ஒங்களுக்கு நெறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

திடீரென எனக்கு ஒரு ஃபோன் வருகிறது. மறுமுனையில் ரொம்ப நாளாக என்னுடன் தொடர்பில்லாமலிருந்த நண்பர். எனக்கோ ஒரே ஆச்சரியம். வெளியே மேகமூட்டமாயிருக்கிறதாவென்று பார்த்தேன். இன்று மழை வந்தாலும் வரும். குரலில் உற்சாகம் மிதக்க குடும்ப செளக்கியம், வேலை, பையன் ஸ்கூல் எல்லாவற்றைப்பற்றியும் விசாரிக்கிறார். எனக்கு மிக மகிழ்ச்சியாயிருக்கிறது. பரவாயில்லை. நண்பர்களாகப்பட்டவர்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பது எத்தனை கொடுப்பினை!?. அவரைப் பற்றி, அவர் குடும்ப குசலங்களையெல்லாம் நானும் விசாரித்து வைக்கிறேன். வீட்டுக்கு வாங்களேன் ஒருநாள் என்கிறேன். மறுமுனையில் அவர் முகத்தில் பல்ப் ஒளிர்ந்ததை போன் வழியாகவே உணர முடிகிறது. என் முகத்திலும் பல்ப்.

"அடடா... புதன்கிழமை நானே ஒங்களை வந்து பாக்கறதுதான் ப்ளானே.." என்கிறார். தொடர்ந்து "ஒரு சின்ன விஷயம் இருக்கு."

விஷயத்தை அறிந்து கொள்கிற ஆவல் என் குரலில் விரிகிறது. சொல்லுங்க என்கிறேன். அவர் ஆரம்பிக்கிறார். "ஒண்ணுமில்ல... ஒரு சின்ன பிஸினஸ். அத நான் உங்கள நேர்ல பாத்து சொன்னாதான் செளரியமாருக்கும். ஒரு சின்ன டெமோ காட்டணும். புதன் கெழம வர்றேன்."

சட்டென்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே என்னுடைய பல்ப் ஆஃப் ஆகிவிட்டது. இன்றைக்கு மழை வந்தாலும் நான் சந்தோஷப்படமாட்டேன்.

"மல்டிலெவல் மார்க்கெட்டிங்கா?"

"நான் நேர்ல சொல்றனே.."

என்னிடமிருந்து ஒரு பலத்த பெருமூச்சு! வாழ்க்கையில் பதினெட்டாவது தடவையாக மாட்டிக்கொண்டேன். எனக்கு இந்த மாதிரி பிஸினஸ்களில் துளியும் ஆர்வமில்லையென்றும், நான் ஏற்கெனவே இதையெல்லாம் (வேறு சில நண்பர்களின் வற்புறுத்தலின் பொருட்டு) முயற்சித்துப் பார்த்தாயிற்று என்றும் சொல்லி எப்போதும்போல் நான் நழுவப்பார்க்கிறேன்.

அத்தனை லேசில் விடுபவர்களா மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரர்கள்? நான் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி மிக மோசமான பிஸினஸ் அதுவல்லவென்றும், இதனால் ஏகப்பட்ட பேர் குறுகிய காலத்தில் பணக்காரர்களாயிருக்கிறார்களென்றும், தனக்குக்கூட மாசா மாசம் அறுபதாயிரம் இதன் மூலம் வந்துகொண்டிருக்கிறதென்றும், நான் தலையை மட்டும் அசைத்தால் போதும் மற்றதையெல்லாம் தான் பார்த்துக்கொள்வதாகவும், தனலட்சுமியானவள் இப்போது என் வீட்டுக் காலிங்பெல்லில் கை வைத்திருப்பதாகவும் மூச்சுவிடாமல் பேசினார். ஜஸ்ட் நீங்க ஒரு ஹாஃபனவர் ஸ்பென் பண்ணுங்க போதும் என்றார். ஒரு பதினைந்து நிமிடத்திற்கு அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் கேட்டுவிட்டு 'நன்றி, எனக்கு இதில் ஆர்வமில்லை' என்று மறுபடி சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் பல்ப் ஃப்யூஸ் போயிருக்கவேண்டும். சடுதியில் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு அரிய பெரிய வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்கள் என்று கூறி போனை வைத்தார்.

