நடந்த கதை - குறும்படம்

நண்பர் பொன்.சுதா இயக்கியிருக்கிற “நடந்த கதை” என்னும் குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுக விழா நேற்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, எழுத்தாளர் அழகிய பெரியவன், தோழர் விடுதலை ராசேந்திரன், ஓசை காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் குறித்தும் பொதுவாக குறும்படங்கள் பற்றியும் நான் எழுதின ஒரு பதிவு சென்னை ஆன்லைன் - தமிழ் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.

அதைப் படிக்க இங்கே கிளிக்கவும்: நடந்த கதை

ஓம் சாந்தி!


கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை. அதுவும் எனக்கு அது அடிக்கடி நிகழ்வதாகவும் தோன்றுகிறது. அது என்னவென்றால் யாரையாவது பிடித்து சகட்டு மேனிக்குத் திட்டுவது. இதற்கு முன்பு இப்படி செய்ததற்கு பெரிய முன் அனுபவம் எதுவும் அதிகமாய் இல்லை. இது என் இயல்புக்கு மாறான விஷயமாகவும் கூட அடிக்கடி தோன்றுகிறது. என் இயல்பையும் சுபாவத்தையும் நெருக்கமாய் அறிந்தவர்கள் இதைப் பார்த்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

திட்டுவதென்றவுடன் ஏதோ தணிக்கை செய்யப்பட்ட, படாத வார்த்தைகளை இட்டு நிரப்பி, பரம்பரைகளை வம்பிக்கிழுத்து அல்லது பிறப்பு பற்றின சந்தேகங்களைக் கிளப்புகிறேன் என்று தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். சென்னையில் சுமார் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தும் அந்த அளவு முன்னேற்றத்திற்கு மனதளவில் நான் தயாரில்லை. அதற்காக சும்மா வாய்க்குள் யாருக்கும் கேட்காத மாதிரி முணுமுணுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என்றில்லாமல் நாகரிக உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில சொற்பதங்களுடன் பக்கத்தில் நிற்பவர், நடப்பவர் அல்லது உட்கார்ந்திருப்பவர் என்று எல்லோர் காதிலும் விழுவதுமாதிரி நன்றாக சத்தமாக இரைதல்.

இதன் காரணமாக என்ன மாதிரி விளைவுகள் எனக்கு நேருகிறதென்று சொல்கிறேன். 1. உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகள் லேசாக புடைத்துக்கொள்கிறது. 2. நின்றுகொண்டு திட்டுவதென்றால் அநிச்சையாய் நடு நெற்றியை விரல்களால் தீவிரமாகத் தேய்த்துக்கொண்டு குறிவைக்கப்பட்ட எதிராளியை நோக்கி உர்ரென்று ஒரு பார்வையை வீசுதல். 3. ஆப்தல்மாலஜிஸ்ட்-கள் சொல்வது போல கோபத்தில் கருவிழிக்குள்ளே பாப்பா விரிதல் 4. அதிக டென்ஷன் ஏற்படுவதால் லேசாய் பெருமூச்சு வாங்குதல். 5. கோபத்தால் உடலானது இன்னபிற வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுதல். 6. சூழ்நிலை மறத்தல்.

எதனால் திட்டவேண்டியிருக்கிறது? கோபம் வருவதால். எதனால் கோபம் வருகிறது? யாரோ என்னவோ செய்வது என்னை பாதிப்பதால். ஆனால் அவையெல்லாம் நியாயமான விஷயங்களுக்கான நியாயமான கோபங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். இது கூட வராவிட்டால் அப்புறம் என்ன மனுஷன் நீ என்று என்னை நானே சில நேரம் கேட்டுக்கொள்வதன் பின்விளைவாகத்தான் மேற்படி விஷயங்கள் அரங்கேறுகின்றன. அதைக்கூட பண்ணமுடியவில்லையெனில் இளிச்சவாயன் என்கிற பட்டம் கட்டி அப்படியே கட்டம் கட்டிவிட மாட்டார்களா மக்கள் என்றொரு எண்ணமும் கூடவே எழுகிறது. தவிர நான் புத்தனோ அல்லது புத்தனின் வழியைக் கடைபிடிப்பவனும் அல்லன். மூன்றாம் முறை முகத்தில் அறைந்தால் புத்தனுக்கும் கோபம் வரும் என்று படித்ததில்லையா நீங்கள்?

வாசற்படியில் கட்டிப்போட்டிருக்கிற நாயைக் காட்டி “ஒண்ணும் பண்ணாதுங்க” என்று சொல்கிற மாதிரி நம்மையும் இனியும் யாரும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்கிற முனைப்பின் எதிரொலி இது. இவன் ஒரு அப்பாவி, பிள்ளைப்பூச்சி என்கிற மாதிரி பெயர்கள் நமக்கு அடைமொழியாகவோ, புனைபெயராகவோ வந்து சேராமலிருக்கவேண்டுமென்றால் நாம் கிடைத்த சந்தர்ப்பங்களில் குரல் உயர்த்தி நிரூபணம் செய்துகொண்டால்தான் ஆயிற்று இல்லையா?

