மனிதம் எனப்படுவது யாதெனில்

கருத்த தேகம். குழி விழுந்த இரு கண்கள். தன் போக்கில் காடு போல் அடர்ந்து படர்ந்த தாடி மீசைக்குப் பின்னால் தொலைந்து போன முக அடையாளம். சிக்குப் பிடித்த ஜடை முடி. எங்கேயோ வெறித்த பார்வை. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அணிந்த இன்னும் கழற்ற முடியாத கிழிந்து கந்தலான உடை. சிறியதும் பெரியதுமாய் உடம்பு முழுவதும் தொங்கும் அழுக்கப்பிய எண்ணற்ற மூட்டைகள். அதற்குள் பொறுக்கிச் சேகரித்த அழுக்குத் துணிகள் மற்றும் காகிதங்கள். ஒரு பொக்கி்ஷத்தைப் போல அவைகளை தன் உடம்பிலிருந்து இறக்க மறுத்து சுமையோடு அலைகிற கால்கள். புண்கள். புண்களின் அரிப்பை அடக்க வழி தெரியாமல் அதன் மேல் சுற்றிக் கட்டின, குப்பையிலிருந்து பொறுக்கின பாலிதீன் பைகள். புண்களில் நெளியும் புழுக்கள். எச்சில் வழிகிற வாயிலிருந்து சதா மந்திரம் போல திரும்பத் திரும்ப அலைகிற புரியாத வார்த்தைகள். எதையோ தேடிக்கொண்டும், சைகை செய்துகொண்டும் காற்றில் வளைந்து நெளிகிற விரல்கள்.

மன நிலை பிறழ்ந்து சுய நினைவற்று தான் யாரெனத் தெரியாமல் (அல்லது தெரிந்து) மேற்சொன்ன மாதிரியான தோற்றத்துடன் தெருக்களில் அலைகிற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு மனதில் சில கேள்விகள் ஓடும். யார் இவர்கள்? ஏன் இப்படி ஆனார்கள்? பிறந்ததிலிருந்தே இப்படியிருக்க வாய்த்துவிட்டதா இவர்களுக்கு? அல்லது நடுவில் ஏதோ ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை இப்படி புரட்டிப் போட்டதா? எங்கே பிறந்து எப்படியெல்லாம் வளர்ந்தார்கள்?

உடுமலையில் வசித்தபோது மணி என்று ஒருவன் எங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். தவறாமல் அவன் தோளிலும் இரு மூட்டைகள். ஒன்றில் உடைந்த, உடையாத அல்லது உடைந்து ஒட்டவைக்கப்பட்டவை என வித விதமாய் ஏராளமான மூக்குக் கண்ணாடிகள். இன்னொரு மூட்டையில் முழுக்கப் முழுக்க ஐந்து பைசா, பத்துப் பைசாவாக சில்லறை நாணயங்கள். சாப்பாடு கொடுத்தால் வாங்கிக் கொள்வான். பாடச் சொன்னால் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, இரு ஆள்காட்டி விரல்களையும் காதுக்குள் சொருகிக் கொண்டு ஆட்டியபடியே "கண்களும் கவி பாடுதே..." என்று தன்னை ஒரு பாகவதராய் உருவகப்படுத்திக்கொண்டு பாடுவான். தினம் ஒரு மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் திரிவான். லூசு என்று எல்லோராலும் விளிக்கப்படுகிற அவன் தெருவிலேயே எங்காவது தூங்குவான். சில நேரம் சிறுவர்கள் அவன் மீது கல் வீசுவதும் உண்டு.

இன்னொருவன் இருந்தான். முதல் பாராவில் சொன்ன தோற்றமுடையவன் அவன். எப்போதும் விரல்கள் மடக்கி மடக்கி சதா கணக்குப்போட்டுக்கொண்டிருப்பான். அல்ஜீப்ரா ஃபார்முலா எதையாவது கேட்டால் தலைகீழாய் ஒப்பிப்பதைப் பார்த்து அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான் மிக வியந்திருக்கிறேன். இம்மாதிரி ஆட்களின் தோற்றத்தையும், நடவடிக்கைகளையும், மன நிலையையும் பார்த்து பரிதாபப்பட்டு நாமெல்லாம் உடனே இடத்தை காலிசெய்து விடுகிறோம். அவர்களை அணுகி அவர்களின் பூர்வீகத்தையோ, பிறப்படத்தையோ, கடந்த காலத்தையோ அறிந்து கொள்ள நமக்கு ஒரு நாளாவது தோன்றியிருக்குமா? நமக்கோ ஆயிரம் வேலை. ஆறாயிரம் குடைச்சல்.

இந்த மாதிரி ஆட்களை அழைத்துப் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து, சவரம் செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து, பளிச்சென்று நல்ல உடைகளை உடுக்கச் செய்து கொண்டு வந்து நிறுத்தினால் நிச்சயம் அவர்களது தோற்றம் என்னைப் போலவோ உங்களைப் போலவோதான் இருக்கும். அவர்களுக்குள் அத்தனை நாள் ஒளிந்திருந்த பழைய பொலிவான மனிதன் வெளிப்படும்போது நமக்கு நம்பமுடியாத திகைப்பும், அதிர்ச்சியும் காத்திருக்கும். ஆனால் இதையெல்லாம் யாராவது செய்வார்களா? அத்தனை கருணை உள்ளமெல்லாம் யாருக்கு வாய்த்திருக்கிறது இங்கே? எல்லோரும் விலகிச் செல்கிறபோது நெருங்கி முன்வந்து அதைச் செய்கிறவரை கடவுள் என்று கருதிவிட மாட்டோமா? அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

இருக்கிறார். அவர் பெயர் முகம்மது ரஃபி.

ரஃபி செய்து கொண்டிருக்கிற அரிய காரியம் இப்படிச் சாலையோரமாய் மனநிலை பிறழ்ந்து திரியும் ஜீவன்களை அழைத்துச் சென்று, அன்பு காட்டி அரவணைத்து, உரிய சிகிச்சை அளித்து அவர்களை மீண்டும் மனிதர்களாக்க முயற்சிப்பது. இது போன்றவர்களை வைத்துப் பராமரிக்க போதிய பண வசதி இல்லாத நிலையில் தன் குடும்பத்தாரை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டையே காப்பகமாக்கினவர். இந்தியா பிளாஸ்டிக் என்ற பெயரில் சொந்தமாக தொழில் புரிந்துவரும் ரஃபி அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியிலும், நண்பர்கள் அளிக்கிற நன்கொடைகளின் துணை கொண்டும் வளர்ந்த இந்தக் காப்பகம் பலருக்கு நல்ல வழியைக் காட்டியிருக்கிறது. ரஃபியின் சேவையைக் கண்டு வியந்த ஹிந்து பத்திரிக்கை ஒரு ஆம்புலன்ஸ் வண்டியை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. மேலும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் காப்பகம் கட்டுவதற்காக அன்பளிப்பாக அளித்த ஒரு நிலத்தில் நண்பர்களின் தன்னார்வம் மிக்க சிலரோடு சேர்ந்து ஒரு சேவை அமைப்பை ஏற்படுத்தி, நல்ல காப்பகம் ஒன்றை உருவாக்கி அதற்கு 'அன்பகம்' என்று பெயரிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டிருக்கிற அன்பகம் தற்போது 40 பேரை பராமரிக்கக் கூடிய வசதிகளோடு ஒப்பற்ற சேவையை செய்து வருகிறது. இதுவரை இங்கு பராமரிக்கப்பட்டு, சிகிச்சையாய் குணம் பெற்று அவரவர் குடும்பத்தோடு சேர்த்துவைக்கப்பட்ட மன நோயாளிகளின் எண்ணிக்கை 270. தற்போது 35 பேர் அன்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முகம்மது ரஃபியின் சேவையைப் பாராட்டி மீனம்பாக்கம் ரோட்டரி சங்கம் அவருக்கு "For the Sake of Honour Award" என்னும் விருதை வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறது.

