸ் நடக்கும்போது ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரே கோணத்தில் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம்கூட உட்கார்ந்திருப்பாராம்.

மரத்தடியில் அரட்டையடித்தபடி மாணவர்களில் அதிகம்பேர் பெண்பிள்ளை மாதிரி நடுமுதுகு வரை தலைமுடி வளர்த்தியிருந்தார்கள். சிலபேர் குடுமி அல்லது கூந்தலை நன்றாகச் வாரி ரப்பர் பேண்ட் போட்டிருந்தார்கள். (போனி டெய்ல்?) அதிக பட்ச உடை ஜீன்ஸ் மற்றும் பனியனாக இருந்தது. தாங்கள் கலைஞர்கள் என்றோ மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்படுகிறோம் என்கிற செய்தி அறிவிப்பு அவர்களின் நடை, உடை, பாவனைகளில் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஓவிய நண்பர்கள் ஓரிருவர்கூட அவ்வாறேதான் இருக்கின்றனர். நிறைய தலைமுடியும், மீசையும் தாடியும் எப்போதும் கலையின் அடையாளச் சின்னம் போலும்.

இன்றைக்கு க்ளாஸ் எதுவும் இல்லையா என்று சந்தோஷிடம் கேட்டபோது, இரண்டாம் வருடம் முதல் அப்படியொன்றும் கட்டாயமாய் மாணவர்களை உட்கார வைத்து வகுப்பெடுக்கிற வழக்கம் கிடையாது என்றும், கல்லூரி நேரங்களில் புற உலகிற்குப் போய் தாமாகவே பார்த்தும், கேட்டும் பயிற்சி செய்தும் கற்றுக்கொள்கிற சுதந்திரம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றும் சொன்னான்.

அப்புறம் கொஞ்சமாய் அவர்கள் கவின்கலை உலகின் கூடங்களை ஒரு வலம் வந்தோம். முதலில் சிலைகள் உருவாகிற இடம். மான், மனிதன் என ஏகப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மோல்டுகள். க்ளே மாடலிங் பண்ணுவதற்கு நிறைய களிமண் கொட்டப்பட்டிருந்தது. செய்கிற சிலைகளுக்கு சப்போர்ட்டாக வளைக்கப்பட்ட கம்பிகள் ஆங்காங்கே. குவிந்து கிடக்கிற மோல்டுகள். எல்லாக் கூடங்களும் இயற்கையாய் அதனதன் லட்சண சொரூபத்துடன் பழமை கவிந்து கிடக்கின்றன. நீங்கள் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கும் வில்லன்களின் அல்லது தீவிரவாதிகளின் கொட்டடி போன்ற தோற்றத்துடனேயே எல்லாக் கூடங்களும், அவற்றிற்குப் போகிற வழிகளும் இருந்தன என்றாலும் அப்படி இயல்பாய், இயற்கையாய் இருப்பதே அந்த கலை சார்ந்த இடத்தின் மதிப்பையும் சிருஷ்டிப்புத் தன்மையும் கூட்டுகிற விதமாய்த் தோன்றியது. எத்தனையெத்தனையோ பெரிய கலைஞர்களையும், ஓவியர்களையும் உருவாக்கிய இடமல்லவா அது.

திரும்பிய பக்கமெல்லாம் சுவர்களில் (ஒரு இடம் விடாமல்) ஓவியக் கிறுக்கல்கள். க்ளேஸ், களிமண், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இன்ன பிற பொருட்கள் உபயோகித்து ஆங்காங்கே கூடங்களின் மூலைகளில் சில மாணவர்கள் சின்னச் சின்னதாய் சிலை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு க்ளே மாடலிங் கூடத்திலிருந்து சாவதானமாய் வெளிவந்த நாயைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியபோது, அது நாய் அல்ல எங்களின் மாடல் என்று பதில் வந்தது. உள்ளே மாணவர் ஒருவர் விதவிதமாக ஒரே நாயை பல போஸில் களிமண்ணால் சின்னச் சின்னதாக சிலையாகப் பண்ணிக்கொண்டிருந்தார். படுத்திருக்கிற மாதிரி, தலையை சொறிவது மாதிரி, சோம்பல் முறிப்பது மாதிரி, நின்று முறைப்பது மாதிரி என நிறைய. அந்த நாயை ஐந்து மாதமாக ஸ்டடி செய்து பண்ணினதாம். Every dog has a day என்று இதைத்தான் சொல்கிறார்களா?