இது போல் பல. முதலில் கொஞ்சம் பட்டுப் பின் தெரிந்துகொண்ட அனுபவங்களிலிருந்து The art of saying No வை கொஞ்சம் கொஞ்சமாக பயின்றதிலும் இப்போது இம்மாதிரி நண்பர்களுக்கு சிரித்து மழுப்பி எனக்கு ஆர்வமில்லை என்று எப்படியாவது சொல்லித் தப்பித்துக்கொள்கிறேன்.
அவர்கள் சொல்கிற மாதிரி 'எதுவுமே செய்யாமல்' காசானது கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமா என்றெல்லாம் நான் ஆராயவும் இல்லை. ஆனால் இந்த மாதிரி மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உழல்பவர்கள் அதிகபட்சம் மற்றவர்களை வற்புறுத்தி இதில் இணைக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கு உடன்பாடாக இல்லை. பின்னே மார்க்கெட்டிங் என்றாலே அதுதானே? ஆரிஃப்ளேம் வகை பிஸினஸ்காரர்கள் "யூஸ் பண்ணிப் பாத்தீங்கன்னா அப்புறம் நீங்களும் இந்த லைனுக்கு வந்துருவீங்க" என்று சில விலை அதிகமுள்ள நமக்கு வேண்டாத பொருட்களை தலையில் கட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். சில சமயம் டெமோ என்கிற பேரில் நமது நேரம் நமது அனுமதியில்லாமல் சாப்பிடப்படுகிறது.

ரொம்ப காலத்துக்கு முன் என் நண்பர்களிருவர் இது மாதிரி எதையோ ஆரம்பித்து ஒரே மாதத்தில் ஆளுக்கொரு யமஹா வாங்கி ஆக்ஸிலேட்டரை முறுக்கித் திரிந்ததைப் பார்த்து என் புருவங்கள் உயர்ந்ததை நினைவுகூர்கிறேன். இன்னொரு நண்பன் இரண்டு வருடம் இதில் உழன்றுவிட்டு கடைசியில் இரண்டேகால் லட்சம் கடனாளியாக நின்றது ஏன் என்றும் புரியவில்லை. இதன் சூட்சுமம் என்னவென்று கண்டுபிடிப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. எது எப்படியோ இருக்கட்டும்! இந்த ஆம்வேவோ இல்லை ஆரிஃப்ளேமோ நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, இல்லை தெரிந்த நபர்களுக்கு மத்தியில் வரும்போது ஒரு ஆரோக்கியமாக இருக்கும் நட்புக்கு கொஞ்சம் காய்ச்சலோ இருமலோ வரத்தான் செய்கிறது. மனத்தில் கொஞ்சம் டென்ஷன் உருவாகிறது.

என் நண்பன் ஒருவன் இந்த விஷயத்தைச் சமாளிப்பதில் பரவாயில்லை. கீழ்கண்ட உரையாடல் அவனுக்கும் மல்டிலெவல் மார்க்கெட்டிங்தாரருக்கும் இடையே நடந்தது.

- ஒங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க ஆசையா?

- இல்லையே...

- என்ன இப்படி சொல்றீங்க. பணம் லைஃப்ல ரொம்ப அவசியமில்லையா?

- தேவைதான்.

- ஸோ யு நீட் மணி.

- நோ!

- இப்பதானே சொன்னீங்க பணம் முக்கியம்னு!

- முக்கியம். ஆனா எனக்கு வேணும்னு சொல்லலையே!

- அப்ப நீங்க பணம் சம்பாதிக்க வேண்டாமா?

- எதுக்கு சம்பாதிக்கணும்?