முகம்மது ரஃபியின் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குணமடைந்த மனநோயாளிகளின் சிகிச்சைக்கு முன்பும் பின்புமான புகைப்படங்கள் மட்டுமே இப்போதைக்கு காணக் கிடைத்தன. பார்த்தால் வியப்பில் நிச்சயம் நம் கண்கள் விரியும். முன்பு அழுக்குக் குப்பையாய் அவலட்சணமாய் அடையாளமற்றுத் திரிந்து கொண்டிருந்தவர்கள் ரஃபியின் கைபட்டு மறு அவதாரம் எடுத்திருக்கிற புகைப்படங்கள். அந்த புகைப்படங்களிலிருந்து ஒரு சாம்பிள் கீழே கொடுத்திருக்கிறேன்.

யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சேவையாய் செய்துவரும் திரு. முகம்மது ரஃபிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

இதுதான்டா செக்ஸ்!!

தெலுங்கு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ஷகிலா நடித்து வெளிவரவிருக்கும் சூடான படுக்கையறைக் காட்சிகள் நிறைந்த "பரங்கி மலை - ஜோதி" வகை திரைப்படம் என்று தலைப்பைப் பார்த்து ஊகித்தவர்கள் மன்னிக்கவும். சமீப நாட்களாய் எங்கு திரும்பினாலும் 'செக்ஸ் கல்வி' என்கிற வார்த்தை காதில் விழுந்து கொண்டிருக்கிறது. "30 வயதுக்கு மேல் குழந்தை பெற்..." என்று குங்குமம் பத்திரிக்கை நீட்டி முழக்கி ஜனங்களை மிரட்டியதை எதிர்த்தோ ஆதரித்தோ ஆங்காங்கே வலைப்பதிவுகள், பத்திரிக்கைச் செய்திகள் தோன்றியதும் அவற்றில் செக்ஸ் கல்வி பற்றி லேசாய் விவாதிக்கப்பட்டதும் இதை எழுத வந்ததற்குக் காரணமாக வைத்துக்கொள்கிறேன். ஏராளமான இளம் பருவத்து வாலிப/வாலிபி அன்பர்கள் செக்ஸ் பற்றின முறையான அறிவு இல்லாததால் தவறான அபிப்பிராயங்களுடன் மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி ஒவ்வொருவருமே எழுதுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

நீட்டி முழக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வரட்டுமா? இந்த செக்ஸ் கல்வியாகப்பட்டது மாணவ மணிகளுக்கு எந்த பருவத்திலிருந்து எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற யோசனையில் மொட்டை மாடியில் நான் சிகரெட் பிடிக்காமலே தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது எனக்கு உதித்த சில உபாயங்கள், கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

நான் எப்படி 'எல்லாம்' கற்றுக் கொண்டேன் என்பதை சந்தடி சாக்கில் சொல்லிவிடுகிறேன். நான் ஞானம் பெறுவதற்கு போதி மரமாக விளங்கியது உடுமலைப் பேட்டையிலுள்ள ஒரு லைப்ரரி. இருங்கள்! எங்கே கிளம்பிவிட்டீர்கள்! இன்றைக்கு லைப்ரரி லீவு! தெரியாதா? அந்த லைப்ரரியினுள் புத்தக அலமாரிச் சந்துக்குள் புகுந்து நடந்தால் அந்தக் கோடியில் ஒருவராலும் சீண்டப்படாத 'மருத்துவம்' என்கிற பகுதி இருந்தது. கிட்டப் போனால் புழுக்கை வாசனை கொஞ்சம் அதிகமாய் அடிக்கிற அந்த அலமாரிதான் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அங்கேயே எடுத்து கூடுமான வரையில் அங்கேயே நின்று படித்து அறிவை விருத்தி செய்து கொண்டேன். அவைகள் வீட்டுக்குக் எடுத்துச் செல்ல முடியாத புத்தகங்களாக இருந்தது சமூக துரதிருஷ்டம். அப்பா முதுகில் அறைவாரோ என்று பயம். அங்கே பெற்ற ஞானம் பிற்பாடு பத்தாம் வகுப்புப் படிக்கும் போது K.அசோக், வள்ளியப்பன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் குறுகுறுப்பான சந்தேகங்களை தெள்ளத் தெளிவாக தீர்த்து வைக்கப் பயன்பட்டது. உடனே என்னை லிட்டில் மாத்ருபூதம் என்று அழைக்கலாமா என்று சிலர் யோசிப்பது எனக்குக் கேட்கிறது. புத்தகத்தில் ஒளித்து வைத்துப் படித்த சரோஜா தேவி புத்தகங்கள், பார்த்த வீடியோப் படங்கள் எனக்குள் நிறைய சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் எப்படியோ பின்னாளில் பார்த்துப் படித்து கற்றுத் தேர்ந்துவிட்டேன் எனச் சொல்லலாம்.

பத்தாம் வகுப்பு என்பது அநேக ஆண்கள் வயதுக்கு வருகிற பருவம். (ஆண்கள் வயதுக்கு வருவது பற்றி மரத்தடியில் நான் எழுதின கவிதை இங்கே). யாருக்கும் வெளியே தெரியாமல் ஆண்களுக்கு ரகசியமாய் நிகழ்ந்து விடுகிற இது நிறைய குழப்பங்களையும், கலவரங்களையும் மனதில் உடனே தோற்றுவித்து விடுகிறது. உதாரணமாக பத்தாம் வகுப்பு நண்பனொருவன் காலையில் அவனது உள்ளாடையில் ஒரு சில உலக வரைபடங்களைப் பார்த்து திடுக்கிட்டு என்னிடம் வந்தான். இந்த மாதிரி ஆரம்ப சந்தேகம் கொண்டவர்கள் அப்புறம் டோண்டு ராகவன் வலைப் பதிவில் போட்டிருக்கிற மாதிரி மாதிரி தப்பு சரிகளை அவர்களாகவே எப்படியாவது முட்டி மோதித் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள்? அவர்களுக்கு சரியான முறையில் எதையும் எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லையோ என்று தோன்றுகிறது. (அல்லது காலம் மாறிவிட்டதா?). என்னுடைய சில பழைய தோழிகளுக்கு ஒரு அக்கறையுள்ள நண்பனாக நான் 'எல்லா' விஷயங்களையும் பொறுமையாய் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலிரவில் என்ன பண்ணுவார்கள் என்று ஓரளவு யூகித்தவர்களாக இருந்தாலும், அதற்கப்புறம் நிகழ்கிற விஷயங்கள் பற்றி கிஞ்சித்தும் ஐடியா இல்லாதவர்களாகத் தான் பெரும்பான்மையான பெண்கள் இருக்கிறார்கள்.