நேரமாகிவிட்டது என்பதால் ஓவியக் கூடங்களை இன்னொரு நாள் வந்து பார்க்கலாம் என்று ஆபிஸூக்குத் திரும்பி வந்துவிட்டோம். திரும்பும்போது வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயம் கிடைக்காமல் போனமாதிரி ஒரு இழப்பின் பரிதவிப்பு. இன்னும் அணையாமல் மனதின் ஏதோ ஒரு மூலையில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிற ஓவியத் தாகம்தான் அன்றைய தினம் என்னை அங்கே கொண்டு போயிற்று எனலாம். கதைகளும் நாவல்களும் படிக்க ஆரம்பித்தது மாதிரியே ஓவியம் வரைய ஆரம்பித்ததும் கூட ஆறாங்க்ளாஸில்தான் என்று சொல்லலாம். முதலில் ஒரு மான் வரைந்து கலரடித்தது ஞாபகம் இருக்கிறது. அப்படியே கிறுக்கிக்கொண்டிருந்ததில் சித்திரம் கைப்பழக்கம் ஆகியிருந்ததால் என்ஜினியரிங் படிக்கும்போது ட்ராயிங் க்ளாஸில் வரும் ஆர்தோக்ராஃபிக் ப்ரொஜக்ஷன், ஐஸோமெட்ரிக் ப்ரொஜக்ஷன் எல்லாம் என்னை அத்தனை பயமுறுத்தியிருக்கவில்லை. அரஸ், மணியம் செல்வம் போன்றோரின் ஓவியங்களையெல்லாம் பார்த்து அச்சு அசலாக வரைகிற என் கைத்திறனை மூக்கின் மேல் விரல்வைத்து வியக்கிறவர்களுக்கு அத்தனை ஓவிய ஞானம் இல்லாமலிருந்ததால் தப்பித்தேன். கிடைத்த இடத்திலெல்லாம் தவறாமல் பெண் படம் வரைகிற பழக்கத்தை அப்பாகூட எப்போதும் வன்மையாகக் கண்டித்தவண்ணம் இருந்தார். அப்புறம் எந்த வீட்டுக்குக் குடிபோனாலும் அடுப்புக் கரி கொண்டு சமையலறை சுவரில் தத்ரூபமாய் ஒரு கண் வரைந்து வைப்பேன். (பெண்ணின் கண்தான்). மனதில் இலக்கிய ஆர்வம் கவிந்தபிறகு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கையெழுத்துப் பத்திரிக்கையில் நானே ஆஸ்தான ஓவியன்.

பின்னாளில் அட்வர்டைஸிங் துறைக்கு வந்ததும் அப்புறம் க்ராபிக்ஸ் மல்டிமீடியா என்று தாவினதுக்கும் என் ஓவியப் பயிற்சிகள்(!) நிச்சயம் துணை புரிந்தன எனலாம். இருந்தாலும் முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று மனதின் ஓரத்தில் லேசாய் ஒரு ஆசை இருந்தது. முடியவில்லை. இப்போதெல்லாம் என்றைக்காவது ஒரு நாள் பென்ஸிலையும் பேப்பரையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கிறுக்கினாலே ஜாஸ்தி. அத்தோடு என் ஓவிய தாகம் அணைந்துவிடுகிறது.

வாய்ப்பு அமைந்தால் எனக்கென்று ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு, அறை மத்தியில் (அல்லது மூலையில்) ஓவியம் வரைவதற்கான ஈஸல், பேலட்டுகள், தூரிகைகள், வாட்டர்கலர்கள், ஆயில் பெயிண்டிங் கலர்கள், கொஞ்சம் கேன்வாஸ், லின்ஸீட் ஆயில் இன்னபிறவற்றை கடைபரப்பிக் கொண்டு கொஞ்ச நாள் வாழவேண்டும் என்று என்னிடம் கனவொன்று இருக்கிறது. அங்கே நான் எதுவும் வரையாவிட்டாலும் பரவாயில்லை.

மனிதம் எனப்படுவது யாதெனில்

கருத்த தேகம். குழி விழுந்த இரு கண்கள். தன் போக்கில் காடு போல் அடர்ந்து படர்ந்த தாடி மீசைக்குப் பின்னால் தொலைந்து போன முக அடையாளம். சிக்குப் பிடித்த ஜடை முடி. எங்கேயோ வெறித்த பார்வை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அணிந்த இன்னும் கழற்ற முடியாத கிழிந்து கந்தலான உடை. சிறியதும் பெரியதுமாய் உடம்பு முழுவதும் தொங்கும் அழுக்கப்பிய எண்ணற்ற மூட்டைகள். அதற்குள் பொறுக்கிச் சேகரித்த அழுக்குத் துணிகள் மற்றும் காகிதங்கள். ஒரு பொக்கி்ஷத்தைப் போல அவைகளை தன் உடம்பிலிருந்து இறக்க மறுத்து சுமையோடு அலைகிற கால்கள். புண்கள். புண்களின் அரிப்பை அடக்க வழி தெரியாமல் அதன் மேல் சுற்றிக் கட்டின, குப்பையிலிருந்து பொறுக்கின பாலிதீன் பைகள். புண்களில் நெளியும் புழுக்கள். எச்சில் வழிகிற வாயிலிருந்து சதா மந்திரம் போல திரும்பத் திரும்ப அலைகிற புரியாத வார்த்தைகள். எதையோ தேடிக்கொண்டும், சைகை செய்துகொண்டும் காற்றில் வளைந்து நெளிகிற விரல்கள்.