- பணம் இல்லாம எப்படி சார் வாழ முடியும்?

- தோ.. நான் வாழ்ந்துட்டுதானே இருக்கேன்?

- நிறைய பணமிருந்தா உங்களுக்கு எவரிடே ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஈஸியா சால்வ் பண்ணலாம் இல்லையா???

- எனக்குதான் எந்த ப்ராப்ளமும் இல்லையே சார்.

- உங்க ஃப்யூச்சருக்கு?

- ஹாஹா. Great Joke.

அவன் மசியமாட்டான் என்று தெரிந்து லேசாய் என்பக்கம் திரும்பினார். "நீங்க சொல்லுங்க... உங்களுக்கு வாழ்க்கைல பணம் வேணுமா வேண்டாமா?"

சும்மா பேசிக்கொண்டிருப்பானேன். நான் திருவிளையாடல் சிவபெருமான் மாதிரி "டங்" என்று நின்ற போஸில் மண்டபத்திலிருந்து மறைந்துவிட்டேன்.

8 comments:

  1. Naanum unga katchi than MLM ellam enaku othuvarathu, nalla katurai

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான பதிவு.

    கொஞ்ச நாளுக்கு முன்பு இப்படிப்பட்ட மார்க்கெட்டிங் கம்பெனிகளை இந்தியாவில் தடை செய்யும் சட்டம் கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது. என்றாலும் இந்த நச்சரிப்பு வித விதமான பெயர்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    எது எப்படியோ, இந்த பிஸினஸில் விழுபவர்கள் தமது நண்பர்களை "இழுக்க" பைத்தியம் பிடித்து அலைவதென்னவோ நாம் கண்கூடாக காணும் உண்மை!

    மேலும் ஒரு விஷயம்...உங்கள் வலைப்பதிவின் வடிவமைப்பு கொள்ளை அழகு!

    அன்புடன், சர்தார்

    ReplyDelete
  4. ha ha ha
    நல்ல பதிவு !
    சமாளிப்பதற்கு தனி திறமை வேண்டும்

    ReplyDelete
  5. ---The art of saying No வை கொஞ்சம் கொஞ்சமாக பயின்றதிலும் ---

    :-)))

    The art of not displaying frustration without getting frustrated?

    ReplyDelete
  6. படித்தவர்கள் கூட இந்த பிஸினஸில் அறிவிலிகளாக நடந்துக்கொள்வதுதான் கசப்பான உண்மை, "இதில் இணைந்து விட்டால் நீங்களும் அதிஷ்டக்காரர்தான்" என்கிறார்கள், அதிஷ்டம் என்பது முயற்ச்சியின்றி கிடைப்பது, ஆனால் இதில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள், திறமையை காட்டுகிறார்கள் - மற்றவர்களை நச்சரிப்பதிலும், வற்புறுத்துதலிலும்,

    திரு சர்தார் சொன்னது போல் இவர்கள் பைத்தியங்களாக அலைகிறார்கள் என்பது உண்மை, தவிர மற்றவர்களை பைத்தியங்களாக ஆக்கவும் அலைகிறார்கள் என்பதும் உண்மையே....

    ReplyDelete
  7. ok accepted. give idea one middle class man r woman can earn one crore rupees in his life time. lot of big company r making money to use network marketing idea(leavarage concept).u r people r fools. u selected best one and earn.

    krishnakumar -questnet
    RAISE YOURSELF TO HELP MANKIND

    ReplyDelete
  8. We are brought to learn from others and sell our knowledge to others for money. Are you all awere of concept of leaverage. Any changes are not acceptable initialy. Those who are taking changes initialy are successfull in all area, like Hunter to agriculture age, from agriculture age to Industrial age. Now we are in age of tromendous change from industrial to knowledge age. Are you still want to be labour to sell your time and knowledge for others. Who is cleaver, employee or their boss? think about this and change yourself and part of new electronic era.

    Sunil

    ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?