வீரியமின்மையா? ஆண்மைக் குறைவா? கெட்ட சொப்பனங்களா? என்று விளித்து இளைஞர்களை குறி வைத்து பயமுறுத்தும் லாட்ஜ் வைத்தியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் இந்த செக்ஸ் கல்வி விஷயத்தை பொது மக்களிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் தீவிரமாய் சிந்திக்க வேண்டும். செக்ஸ் கல்வி என்றவுடன் அது எந்த வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? 'மேத்ஸ் டீச்சர்', 'சயன்ஸ் டீச்சர்' மாதிரி 'செக்ஸ் டீச்சர்' என்று ஒருத்தர் இருக்க வேண்டுமா? போன்ற சந்தேகங்கள் எல்லாம் எல்லோரைப் போலவே எனக்கும் வருகின்றன. என் கருத்துக்கள் சிலவற்றை நான் சொல்லி விடுகிறேனே!

எட்டாம் வகுப்பு என்பது இதை ஆரம்பிக்க சரியான காலகட்டம் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட சிறுவர்/சிறுமிகள் வயதுக்கு வருகிற பருவம் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் உடனடி சந்தேகங்களுக்கு தீர்வு. இப்பாடத் திட்டத்தை படிப்படியாக பன்னிரண்டாம் வகுப்பு வரை கொண்டு செல்லலாம்.
கல்வித் துறையானது இயற்பியல், உயிரியல் மாதிரி பாலியல் என்று தனிப் பாடத்தையும் வகுப்பு நேரத்தையும் புகுத்துவதுடன் 'உடலுறவு' என்பதை நல்ல வார்த்தையாக மாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆர்வமுள்ள பாலியல் வல்லுநர்களைக் கொண்டு வருடத்திற்கு இருமுறை மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு, கண்காட்சி நடத்தலாம். ரொம்ப ஆர்வமாய்க் கற்றுக் கொண்டு இந்தப் பாடத்தில் எல்லோரும் 100க்கு 118 மதிப்பெண்கள் எடுத்துவிட வாய்ப்புண்டு.

"தி கம்ப்ளீட் செக்ஸ் கைட் ஃபார் ஸ்டூடண்ட்ஸ்" அல்லது "மாணவருக்கான முழு பாலியல் கையேடு" என்கிற புத்தகத்தை சுமார் ஆயிரம் பக்கத்துக்கு பாடநூல் கழக வெளியீடாகவோ அல்லது தனியார் பதிப்பக செம்பதிப்பு வெளியீடாகவோ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இதில் வயதுக்கு வருவதிலிருந்து துவங்கி, தாம்பத்ய உறவு, குழந்தைப் பிறப்பு மற்றும் வளர்ச்சிச் சுழற்சி என்று கவர் பண்ணி மெனோ பாஸ் வரை விளக்கம் அளிப்பதுடன், மானிட உடற்கூற்றின் பாலியல் ரகசியங்கள், உறுப்புகளின் செயல் பாடுகள், விளக்கப்படங்கள், கேள்வி பதில் பகுதிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), பாலியல் நிபுணர்களின் கட்டுரைகள், இது வி்ஷயமாய் பொதுமக்களிடம் எடுக்கப் பட்ட பேட்டிகள், DOs & DON'0Ts, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வு, கருத்தடை சாதனங்களின் உபயோகங்கள் என்று எல்லாமே அடங்கிய ஒரே புத்தகமாக மாணவர்களுக்காகக் கொண்டு வந்து பள்ளி நிர்வாகம் அந்தப் புத்தகத்தை மாணவர்களின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். மேலும் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே எடுத்துப் படிக்கிற (வாண்டுகளுக்கு எட்டாத) உயரத்தில் வீட்டில் வைக்கச் சொல்ல வேண்டும். கட்டாயப் பாடம் ஆகிவிட்ட பிறகு பையன்/பொண்ணு கண்ட புத்தகம் படிக்கிறான்/ள் என்று பெற்றோர்கள் நினைப்பதற்கும் வழியில்லை. ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால் பையன்கள்/பொண்ணுகள் கண்ட புத்தகங்கள் படிப்பதும் குறைந்துவிடும். மேலும் வயோதிக அன்பர்களுக்கும்கூட இப்புத்தகம் சில நேரம் பயன்படலாம் இல்லையா? யாரும் சொல்லிக் கொடுக்காததை ஒரு நல்ல சரியான புத்தகம் கற்றுக்கொடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் அரசாங்கத்தையும் கல்வித்துறையையும் விட பெற்றோர்களுக்கு இதில் அதிக பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சிறு குழந்தைகள் சில சமயம் தன் பிறப்புறுப்பை வைத்துக்கொண்டு விளையாடும்போது (குறிப்பாக ஆண்குழந்தைகள்) "கய்ய வெச்சுக்குட்டு சும்மார்ரா! டிங் டாங்-ல என்ன வெளையாட்டு ஒனக்கு?" என்று உடனே மிரட்டி அறிவுறுத்துகிற பெற்றோர்கள் பின்னாளில் தம் மக்கட்கு பாலியல் பற்றி குறைந்த பட்ச அறிவையாவது புகட்ட முன் வரவேண்டாமா?

இந்த விஷயத்தில் டாக்டர் மாத்ருபூதம் எப்படி முன்னோடியாகத் திகழ்ந்தாரோ அதே மாதிரி மேலும் சிலரும் தாமாகவே முன்வந்து மீடியாக்கள் மூலம் செக்ஸ் கல்வி போதிக்கலாம். குமுதத்தில் டாக்டர் ஷாலினி எழுதின ஒரு மருத்துவத் தொடர் படித்து நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறந்ததை மறக்க, மறுக்க முடியாது. மேற்சொன்ன விஷயங்களில் எதுவுமே இப்போதைக்கு சாத்தியமில்லையெனில் இன்டர்நெட் கோலோச்சுகிற இந்தக் காலகட்டத்தில் கண்ணான மாணவ மணிகள் விழிபிதுங்க பலான சைட்டுகள் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு நெட்டில் இது பற்றி உருப்படியாய் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

படிக்கிற காலத்தில் இளைஞ/இளைஞிகள் செக்ஸ் பற்றிய வீணான கற்பனைகள், தவறான அபிப்பிராயங்கள், அறியாமை, பயங்கள், கவலைகளால் செக்ஸ் ஒரு பாவச் செயல் அல்லது அது அசிங்கம் அல்லது அதுவேதான் வாழ்க்கை என்றெல்லாம் நினைத்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதிருக்க நம்மை மாதிரி 'வளர்ந்தவர்கள்' ஏதோ ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டாமா?