மன நிலை பிறழ்ந்து சுய நினைவற்று தான் யாரெனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) மேற்சொன்ன மாதிரியான தோற்றத்துடன் தெருக்களில் அலைகிற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு மனதில் சில கேள்விகள் ஓடும். யார் இவர்கள்? ஏன் இப்படி ஆனார்கள்? பிறந்ததிலிருந்தே இப்படியிருக்க வாய்த்துவிட்டதா இவர்களுக்கு? அல்லது நடுவில் ஏதோ ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை இப்படி புரட்டிப் போட்டதா? எங்கே பிறந்து எப்படியெல்லாம் வளர்ந்தார்கள்?

உடுமலையில் வசித்தபோது மணி என்று ஒருவன் எங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். தவறாமல் அவன் தோளிலும் இரு மூட்டைகள். ஒன்றில் உடைந்த, உடையாத அல்லது உடைந்து ஒட்டவைக்கப்பட்டவை என வித விதமாய் ஏராளமான மூக்குக் கண்ணாடிகள். இன்னொரு மூட்டையில் முழுக்கப் முழுக்க ஐந்து பைசா, பத்துப் பைசாவாக சில்லறை நாணயங்கள். சாப்பாடு கொடுத்தால் வாங்கிக் கொள்வான். பாடச் சொன்னால் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, இரு ஆள்காட்டி விரல்களையும் காதுக்குள் சொருகிக் கொண்டு ஆட்டியபடியே "கண்களும் கவி பாடுதே..." என்று தன்னை ஒரு பாகவதராய் உருவகப்படுத்திக்கொண்டு பாடுவான். தினம் ஒரு மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் திரிவான். லூசு என்று எல்லோராலும் விளிக்கப்படுகிற அவன் தெருவிலேயே எங்காவது தூங்குவான். சில நேரம் சிறுவர்கள் அவன் மீது கல் வீசுவதும் உண்டு.

இன்னொருவன் இருந்தான். முதல் பாராவில் சொன்ன தோற்றமுடையவன் அவன். எப்போதும் விரல்கள் மடக்கி மடக்கி சதா கணக்குப்போட்டுக்கொண்டிருப்பான். அல்ஜீப்ரா ஃபார்முலா எதையாவது கேட்டால் தலைகீழாய் ஒப்பிப்பதைப் பார்த்து அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் மிக வியந்திருக்கிறேன். இம்மாதிரி ஆட்களின் தோற்றத்தையும், நடவடிக்கைகளையும், மன நிலையையும் பார்த்து பரிதாபப்பட்டு நாமெல்லாம் உடனே இடத்தை காலிசெய்து விடுகிறோம். அவர்களை அணுகி அவர்களின் பூர்வீகத்தையோ, பிறப்படத்தையோ, கடந்த காலத்தையோ அறிந்து கொள்ள நமக்கு ஒரு நாளாவது தோன்றியிருக்குமா? நமக்கோ ஆயிரம் வேலை. ஆறாயிரம் குடைச்சல்.

இந்த மாதிரி ஆட்களை அழைத்துப் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து, சவரம் செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து, பளிச்சென்று நல்ல உடைகளை உடுக்கச் செய்து கொண்டு வந்து நிறுத்தினால் நிச்சயம் அவர்களது தோற்றம் என்னைப் போலவோ உங்களைப் போலவோதான் இருக்கும். அவர்களுக்குள் அத்தனை நாள் ஒளிந்திருந்த பழைய பொலிவான மனிதன் வெளிப்படும்போது நமக்கு நம்பமுடியாத திகைப்பும், அதிர்ச்சியும் காத்திருக்கும். ஆனால் இதையெல்லாம் யாராவது செய்வார்களா? அத்தனை கருணை உள்ளமெல்லாம் யாருக்கு வாய்த்திருக்கிறது இங்கே? எல்லோரும் விலகிச் செல்கிறபோது நெருங்கி முன்வந்து அதைச் செய்கிறவரை கடவுள் என்று கருதிவிட மாட்டோமா? அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

இருக்கிறார். அவர் பெயர் முகம்மது ரஃபி.