உங்கள் யோசனைகளையும் சொல்லுங்களேன்.

ஐநூறு ரூபாயில் ஒரு அனுபவம்


மேற்கண்ட படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு பேட்டரி. பட்டன் செல் என்றும்கூட இதற்கு புனைபெயர் இருக்கிறது. குவார்ட்ஸ் கைக்கடிகாரம், சிறிய பென் டார்ச், PDA, Organiser போன்ற சாதனங்கள், குழந்தைகளின் சில விளையாட்டுப் பொருட்கள் போன்ற எத்தனையோ சாதனங்களில் உபயோகம் இது ஒரு சட்டைப் பொத்தானைவிட பெரிய அல்லது சிறிய அளவுகளில் கிடைக்கக்கூடியது. இந்த பேட்டரியின் மேற்புறம் நிக்கல் காட்மியம் எனும் உலோகத்தினாலானது. இதன் பாஸிட்டிவ் நெகட்டிவ்வுக்கு மத்தியில் மெஷின் பாக்கிங்கில் அடைபட்டிருக்கிற பொருள் ஸில்வர் ஆக்சைடு அல்லது மெர்க்குரிக் ஆக்ஸைடு அல்லது லித்தியம் இவைகளில் ஏதாவது ஒன்று. கைக்கடிகாரத்தில் போட்டால் ஒரு வருடமும், கணினிக்குள் போட்டால் ஒரு இரண்டு வருடமும் அதன் தரத்திற்கேற்ப உழைக்கிறது.

ஒரு நல்ல பகல் பொழுதில் மதிய உணவுக்கு முன்னர் தன் பொம்மைக் காமராவை சுக்கு நூறாக உடைத்து அதிலிருந்த இந்த பேட்டரியை வாயில் போட்டுக் கொண்டான் என் பையன். அவனுக்கு அது "ஜெம்ஸ்" மிட்டாய் மாதிரி சுவைத்ததா எனத் தெரியவில்லை. அப்படியே முழுங்கிவிட்டு பொறுப்பான மகனாய் அம்மாவிடம் தகவலறிவித்துவிட்டான்.

அதற்கப்புறம்தான் கூத்து. உடனே வீட்டிலிருந்து டெலிபோன். ஆபிஸில் "சொல்யூஷன் ஆர்க்கிடெக்ச்சர்" வரைந்து கொண்டிந்தவன் அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு புரவியேறி கடுகி விரைந்தேன் வீட்டுக்கு. (உடனே புருவம் உயர்த்தாதீர்கள்). நான் திட்டுவேன் என்று பயந்து போய் நின்றிருந்தவனிடம் அவன் முழுங்கிய பொருள் மேற்படி பேட்டரிதானா என்று ஒரு புலன் விசாரணை செய்து உறுதிப்படுத்திவிட்டு அருகாமையிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைக்கு மறுபடி கடுகி விரைந்தோம். அவன் பேட்டரியை விழுங்கின கையோடு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து சமையலுக்கு வைத்திருந்த பச்சை பீன்ஸ் விதைகளை வேறு ஒரு கைப்பிடி தின்றிருந்தான். அவன் என்னவோ ரொம்ப உற்சாகமாய்த்தான் இருந்தான் என்றாலும் அம்மா சொன்ன 'டாக்டரங்கிள் உன் வயித்த கீச் கீச்னு அறுத்து பேட்டரிய எடுக்கப்போறாங்க பாரு' -என்பதில் அவன் கொஞ்சம் பயந்திருந்தான்.

கேசுவாலிட்டி பிரிவில் நோயாளிகள் அதிரும் வண்ணம் "டேய் மச்சி.. நீ மெட்ராஸிலேயா இருக்க. எப்படா வந்த?" என்று கத்திக் கத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தவர்தான் டாக்டர் என்று சத்தியமாய் நம்ப முடியவில்லை. ஒரு சின்ன வயசுப் பையன். வயது 25 இருக்கலாம். தயக்கத்துடன் பேட்டரி வி்ஷயத்தைச் சொன்னவுடன் எழுந்து நின்று யோசனையாய் மோவாக்கட்டையை சொறிந்து போஸ் கொடுத்தார். நான் நம்பிக்கையில்லாமல் மனைவியையும் பையனையும் பார்த்தேன். மறுநிமிடம் நான் நினைத்த மாதிரியே "எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம்" என்றார் முகத்தில் பல்ப் எரிய.

பதினைந்து நிமிடத்தில் எக்ஸ்ரே தயாரானது. அதை வெளிச்சத்தில் உயரத் தூக்கிப் பார்த்தபோது பேட்டரியானது பையன் வயிற்றுப் பகுதியில் எலும்புகள் அரணாய் சூழ்ந்திருக்க, பாதுகாப்பாய் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சின்ன டாக்டரின் பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் "எண்டோஸ்கோபி பண்ணி எடுத்துறலாம்" என்று குத்து மதிப்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது. "மோஸ்ட்லி மோஷன்ல வந்துரும். 'எதுக்கும்' பெரிய டாக்டரை கன்ஸல்ட் பண்ணிக்கோங்க." என்று தன் முடிவைத் தெரிவித்தார் சின்னப் பையன் டாக்டர்.

நிறைய காத்திருந்து பெரிய டாக்டரைப் பார்த்தோம். அவரும் எக்ஸ்ரேவை ஒரே ஒரு செகண்ட் பார்த்துவிட்டு "முழுங்கின அஞ்சு ரூபா காயினே கக்கா போனா வந்துருது. இது நிச்சயம் வந்துரும். கவலப்படாதீங்க. இங்க குழந்தைகளுக்கான எண்டோஸ்கோபி இன்ட்ஸ்ருமெண்ட்ஸ் எல்லாம் இல்ல. நீங்க 'எதுக்கும்' அடையாறில இந்த டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க" என்று அட்ரஸ் தந்தார். இந்த 'எதுக்கும்' என்கிற வார்த்தை படுத்துகிற பாடு இருக்கிறதே!!! அங்கிருந்து வெளியே வரும்போது ரூ. 252 செலவாகியிருந்தது.

அடையாரில் அந்த லேடி டாக்டரைத் தேடிப் போனபோதும் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருந்த நேரத்தில் 'எதுக்குடா பேட்டரிய முழுங்கின?' என்று கோபமாய் விசாரித்தபோது "பவர் வர்ரதுக்குதான்' என்றான் மகன் அமைதியாய். வருகிற நோயாளிகளையும், க்ளீனிக் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்கிற மூன்று பெண்களில் ஒன்று வாயை மூடாமல் 'லொக் லொக்' என்று நோயாளி மாதிரி இருமிக் கொண்டிருந்தது. இன்னொன்று "என்னடி இந்த மாத்திரை நல்லாவேயில்ல. கரையவே மாட்டேங்குது" என்று வாயைத் திறந்து இன்னொருத்திக்குக் காட்டியதிலிருந்து அதுக்கும் என்னவோ பிரச்சனையென்று புரிந்தது. டாக்டர் வந்துவிட்ட பிறகும்கூட கவலையே படாமல் அவர்கள் பாட்டுக்கு டேபிளில் ஒய்யாரமாய் குங்குமம் இதழை பிரித்து வைத்துக்கொண்டு "ஏய் பாத்தியாடி.. நம்மாளு 'ஜெயம்' ரவிக்கு மேஷ ராசின்னு போட்ருக்கான்." என்று கெக்கே பிக்கேயென்று சிரித்துவைத்து "நம்ம டாக்டர் ராசியும் அதானே.." என்றது. டாக்டர் எந்த ராசியானாலும் பிரச்சனையில்லை. கைராசியாய் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்தது. லேடி டாக்டரும் அதே மாதிரி எக்ஸ்ரேவை ஒரு செகண்ட் தூக்கிப் பார்த்துவிட்டு, "இது குழந்தை கக்கா போகும்போது வந்துரும். வாளப்பளம் வாங்கிக் குடுங்க. அப்படி வரலைன்னா அடுத்தது என்ன செய்யலாம்னு பார்ப்போம். இப்ப அநாவசியமா கைவெச்சா நாலாயிர்ரூவா ஆகும்" என்றார். வெளியே வந்தபோது கன்ஸல்டேஷன் 250 ரூபாய் என்றாள் 'ஜெயம்' ரவி ரசிகை. ஆக இதுவரை மொத்தமாய் ஐநூறை முழுங்கிவிட்டது இந்த விஷயம்.

'வாளப்பளம்' வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம். அக்கம் பக்கத்தாரின் விசாரிப்புக்கெல்லாம் ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு (பேட்டரி என்று சொன்னவுடன் பெரிய டார்ச்சுக்குப் போடுகிற பெரிய எவரெடி பேட்டரி என்று நினைத்துக்கொள்கிறார்கள் பாவம்!) கவலையுடன் தூங்கப் போய்விட்டோம். எல்லாருடனும் பேசியதில் இந்த ழுழுங்குகிற கலாச்சாரம் குழந்தைகளுக்கு புதிதல்ல என்றும் எல்லாக் குழந்தைகளுமே அவரவர் விருப்பத்திற்கேற்ப புளியங்கொட்டை, தேங்காய் மூடி (சிரட்டைத் துண்டு), ஸேஃப்டி பின், போல்ட் அல்லது நட், நாணயங்கள், க்ரையான் துண்டு என்று இப்படி எதையாவது முழுங்கித் தொலைத்த வீர வரலாறுகளையும் அறிந்துகொள்ள முடிந்தது.

பிறகென்ன? மறுநாள் பையன் கக்கா வருவதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினோம். அது வருவதற்கான எந்த அறிகுறியும் பையன் முகத்திலிருந்து அறிந்து கொள்ள முடியாத அவஸ்தையுடன் பொழுது ஓடியது. அவன் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாய் விளையாண்டு கொண்டிருந்தான். எனக்கோ பேட்டரிக்கு உள்ளேயிருக்கிற ரசாயனப் பொருட்கள் குறித்த கவலை. ஏதாவது லீக் ஆகி எதையாவது பாதிக்குமா என்று. இதே நினைப்புடன் ஆபிஸூக்கு லேட்டாக போய் சொல்யூ்ஷன் ஆர்க்கிடெக்ச்சரை மறுபடி பிராண்ட ஆரம்பித்தபோது செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. காதில் வைத்ததும் பையன் குரல் கேட்டது.

"வந்திரிச்சு! பேட்டரி வந்திரிச்சு!"

உங்களுக்கு முந்தா நேத்து பக்கத்தில் ஏதோ சுழல்காற்று அடித்த மாதிரி சப்தம் கேட்டதா? அது ஒன்றுமில்லை. நான் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான்.

ஜீவித்திருப்பவர்கள்

சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதுவும் கடலிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர்களுக்குள் வசிப்பவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. நினைத்தவுடனே அவரவர் செளகரியத்திற்கேற்ப ஏதாவதொரு வாகனத்தில் பயணித்து சடுதியில் கடற்கரையை அடைந்து கால் நனைத்துவிடலாம். கடற்கரை ஒரு அழகான பொழுது போக்கிடம். பெரியவர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகள் சார்பாக ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு மணலில் ஒரு ஓரமாய் உட்கார்ந்து மீண்டும் குழந்தையாகி மகிழலாம். நானும் சில சமயம் அப்படியே. சென்னைக்கு வந்த இந்த நாலு வருஷத்தில் எத்தனை முறை கடற்கரைக்குச் சென்றேன் என்று கணக்கில்லை. கடற்கரைக்கு இன்னும் கொஞ்சம் பக்கமாய் வீடு மாறியபின் அநேக ஞாயிற்றுக் கிழமைகள் வண்டியை எடுத்துக்கொண்டு மெரீனாவுக்குப் போய்விடுவது வழக்கம். வார நாட்களில் கூட ஒரு சில நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு இரவு எட்டு மணிக்குமேல்கூட அடிக்கடி அங்கே போவதுண்டு.

கடற்கரைக்குப் போகிற சமயங்களில் இருட்டுவதற்கு முன் சமுத்திரத்தை ஒரு முறை தரிசனம் பண்ணிவிடுகிற ஆசை எப்போதும் மேலோங்கியிருக்கும். அப்படி வாய்ப்பு அமைந்தால் என் நாலு வயசு வாண்டை மகிழ்விக்கிற சாக்கில் நானும் கொஞ்சம் அலைகளில் விளையாடுவதுண்டு. பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு இறங்கி அவன் விரல்களை இறுகப் பிடித்துக் கொண்டு, முழங்காலளவு வந்து திரும்புகிற அலையில் காலடியில் மணல் சரசரவென்று நழுவ, பாதங்கள் புதைகிற அபத்திர உணர்வில் இருவரின் கைப்பிடியும் இறுகும். சில நேரம் எதிர்பாராமல் மிகப் பெரிய அலை வந்து அவனை முழுதாகவும் என்னை முகம் வரையிலும் நனைக்கிற போது உற்சாகத்தில் "க்ரீச்" என்று அருகாமை ஜனங்கள் நடுங்கிப் போகுமளவு கத்துவான். கடற்கரைக்கு போகும்போதே இருட்டியிருந்தால் இந்த விளையாட்டு ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வந்து திரும்பும் அலையின் மிஞ்சிய நுரையில் லேசாய் செருப்பை நனைப்பதோடு சரி. ஞாயிற்றுக் கிழமைகளில் அலைகடலென(!) திரண்டிருக்கிற கூட்டத்திற்கு கடலும் அலைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக, ஒரு எக்ஸிபிஷன் தன்மையுடன் இருப்பதாக நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