ரஃபி செய்து கொண்டிருக்கிற அரிய காரியம் இப்படிச் சாலையோரமாய் மனநிலை பிறழ்ந்து திரியும் ஜீவன்களை அழைத்துச் சென்று, அன்பு காட்டி அரவணைத்து, உரிய சிகிச்சை அளித்து அவர்களை மீண்டும் மனிதர்களாக்க முயற்சிப்பது. இது போன்றவர்களை வைத்துப் பராமரிக்க போதிய பண வசதி இல்லாத நிலையில் தன் குடும்பத்தாரை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டையே காப்பகமாக்கினவர். இந்தியா பிளாஸ்டிக் என்ற பெயரில் சொந்தமாக தொழில் புரிந்துவரும் ரஃபி அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியிலும், நண்பர்கள் அளிக்கிற நன்கொடைகளின் துணை கொண்டும் வளர்ந்த இந்தக் காப்பகம் பலருக்கு நல்ல வழியைக் காட்டியிருக்கிறது. ரஃபியின் சேவையைக் கண்டு வியந்த ஹிந்து பத்திரிக்கை ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பகம் கட்டுவதற்காக அன்பளிப்பாக அளித்த ஒரு நிலத்தில் நண்பர்களின் தன்னார்வம் மிக்க சிலரோடு சேர்ந்து ஒரு சேவை அமைப்பை ஏற்படுத்தி, நல்ல காப்பகம் ஒன்றை உருவாக்கி அதற்கு 'அன்பகம்' என்று பெயரிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டிருக்கிற அன்பகம் தற்போது 40 பேரை பராமரிக்கக் கூடிய வசதிகளோடு ஒப்பற்ற சேவையை செய்து வருகிறது. இதுவரை இங்கு பராமரிக்கப்பட்டு, சிகிச்சையாய் குணம் பெற்று அவரவர் குடும்பத்தோடு சேர்த்துவைக்கப்பட்ட மன நோயாளிகளின் எண்ணிக்கை 270. தற்போது 35 பேர் அன்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முகம்மது ரஃபியின் சேவையைப் பாராட்டி மீனம்பாக்கம் ரோட்டரி சங்கம் அவருக்கு "For the Sake of Honour Award" என்னும் விருதை வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறது.

முகம்மது ரஃபியின் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குணமடைந்த மனநோயாளிகளின் சிகிச்சைக்கு முன்பும் பின்புமான புகைப்படங்கள் மட்டுமே இப்போதைக்கு காணக் கிடைத்தன. பார்த்தால் வியப்பில் நிச்சயம் நம் கண்கள் விரியும். முன்பு அழுக்குக் குப்பையாய் அவலட்சணமாய் அடையாளமற்றுத் திரிந்து கொண்டிருந்தவர்கள் ரஃபியின் கைபட்டு மறு அவதாரம் எடுத்திருக்கிற புகைப்படங்கள். அந்த புகைப்படங்களிலிருந்து ஒரு சாம்பிள் கீழே கொடுத்திருக்கிறேன்.

யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சேவையாய் செய்துவரும் திரு. முகம்மது ரஃபிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

இதுதான்டா செக்ஸ்!!

தெலுங்கு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஷகிலா நடித்து வெளிவரவிருக்கும் சூடான படுக்கையறைக் காட்சிகள் நிறைந்த "பரங்கி மலை - ஜோதி" வகை திரைப்படம் என்று தலைப்பைப் பார்த்து ஊகித்தவர்கள் மன்னிக்கவும். சமீப நாட்களாய் எங்கு திரும்பினாலும் 'செக்ஸ் கல்வி' என்கிற வார்த்தை காதில் விழுந்து கொண்டிருக்கிறது. "30 வயதுக்கு மேல் குழந்தை பெற்..." என்று குங்குமம் பத்திரிக்கை நீட்டி முழக்கி ஜனங்களை மிரட்டியதை எதிர்த்தோ ஆதரித்தோ ஆங்காங்கே வலைப்பதிவுகள், பத்திரிக்கைச் செய்திகள் தோன்றியதும் அவற்றில் செக்ஸ் கல்வி பற்றி லேசாய் விவாதிக்கப்பட்டதும் இதை எழுத வந்ததற்குக் காரணமாக வைத்துக்கொள்கிறேன். ஏராளமான இளம் பருவத்து வாலிப/வாலிபி அன்பர்கள் செக்ஸ் பற்றின முறையான அறிவு இல்லாததால் தவறான அபிப்பிராயங்களுடன் மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி ஒவ்வொருவருமே எழுதுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