கடல் எல்லோருக்கும் பிடிக்கிறது. கடல் நீரில் கால் நனைப்பது, கடற்கரையில் கடலை சாப்பிடுவது, கடலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு காதல் பண்ணுவது, கடல் மணலில் கால் புதைய பேசிக்கொண்டே நடப்பது அல்லது வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பது என எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அல்லது எல்லா விதத்திலுமே கடலின் அருகாமை மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கு கடலின் தூரத்து நேர்கோட்டு விளிம்பில் பார்வையை செலுத்தி எதையாவது யோசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். கற்பனைக்கெட்டாத அதன் தூரம், ஆழம், அது மறைத்து வைத்திருக்கிற உயிரின ரகசியங்கள் எல்லாம் யோசிப்பின் தீவிரத்தில் ஆச்சரியங்களாய் விரியும். மனிதனின் பிரபஞ்ச எல்லையைப் பற்றிய வியப்பின் ஒரு மினியேச்சர் மாதிரிதான் இது. ஞாயிற்றுக்கிழமை அல்லாத மற்ற வார நாட்களில் மெரீனாவில் கடலுக்கு இன்னொரு முகம் இருப்பதுபோல் தோன்றும். அதிகம் கூட்டமில்லாமல், தன் பாட்டுக்கு ஏதோ யோசனையோடு அமைதியாய் வந்து போகிற அலைகள். அந்த எக்ஸிபிஷன் தன்மை இல்லாதிருப்பதுபோல் அல்லது கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றும். அதுவும் இருட்டில் தூரத்துக் கப்பல் விளக்குகளோடு சேர்ந்து பார்க்கும் போது கருமை படர்ந்த கடலின் அமைதி மனதை என்னவோ செய்யும். அலைகளின் லேசான இரைச்சல் ஒரு தாலாட்டு மாதிரி இருக்கும். வாழ்க்கைக்கும் தினசரி பரபரப்புக்கும் இடையை இருக்கிற பிணைப்பு தற்காலிகமாய் அறுந்த மாதிரி கொஞ்சம் ஆசுவாசமாகத் தோன்றும். திரும்பி மெயின் ரோட்டுக்கு வரும்வரைதான் அந்த ஆசுவாசம் எல்லாம். டிசம்பர் 26க்கு ஒரு வாரத்துக்கு முன் மனைவி மகனுடன் ஒரு இருட்டின மாலையில் அலைகளுக்கு நெருக்கமாய் தூர வானத்தில் எரிநட்சத்திரம் விழுவதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோதுகூட இதே ஆசுவாசம் மனதில் நிறைந்திருந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நாளைக்கு கடற்கரைப்பக்கம் போக முடியாமல் போய்விட்டது. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஏனோ தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மெரீனாவை நினைக்கும்போது தினத்தந்தியின் டபுள் ஸ்ப்ரெட் ஏரியல் புகைப்படம் நினைவில் நிழலாடி மனதை பிசைகிறது. கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சிக்குக் கீழே துக்கத்தில் தோய்த்தெடுத்த ஒரு ஸ்க்ரால் நியூஸ் ஓடுவது மாதிரி ஒரு பிரமை.

ரொம்ப நாள் கழித்து இந்த ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நண்பர்களுடன் போனேன். பெசன்ட் நகர் கடற்கரை. போகும்போதே நன்றாய் இருட்டியிருந்தது. அன்றைய தினத்திற்கு கூட்டம் ரொம்பக் குறைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் நிறைய பேர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கவில்லையெனத் தெரிகிறது. கடற்கரை தன் முகத்தை மாற்றிக்கொண்டதுபோல் ஒரு உணர்வு. மணலில் கடலை நோக்கி நடக்கும்போது எல்லோருக்கும் கால்களில் தயக்கம் பின்னுக்கிழுக்கிறது. செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தால் அரைக் கிலோமீட்டருக்கு மணல்வெளியில் இன்னும் ஈரப்பதம். எப்போதும் நம்மை அற்பமாய் உணரச்செய்யும் கடல் இன்று அதன் கூடவே எல்லோர் மனதிலும் லேசான பய உணர்ச்சியையும் சேர்த்துவிட்டது. அன்று யாரும் அலையருகில் உட்கார்ந்து நான் பார்க்கவில்லை. அதுமாதிரியே கால் நனைத்து விளையாடுபவர்களும். அலைகள் தன் வழக்கமான எல்லைக் கோட்டை மாற்றி வரைந்திருந்ததாகப் பட்டது. யானொன்றுமறியேன் பராபரமே என்பதுபோல் தேமே என்றிருக்கும் கடற்பரப்பின் அகண்ட வெளியில் எல்லோர் பார்வையும் ஒரு சந்தேகத்துடன் குத்திட்டு நிற்கிறது. நாங்கள் போன அன்று பெளர்ணமிக்கு இரண்டு நாள் முந்தியாதலால் 98 சதவிகித நிலா வானத்தில் இருந்தது. பளிச்சிடும் வெண்மையான நிலவொளியில் அலுமினிய ஃபாயில்களை சுருட்டுவது போன்ற தோற்றத்துடன் இருளில் பளபளப்புடன் புரண்டு வந்த அலைகளில் கால் நனைத்தபோது உயிரின் நரம்பு லேசாக நடுங்கிச் சிலிர்த்தது. இந்தப் பிஞ்சு வயசிலேயே தொலைகாட்சிச் சேனல்களிலின் 'லைவ்' காட்சிகள் மற்றும் செய்திகள் மூலம் ஏதோ புரிந்து வைத்திருந்த என் பையன் ஒரு உறைந்த பார்வையுடன் கடலை கொஞ்சம் வெறித்துவிட்டு என் கைகளை இறுக்க்க்க்க்க்கிகொண்டு என்னை அண்ணாந்து பார்த்தவாறு மெதுவே அலை நுரைகளைக் கால் விரல்களால் தீண்டிப் பார்த்தான்.

அன்று அலையருகில் உட்காரவும் இல்லை. அதிக நேரம் நிற்கவுமில்லை. கொஞ்சம் பாதுகாப்பான தூரம் என்று பட்ட இடத்தில் மணல்வெளியில் உட்கார்ந்துகொண்டோம். பாதுகாப்பான இடம் என்பதும் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற இந்த நினைப்பும் எத்தனை அபத்தம்!! புத்தாண்டுக்கு அடுத்தநாள் எனக்கு நேரிட்ட சின்னஞ்சிறு விபத்து கூட இதையேதான் சொல்கிறது.

கனத்த மனத்துடன் கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போதும் ஒரே சிந்தனை. இவ்வுலகின் இத்தனை கோடி ஜனங்களும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்து இந்தக் கணம் ஜீவித்திருப்பவர்கள்தான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

இனி நல்லவையே நடக்க எல்லாம் வல்ல Super Nature Power அருள் பாலிக்கட்டும்.