நீட்டி முழக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வரட்டுமா? இந்த செக்ஸ் கல்வியாகப்பட்டது மாணவ மணிகளுக்கு எந்த பருவத்திலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற யோசனையில் மொட்டை மாடியில் நான் சிகரெட் பிடிக்காமலே தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனக்கு உதித்த சில உபாயங்கள், கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நான் எப்படி 'எல்லாம்' கற்றுக் கொண்டேன் என்பதை சந்தடி சாக்கில் சொல்லிவிடுகிறேன். நான் ஞானம் பெறுவதற்கு போதி மரமாக விளங்கியது உடுமலைப் பேட்டையிலுள்ள ஒரு லைப்ரரி. இருங்கள்! எங்கே கிளம்பிவிட்டீர்கள்! இன்றைக்கு லைப்ரரி லீவு! தெரியாதா? அந்த லைப்ரரியினுள் புத்தக அலமாரிச் சந்துக்குள் புகுந்து நடந்தால் அந்தக் கோடியில் ஒருவராலும் சீண்டப்படாத 'மருத்துவம்' என்கிற பகுதி இருந்தது. கிட்டப் போனால் புழுக்கை வாசனை கொஞ்சம் அதிகமாய் அடிக்கிற அந்த அலமாரிதான் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அங்கேயே எடுத்து கூடுமான வரையில் அங்கேயே நின்று படித்து அறிவை விருத்தி செய்து கொண்டேன். அவைகள் வீட்டுக்குக் எடுத்துச் செல்ல முடியாத புத்தகங்களாக இருந்தது சமூக துரதிருஷ்டம். அப்பா முதுகில் அறைவாரோ என்று பயம். அங்கே பெற்ற ஞானம் பிற்பாடு பத்தாம் வகுப்புப் படிக்கும் போது K.அசோக், வள்ளியப்பன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் குறுகுறுப்பான சந்தேகங்களை தெள்ளத் தெளிவாக தீர்த்து வைக்கப் பயன்பட்டது. உடனே என்னை லிட்டில் மாத்ருபூதம் என்று அழைக்கலாமா என்று சிலர் யோசிப்பது எனக்குக் கேட்கிறது. புத்தகத்தில் ஒளித்து வைத்துப் படித்த சரோஜா தேவி புத்தகங்கள், பார்த்த வீடியோப் படங்கள் எனக்குள் நிறைய சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் எப்படியோ பின்னாளில் பார்த்துப் படித்து கற்றுத் தேர்ந்துவிட்டேன் எனச் சொல்லலாம்.

பத்தாம் வகுப்பு என்பது அநேக ஆண்கள் வயதுக்கு வருகிற பருவம். (ஆண்கள் வயதுக்கு வருவது பற்றி மரத்தடியில் நான் எழுதின கவிதை இங்கே). யாருக்கும் வெளியே தெரியாமல் ஆண்களுக்கு ரகசியமாய் நிகழ்ந்து விடுகிற இது நிறைய குழப்பங்களையும், கலவரங்களையும் மனதில் உடனே தோற்றுவித்து விடுகிறது. உதாரணமாக பத்தாம் வகுப்பு நண்பனொருவன் காலையில் அவனது உள்ளாடையில் ஒரு சில உலக வரைபடங்களைப் பார்த்து திடுக்கிட்டு என்னிடம் வந்தான். இந்த மாதிரி ஆரம்ப சந்தேகம் கொண்டவர்கள் அப்புறம் டோண்டு ராகவன் வலைப் பதிவில் போட்டிருக்கிற மாதிரி மாதிரி தப்பு சரிகளை அவர்களாகவே எப்படியாவது முட்டி மோதித் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள்? அவர்களுக்கு சரியான முறையில் எதையும் எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லையோ என்று தோன்றுகிறது. (அல்லது காலம் மாறிவிட்டதா?). என்னுடைய சில பழைய தோழிகளுக்கு ஒரு அக்கறையுள்ள நண்பனாக நான் 'எல்லா' விஷயங்களையும் பொறுமையாய் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலிரவில் என்ன பண்ணுவார்கள் என்று ஓரளவு யூகித்தவர்களாக இருந்தாலும், அதற்கப்புறம் நிகழ்கிற விஷயங்கள் பற்றி கிஞ்சித்தும் ஐடியா இல்லாதவர்களாகத் தான் பெரும்பான்மையான பெண்கள் இருக்கிறார்கள்.

வீரியமின்மையா? ஆண்மைக் குறைவா? கெட்ட சொப்பனங்களா? என்று விளித்து இளைஞர்களை குறி வைத்து பயமுறுத்தும் லாட்ஜ் வைத்தியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் இந்த செக்ஸ் கல்வி விஷயத்தை பொது மக்களிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும். செக்ஸ் கல்வி என்றவுடன் அது எந்த வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? 'மேத்ஸ் டீச்சர்', 'சயன்ஸ் டீச்சர்' மாதிரி 'செக்ஸ் டீச்சர்' என்று ஒருத்தர் இருக்க வேண்டுமா? போன்ற சந்தேகங்கள் எல்லாம் எல்லோரைப் போலவே எனக்கும் வருகின்றன. என் கருத்துக்கள் சிலவற்றை நான் சொல்லி விடுகிறேனே!

எட்டாம் வகுப்பு என்பது இதை ஆரம்பிக்க சரியான காலகட்டம் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட சிறுவர்/சிறுமிகள் வயதுக்கு வருகிற பருவம் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் உடனடி சந்தேகங்களுக்கு தீர்வு. இப்பாடத் திட்டத்தை படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்பு வரை கொண்டு செல்லலாம்.
கல்வித் துறையானது இயற்பியல், உயிரியல் மாதிரி பாலியல் என்று தனிப் பாடத்தையும் வகுப்பு நேரத்தையும் புகுத்துவதுடன் 'உடலுறவு' என்பதை நல்ல வார்த்தையாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆர்வமுள்ள பாலியல் வல்லுநர்களைக் கொண்டு வருடத்திற்கு இருமுறை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு, கண்காட்சி நடத்தலாம். ரொம்ப ஆர்வமாய்க் கற்றுக் கொண்டு இந்தப் பாடத்தில் எல்லோரும் 100க்கு 118 மதிப்பெண்கள் எடுத்துவிட வாய்ப்புண்டு.

"தி கம்ப்ளீட் செக்ஸ் கைட் ஃபார் ஸ்டூடண்ட்ஸ்" அல்லது "மாணவருக்கான முழு பாலியல் கையேடு" என்கிற புத்தகத்தை சுமார் ஆயிரம் பக்கத்துக்கு பாடநூல் கழக வெளியீடாகவோ அல்லது தனியார் பதிப்பக செம்பதிப்பு வெளியீடாகவோ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இதில் வயதுக்கு வருவதிலிருந்து துவங்கி, தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு மற்றும் வளர்ச்சிச் சுழற்சி என்று கவர் பண்ணி மெனோ பாஸ் வரை விளக்கம் அளிப்பதுடன், மானிட உடற்கூற்றின் பாலியல் ரகசியங்கள், உறுப்புகளின் செயல் பாடுகள், விளக்கப்படங்கள், கேள்வி பதில் பகுதிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), பாலியல் நிபுணர்களின் கட்டுரைகள், இது வி்ஷயமாய் பொதுமக்களிடம் எடுக்கப் பட்ட பேட்டிகள், DOs & DON'0Ts, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, கருத்தடை சாதனங்களின் உபயோகங்கள் என்று எல்லாமே அடங்கிய ஒரே புத்தகமாக மாணவர்களுக்காகக் கொண்டு வந்து பள்ளி நிர்வாகம் அந்தப் புத்தகத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். மேலும் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே எடுத்துப் படிக்கிற (வாண்டுகளுக்கு எட்டாத) உயரத்தில் வீட்டில் வைக்கச் சொல்ல வேண்டும். கட்டாயப் பாடம் ஆகிவிட்ட பிறகு பையன்/பொண்ணு கண்ட புத்தகம் படிக்கிறான்/ள் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கும் வழியில்லை. ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால் பையன்கள்/பொண்ணுகள் கண்ட புத்தகங்கள் படிப்பதும் குறைந்துவிடும். மேலும் வயோதிக அன்பர்களுக்கும்கூட இப்புத்தகம் சில நேரம் பயன்படலாம் இல்லையா? யாரும் சொல்லிக் கொடுக்காததை ஒரு நல்ல சரியான புத்தகம் கற்றுக்கொடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் அரசாங்கத்தையும் கல்வித்துறையையும் விட பெற்றோர்களுக்கு இதில் அதிக பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சிறு குழந்தைகள் சில சமயம் தன் பிறப்புறுப்பை வைத்துக்கொண்டு விளையாடும்போது (குறிப்பாக ஆண்குழந்தைகள்) "கய்ய வெச்சுக்குட்டு சும்மார்ரா! டிங் டாங்-ல என்ன வெளையாட்டு ஒனக்கு?" என்று உடனே மிரட்டி அறிவுறுத்துகிற பெற்றோர்கள் பின்னாளில் தம் மக்கட்கு பாலியல் பற்றி குறைந்த பட்ச அறிவையாவது புகட்ட முன் வரவேண்டாமா?

இந்த விஷயத்தில் டாக்டர் மாத்ருபூதம் எப்படி முன்னோடியாகத் திகழ்ந்தாரோ அதே மாதிரி மேலும் சிலரும் தாமாகவே முன்வந்து மீடியாக்கள் மூலம் செக்ஸ் கல்வி போதிக்கலாம். குமுதத்தில் டாக்டர் ஷாலினி எழுதின ஒரு மருத்துவத் தொடர் படித்து நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறந்ததை மறக்க, மறுக்க முடியாது. மேற்சொன்ன விஷயங்களில் எதுவுமே இப்போதைக்கு சாத்தியமில்லையெனில் இன்டர்நெட் கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்தில் கண்ணான மாணவ மணிகள் விழிபிதுங்க பலான சைட்டுகள் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு நெட்டில் இது பற்றி உருப்படியாய் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

படிக்கிற காலத்தில் இளைஞ/இளைஞிகள் செக்ஸ் பற்றிய வீணான கற்பனைகள், தவறான அபிப்பிராயங்கள், அறியாமை, பயங்கள், கவலைகளால் செக்ஸ் ஒரு பாவச் செயல் அல்லது அது அசிங்கம் அல்லது அதுவேதான் வாழ்க்கை என்றெல்லாம் நினைத்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதிருக்க நம்மை மாதிரி 'வளர்ந்தவர்கள்' ஏதோ ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டாமா?

உங்கள் யோசனைகளையும் சொல்லுங்களேன்.