மாயாஜாலம்

எங்களுக்கு வில்சன் என்றொரு நண்பர் இருந்தார். கவனிக்கவும். 'எங்களுக்கு' என்று குறிப்பிட்டிருக்கிறேன். காரணம் எனக்கு மட்டுமே அவர் நண்பரல்ல என்பதுதான். எங்கள் செட்டான ஒரு ஐந்தாறு பேருக்கும் பொதுவான நண்பர் அவர். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த காலனிக்கு சற்றுத் தள்ளி நெடுஞ்சாலையில் அவர் வீடிருந்தது. வில்சன் எங்களையெல்லாம் விட பல வயது மூத்தவர் என்பதால் நாங்கள் எல்லோரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்போம். அவரும் ஒரு அளவிடற்கரிய ஸ்நேகத்துடன் 'தம்பிகளா..' என்று எங்களை அழைப்பது நன்றாய் இருக்கும். அடர்த்தியாய் தாடிவிட்டுக்கொண்டு, சற்றே உயரமாய் கொஞ்சம் மீடியம் உடம்புடன் இருப்பார். சற்றே பிசிறடித்த ஆனால் கம்பீரமான குரல் அவருடையது.

வில்சன் ஒரு மேஜிக் நிபுணர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் அப்போதே 250-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் மேஜிக் நிகழ்ச்சி பண்ணியிருந்தார். நீங்கள் வழக்கமாய் மேஜிக் ஷோ-க்களில் கண்டு ரசித்திருக்கும் தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது. சீட்டுக் கட்டுகளைக் கொண்டு வித்தை காண்பிப்பது, வாய்க்குள்ளிருந்து கோழி முட்டைகளை எடுத்துக்கொண்டேயிருப்பது, நியூஸ்பேப்பரை விரித்துக் காண்பித்துப் பின் அதை மடக்கி அதனுள்ளிருந்து தண்ணீர் கொட்டவைப்பது போன்ற வழக்கமான ஐட்டங்களோடு பெட்டிக்குள் ஆளை நிற்கவைத்து ரம்பம் வைத்து அறுத்து நாலைந்து துண்டாக்கிவிட்டுப் பின் ஆளை மறுபடி உயிரோடு(!) கொண்டு வருதல் போன்ற மெகா மாயாஜாலங்களையும் மேடைகளில் செய்வார். நிகழ்ச்சிகளின்போது கோட்டு சூட்டெல்லாம் போட்டு தலையில் நீளத் தொப்பி, கையில் மந்திரக்கோல் என்று ஃப்ரொப்ஷனலாகத்தான் தோன்றுவார். என்னதான் எங்கள் நண்பர் என்றாலும் எவ்வளவோ மன்றாடியும் அவர் பண்ணுகிற மேஜிக் ரகசியங்களைப் பற்றி மூச்சுவிட மாட்டார். போனால் போகிறதென்று ஒரு நாலணா காசை முழங்கையில் தேய்த்துத் தேய்த்து எப்படி மறைய வைப்பது என்கிற ட்ரிக்கை மட்டும் சொல்லிக் கொடுத்தார். வெகு சுலபமாக நான் கற்றுக் கொண்ட அந்த வித்தை குழந்தைகளிடம்தான் செல்லுபடியாகும். பெரியவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். காலனி முக்கில் நாங்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிற இடத்துக்கு அவர் வந்து நின்றால் சடக்கென்று ஏதாவது எளிய வித்தை செய்து காட்டி அசத்துவார். உதாரணம் : என் சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாய்த்தாள் எடுத்து அதை நான்காக மடித்து வலது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் இடையே வைத்து விஸ்ஸ்க் என்று இடதுகை உள்ளங்கையில் தட்டினார். மறுநொடி ரூபாய் நோட்டு அவரது இரண்டு கைகளிலும் இருக்காது. பத்து ரூபாயைத் திருப்பித் தரவேண்டுமானால் என் அப்பாவிடம் சொல்லி அவரிடம் டி.வி கேபிள் கனெக்ஷன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆம். அவர் அந்த ஏரியாவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிற வேலையையும் பார்த்து வந்தார்.

கேபிள் கனெக்ஷன் என்றால் அப்போதெல்லாம் தூர்தர்ஷன் தவிர எதுவும் கிடையாது. ஆனால் அதில் வெள்ளிக் கிழமை எட்டு மணிக்குப் போடுகிற ஒலியும் ஒளியும் பார்ப்பதற்கே எல்லார் வீட்டிலும் அப்படியொரு முன்னேற்பாடு நடக்கும். வில்சன் ஒவ்வொரு மதியமும் சினிமா வீடியோ கேசட்டுகளை வைத்து அவர் வீட்டிலிருந்தே ஒளிபரப்ப அது காலனி முழுக்க எல்லோருடைய டி.வியிலும் தெரிகிற டெக்னலாஜியை வியந்துகொண்டிருந்தோம். ஒரு தடவை கார்த்திக் படமான இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிற படத்தை கேபிளில் ஒளிபரப்பி காலனி தாய்மார்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. அப்போது சன் டிவியெல்லாம் கிடையாது. ஆனால் வில்சன் சன் டி.வி-யின் (ராஜ்?) முதல் முயற்சியான 'பூமாலை' என்கிற கேசட்டை போட்டு அவ்வப்போது ஒளிபரப்புவார். நாட்டு நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், காமெடி ஷோ, சினிமா பாட்டு என்று கலவையாய் மாதமொருமுறை தொகுத்து கேசட் வடிவில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததுதான் பூமாலை என்று பெயரிடப்பட்ட அந்த கேசட். அதுதவிர வில்சன் புண்ணியத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு NFDC படங்களான எல்லா ஆர்ட் ஃபிலிம்களையும் உட்கார்ந்து பார்ப்போம். ஒன்றும் புரியாவிட்டாலும்.

வில்சன் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விழா மேடைகளில் தோன்றி மைக் பிடித்து கம்பீரமாய்ப் பேசுவார். பேசுகிற விஷயங்களில் நிச்சயம் சமூக அக்கறை தொனிக்கும். அவர் பொள்ளாச்சியில் 'மனிதம் சேவை மையம்' என்கிற சமுக அமைப்புக்குத் தலைவராக இருந்தார். அவ்வப்போது நகரில் ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துவது, ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடைகள் சேகரித்துக் கொடுப்பது போன்ற காரியங்களில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தார். நாங்களெல்லோரும்கூட மனிதத்தில் உறுப்பினராகி அவருடன் சேர்ந்து சுற்றி சமுக சேவை செய்துகொண்டிருந்தோம். அவ்வப்போது ஆட்டோவில் மைக் வைத்து அறிவித்துக்கொண்டு சுற்றியிருக்கிற காலனிகளில் வீடுவீடாகப் போய் உடைகள் சேகரித்து ஆதிவாசிகளுக்கு கொண்டுபோய் வழங்குவோம். தவிர மனிதம் வெளியிட்டுக்கொண்டிருந்த "மனிதம் செய்திகள்" என்கிற சிற்றிதழில்(?) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமுக ஆக்கப்பணிகள் பற்றிய விவரங்கள் போக மீதி இருந்த இடத்தில் நாங்கள் கதை, கட்டுரை, கவிதைகள், படித்ததில் பிடித்தது, ஜோக்ஸ் என்று எதையாவது எழுதுவோம். சரசுராம் இதற்கு ஆசிரியராய் இருந்தார். ராஜீவ் காந்தி இறந்த சமயத்தில் அவர் எழுதின உருக்கமான கட்டுரையை முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் D.R. கார்த்திகேயன்கூட படித்துப் பாராட்டினார்.