ஐநூறு ரூபாயில் ஒரு அனுபவம்


மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு பேட்டரி. பட்டன் செல் என்றும்கூட இதற்கு புனைபெயர் இருக்கிறது. குவார்ட்ஸ் கைக்கடிகாரம், சிறிய பென் டார்ச், PDA, Organiser போன்ற சாதனங்கள், குழந்தைகளின் சில விளையாட்டுப் பொருட்கள் போன்ற எத்தனையோ சாதனங்களில் உபயோகம் இது ஒரு சட்டைப் பொத்தானைவிட பெரிய அல்லது சிறிய அளவுகளில் கிடைக்கக்கூடியது. இந்த பேட்டரியின் மேற்புறம் நிக்கல் காட்மியம் எனும் உலோகத்தினாலானது. இதன் பாஸிட்டிவ் நெகட்டிவ்வுக்கு மத்தியில் மெஷின் பாக்கிங்கில் அடைபட்டிருக்கிற பொருள் ஸில்வர் ஆக்சைடு அல்லது மெர்க்குரிக் ஆக்ஸைடு அல்லது லித்தியம் இவைகளில் ஏதாவது ஒன்று. கைக்கடிகாரத்தில் போட்டால் ஒரு வருடமும், கணினிக்குள் போட்டால் ஒரு இரண்டு வருடமும் அதன் தரத்திற்கேற்ப உழைக்கிறது.

ஒரு நல்ல பகல் பொழுதில் மதிய உணவுக்கு முன்னர் தன் பொம்மைக் காமராவை சுக்கு நூறாக உடைத்து அதிலிருந்த இந்த பேட்டரியை வாயில் போட்டுக் கொண்டான் என் பையன். அவனுக்கு அது "ஜெம்ஸ்" மிட்டாய் மாதிரி சுவைத்ததா எனத் தெரியவில்லை. அப்படியே முழுங்கிவிட்டு பொறுப்பான மகனாய் அம்மாவிடம் தகவலறிவித்துவிட்டான்.

அதற்கப்புறம்தான் கூத்து. உடனே வீட்டிலிருந்து டெலிபோன். ஆபிஸில் "சொல்யூஷன் ஆர்க்கிடெக்ச்சர்" வரைந்து கொண்டிந்தவன் அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு புரவியேறி கடுகி விரைந்தேன் வீட்டுக்கு. (உடனே புருவம் உயர்த்தாதீர்கள்). நான் திட்டுவேன் என்று பயந்து போய் நின்றிருந்தவனிடம் அவன் முழுங்கிய பொருள் மேற்படி பேட்டரிதானா என்று ஒரு புலன் விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு அருகாமையிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு மறுபடி கடுகி விரைந்தோம். அவன் பேட்டரியை விழுங்கின கையோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து சமையலுக்கு வைத்திருந்த பச்சை பீன்ஸ் விதைகளை வேறு ஒரு கைப்பிடி தின்றிருந்தான். அவன் என்னவோ ரொம்ப உற்சாகமாய்த்தான் இருந்தான் என்றாலும் அம்மா சொன்ன 'டாக்டரங்கிள் உன் வயித்த கீச் கீச்னு அறுத்து பேட்டரிய எடுக்கப்போறாங்க பாரு' -என்பதில் அவன் கொஞ்சம் பயந்திருந்தான்.

கேசுவாலிட்டி பிரிவில் நோயாளிகள் அதிரும் வண்ணம் "டேய் மச்சி.. நீ மெட்ராஸிலேயா இருக்க. எப்படா வந்த?" என்று கத்திக் கத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்தான் டாக்டர் என்று சத்தியமாய் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வயசுப் பையன். வயது 25 இருக்கலாம். தயக்கத்துடன் பேட்டரி வி்ஷயத்தைச் சொன்னவுடன் எழுந்து நின்று யோசனையாய் மோவாக்கட்டையை சொறிந்து போஸ் கொடுத்தார். நான் நம்பிக்கையில்லாமல் மனைவியையும் பையனையும் பார்த்தேன். மறுநிமிடம் நான் நினைத்த மாதிரியே "எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம்" என்றார் முகத்தில் பல்ப் எரிய.

பதினைந்து நிமிடத்தில் எக்ஸ்ரே தயாரானது. அதை வெளிச்சத்தில் உயரத் தூக்கிப் பார்த்தபோது பேட்டரியானது பையன் வயிற்றுப் பகுதியில் எலும்புகள் அரணாய் சூழ்ந்திருக்க, பாதுகாப்பாய் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சின்ன டாக்டரின் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் "எண்டோஸ்கோபி பண்ணி எடுத்துறலாம்" என்று குத்து மதிப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது. "மோஸ்ட்லி மோஷன்ல வந்துரும். 'எதுக்கும்' பெரிய டாக்டரை கன்ஸல்ட் பண்ணிக்கோங்க." என்று தன் முடிவைத் தெரிவித்தார் சின்னப் பையன் டாக்டர்.

நிறைய காத்திருந்து பெரிய டாக்டரைப் பார்த்தோம். அவரும் எக்ஸ்ரேவை ஒரே ஒரு செகண்ட் பார்த்துவிட்டு "முழுங்கின அஞ்சு ரூபா காயினே கக்கா போனா வந்துருது. இது நிச்சயம் வந்துரும். கவலப்படாதீங்க. இங்க குழந்தைகளுக்கான எண்டோஸ்கோபி இன்ட்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. நீங்க 'எதுக்கும்' அடையாறில இந்த டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க" என்று அட்ரஸ் தந்தார். இந்த 'எதுக்கும்' என்கிற வார்த்தை படுத்துகிற பாடு இருக்கிறதே!!! அங்கிருந்து வெளியே வரும்போது ரூ. 252 செலவாகியிருந்தது.

அடையாரில் அந்த லேடி டாக்டரைத் தேடிப் போனபோதும் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருந்த நேரத்தில் 'எதுக்குடா பேட்டரிய முழுங்கின?' என்று கோபமாய் விசாரித்தபோது "பவர் வர்ரதுக்குதான்' என்றான் மகன் அமைதியாய். வருகிற நோயாளிகளையும், க்ளீனிக் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்கிற மூன்று பெண்களில் ஒன்று வாயை மூடாமல் 'லொக் லொக்' என்று நோயாளி மாதிரி இருமிக் கொண்டிருந்தது. இன்னொன்று "என்னடி இந்த மாத்திரை நல்லாவேயில்ல. கரையவே மாட்டேங்குது" என்று வாயைத் திறந்து இன்னொருத்திக்குக் காட்டியதிலிருந்து அதுக்கும் என்னவோ பிரச்சனையென்று புரிந்தது. டாக்டர் வந்துவிட்ட பிறகும்கூட கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு டேபிளில் ஒய்யாரமாய் குங்குமம் இதழை பிரித்து வைத்துக்கொண்டு "ஏய் பாத்தியாடி.. நம்மாளு 'ஜெயம்' ரவிக்கு மேஷ ராசின்னு போட்ருக்கான்." என்று கெக்கே பிக்கேயென்று சிரித்துவைத்து "நம்ம டாக்டர் ராசியும் அதானே.." என்றது. டாக்டர் எந்த ராசியானாலும் பிரச்சனையில்லை. கைராசியாய் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்தது. லேடி டாக்டரும் அதே மாதிரி எக்ஸ்ரேவை ஒரு செகண்ட் தூக்கிப் பார்த்துவிட்டு, "இது குழந்தை கக்கா போகும்போது வந்துரும். வாளப்பளம் வாங்கிக் குடுங்க. அப்படி வரலைன்னா அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்ப அநாவசியமா கைவெச்சா நாலாயிர்ரூவா ஆகும்" என்றார். வெளியே வந்தபோது கன்ஸல்டேஷன் 250 ரூபாய் என்றாள் 'ஜெயம்' ரவி ரசிகை. ஆக இதுவரை மொத்தமாய் ஐநூறை முழுங்கிவிட்டது இந்த விஷயம்.

'வாளப்பளம்' வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அக்கம் பக்கத்தாரின் விசாரிப்புக்கெல்லாம் ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு (பேட்டரி என்று சொன்னவுடன் பெரிய டார்ச்சுக்குப் போடுகிற பெரிய எவரெடி பேட்டரி என்று நினைத்துக்கொள்கிறார்கள் பாவம்!) கவலையுடன் தூங்கப் போய்விட்டோம். எல்லாருடனும் பேசியதில் இந்த ழுழுங்குகிற கலாச்சாரம் குழந்தைகளுக்கு புதிதல்ல என்றும் எல்லாக் குழந்தைகளுமே அவரவர் விருப்பத்திற்கேற்ப புளியங்கொட்டை, தேங்காய் மூடி (சிரட்டைத் துண்டு), ஸேஃப்டி பின், போல்ட் அல்லது நட், நாணயங்கள், க்ரையான் துண்டு என்று இப்படி எதையாவது முழுங்கித் தொலைத்த வீர வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது.

பிறகென்ன? மறுநாள் பையன் கக்கா வருவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினோம். அது வருவதற்கான எந்த அறிகுறியும் பையன் முகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியாத அவஸ்தையுடன் பொழுது ஓடியது. அவன் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாய் விளையாண்டு கொண்டிருந்தான். எனக்கோ பேட்டரிக்கு உள்ளேயிருக்கிற ரசாயனப் பொருட்கள் குறித்த கவலை. ஏதாவது லீக் ஆகி எதையாவது பாதிக்குமா என்று. இதே நினைப்புடன் ஆபிஸூக்கு லேட்டாக போய் சொல்யூ்ஷன் ஆர்க்கிடெக்ச்சரை மறுபடி பிராண்ட ஆரம்பித்தபோது செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. காதில் வைத்ததும் பையன் குரல் கேட்டது.

"வந்திரிச்சு! பேட்டரி வந்திரிச்சு!"

உங்களுக்கு முந்தா நேத்து பக்கத்தில் ஏதோ சுழல்காற்று அடித்த மாதிரி சப்தம் கேட்டதா? அது ஒன்றுமில்லை. நான் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான்.