ஒரு தடவை சாயங்காலம் ஐந்து மணிக்கு வில்சன் வேகமாய் வந்து நெகமம் அருகில் சேரிபாளையம் என்கிற ஊரில் நடக்கிற நவராத்திரி கலை விழாவில் அன்றைக்கு அவரின் மேஜிக் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்கூடவே நீங்களெல்லாம் சேர்ந்து சைடில் கலை நிகழ்ச்சி செய்கிறீர்களா என்று கேட்டார். ஏழு மணிக்கு ப்ரோக்ராம் என்றார். இரண்டு மணி நேரத்திக்குள் என்னத்தைத் தயார் பண்ணுவதென்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அரை மனதாய் சரி என்று தலையாட்டிவிட்டு பரபரவென்று இரண்டு மணி நேரத்துக்குள் டாக்டர் கடீஸ்குமார் என்கிற காமெடி நாடகத்தை நான் மற்றும் நண்பர்களான ராம் (சரசுராம்), மீனாட்சி சுந்தரம் உட்கார்ந்து எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில நண்பர்களை வைத்து கடகடவென்று ஏழு மணிக்குள் ரிகர்சலும் பார்த்து வில்சனுடன் வேனில் கிளம்பிவிட்டோம். நான் அதில் ஒரு நோயாளி கேரக்டர். கூடவே நரம் தினசரி கேட்கிற ரேடியோ செய்திகளை நகைச்சுவையாய்த் திரித்து நான் அதை வாசிப்பது என்றும் முடிவு செய்து, வண்டி சேரிபாளையம் போய் சேர்வதற்குள் ராம் ஒரு முழு வெள்ளைத்தாளில் அதை இரண்டு பக்கத்துக்கு எழுதியும் கொடுத்துவிட்டார். அதோடு 'டிஸ்கோ டான்ஸ் ஆடிக் கலக்குகிறேன்' என்று தானாக முன்வந்த மஞ்சு என்ற பொடியனும் வேனில் ஜிகினா உடை சகிதம் தொற்றிக் கொண்டான்.

மின்நகர் கீதம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் இன்னும் சில நொடிகளில் ஆரம்பம் என்று மைக்கில் அமர்க்களமாய் அறிவித்துவிட்டு ஆரம்பித்தோம். அன்றைக்கு சேரி பாளையத்தை ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். மஞ்சு என்கிற அந்தப் பையன் அப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த ஹாசன் ஜகாங்கீரின் "ஹவா ஹவா" பாட்டுக்கு அட்டகாசமாய் டான்ஸ் ஆடி பின்னி எடுத்துவிட்டான். அவசரகதியில் பண்ணின இந்த ஏற்பாடுக்கு அத்தனை வரவேற்பா என்று சத்தியமாய் நம்பமுடியவில்லை எங்களால். கொஞ்சம் கற்றுக்குட்டித்தனமாகவே இருந்தாலும் எங்கள் நாடகத்தையும், நியூஸையும் ரசித்துப் பார்த்த / கேட்ட சேரிபாளையப் பொதுமக்கள் சிரித்த சிரிப்பு இன்னும் மனதுக்குள் பத்திரமாய் இருக்கிறது. வில்சனுக்கோ ரொம்ப சந்தோஷம். இதற்கு நடுவே இப்போது நினைத்தாலும் நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க நேரிட்ட சில வெளியே சொல்ல முடியாத சம்பவங்களும் நடந்தன.

அதற்கப்புறம் வில்சன் மேஜிக் ஷோ போகிற இடத்துக்கெல்லாம் எங்களைக் கூப்பிட ஆரம்பித்தார். நாங்கள் பிறகு நான்கைந்து மேடைகளில் வில்சன் தயவால் இன்னும் சில அயிட்டங்கள் சேர்த்து எங்கள் கலைத்திறமையைக் காட்டினோம். பிறகு பொள்ளாச்சி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் நண்பனொருவன் டயலாக்கை முழுங்கிவிட்டு பேந்தப் பேந்த முழிக்க, ஆடியன்ஸிடமிருந்து விசிலும் கூக்குரலும் வர அத்தோடு எங்கள் கலைப் பயணம் முடிவுற்றது. இந்தக் கூத்துக்கெல்லாம் இப்போது இணையத்தில் எழுதும் எழுத்தாளர் ஒருவரும் சாட்சியாக இருந்தார்.

சுகமான நினைவுகளை ஞாபகப்படுத்தும் பழைய உருப்படிகளை எப்போதும் பத்திரப்படுத்தி வைக்க நினைக்கும் என்னிடம் 'மனிதம் செய்திகளின்' ஒரு சில பிரதிகளும், ஏழெட்டு மேடைகளில் நான் வாசித்த நகைச்சுவை செய்திகளின் பிரதியும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குமுன் நான் பணியாற்றிய கம்பெனியின் "கெட்-டுகதர்" ஹோட்டல் ப்ரீஸில் நடந்தபோது செய்தி வாசித்ததில் கொஞ்சமாய் சிரித்துவைத்தார்கள். விரும்பிக் கேட்கிற நேயர்களுக்கு Footer-ல் காப்பிரைட் சித்ரன் என்று போட்டு அந்த செய்திகள் ரகசிய ஈமெயிலில் அனுப்பிவைக்கப்படும். செய்திகள் வாசிப்பது ரகுநாதவர்ம விஜயபுர சேதுபதி கணேச சுந்தரபாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்யகாந்திப் பிரகாசராவ்....

நண்பர்கள் வேலை நிமித்தம் ஆளுக்கொரு திசைக்குப் பிரிந்தபிறகு வில்சனைப் சந்திக்கமுடியவில்லை. விசாரித்தபோது அவர் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஏதோ ஊருக்கு குடும்பத்துடன் காலிபண்ணிவிட்டுப் போய்விட்டதாகப் பின் தகவல் கிடைத்தது. அவரிருக்கிற இடம் யாருக்கும் தெரியவில்லை. மனிதம் சேவை மையம் இப்போது இல்லை. வில்சனிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே ஒரு நாலணா மேஜிக்கை இப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் பையனுக்கு செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த மாதிரி நட்புகள் என்னிடமிருந்து காணாமல் போகிறதா அல்லது நான்தான் அவர்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறேனா என்று எப்போதுமே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஏதாவது மேஜிக் பண்ணி அவர்களை என் முன்னால் வரவழைத்துவிட முடியாதென்பது தெரியும். தேடினால் நிச்சயம் கிடைப்பார்கள்.