இப்படிப் புலம்புகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிற்று? சொல்கிறேன். ஒரு பிரபல மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனம் இந்த மாசம் காரணமில்லாமல் உங்கள் பில்தொகையை இரட்டிப்பாக அனுப்புகிறது. காரணம் கேட்டால் கூலாக ‘டெக்னிகல் எர்ரர்’ என்கிறார்கள். நீங்கள் சர்வீஸூக்குக் கொடுத்திருந்த வாகனத்தில் நீங்கள் சொல்லியிருந்த குறைகளை சரியாகச் செய்யாமல் விடுவதுடன் புதிதாக ஒரு சில குறைகளை உண்டுபண்ணி அனுப்புகிறார்கள். நீங்கள் ஒரு எலெக்ட்ரானிக் இசைக்கருவியை சரிசெய்ய ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறீர்கள். 10 நாட்களாகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்று, நீங்கள் நேரில் போனபோது அதி முட்டாள்தனமான (அல்லது அதி புத்திசாலித்தனமான) காரியத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். உங்கள் அபார்ட்மெண்டில் டூவீலர் ஸ்டாண்டுக்கு நேர் மேலே உள்ள வீட்டின் பால்கனியில் அவர்கள் காகத்துக்காக குழம்பு சோறு வைக்கிறார்கள். (நல்ல விஷயந்தான்) மறுநாள் நீங்கள் குழந்தையுடன் ஸ்கூலுக்கு அவசரமாய் கிளம்பும்போது உங்கள் டூ வீலரைப் பார்த்தால் அது தலையிலிருந்து கால் வரை குழம்பு சோறால் நாறியிருக்கிறது. அதை கழுவ நிச்சயம் ஒரு பக்கெட் தண்ணீர் தேவைப்படும். காக்கைகளின் கைங்கரியம்தான் அது என்றாலும் தப்பு யாருடையது என்று உணர்ந்து நீங்கள் மேலே பால்கனியைப் நிமிர்ந்து பார்க்கிறீர்கள். ரோட்டில் போகும்போது யாரோ செய்த ஒரு சாலை விதிமுறை மீறலுக்காக பக்கத்து வாகனக்காரன் உங்களைப் பார்த்து கைநீட்டி“அறிவேயில்லையா?” என்று கேட்டு விடுகிறான். இன்னொரு பைக்வாலா ஒருவன் அவன் சென்று கொண்டிருக்கிற ஒரு ரோட்டை அவன் முப்பாட்டன் காலத்திலேயே பட்டா போட்டு எழுதிவாங்கிக் கொண்ட மனோபாவத்தோடு பான் பராக் எச்சிலை அண்ணாந்து பாத்து வலப்புறமாகத் துப்ப ஒரு திடீர் ப்ரேக் அடித்து நீங்கள் அந்தச் சாரலிலிருந்து தப்பித்தது மட்டுமல்லாமல் சறுக்கி விழ இருந்த ஒரு பெரும் விபத்திலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டீர்கள்.

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு சிறு சாம்பிள் சாஷே பாக்கெட் மட்டுமே. இது போல நிறைய! நிறைய! நிறைய! இவையெல்லாம் இந்த வருஷம் ஆடிக்கு ஒன்றும் அடுத்த வருஷ அமாவாசைக்கொன்றுமாக இனிதே நடந்தேறி வந்தால் பரவாயில்லையே. விதி வீடியோ கேம் விளையாடியது போல எல்லாமே ஒரு இருபது நாட்களுக்குள் தொடர்ந்து நடந்துவந்தது.

நீங்கள் இந்த சூழ்நிலைகளில் என்ன செய்வீர்கள் என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வியை இங்கே வீசுவதன் மூலம் என் நியாயமான கோபங்கள் குறித்தான ஆதரவுக்கு உங்களையும் இழுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் என்ன பண்ணினேன் என்றால் உடனே ரெளத்திரம் பழகி குரலுயர்த்திப் பார்த்ததுதான். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! இது ஒரு மாதிரி பரிசோதனை முயற்சி. இதன் விளைவாக மூன்றாவது பாராவில் சொல்லப்பட்டது தவிர வேறெதாவது நடந்ததா? ம்ஹூம்! ஒரு சில இடங்கள் தவிர “பெரிதாய் ஒன்றும் இல்லை. தொண்டை வறண்டதுதான் மிச்சம்” என்று கொட்டை எழுத்துக்களில் வருத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த விஷயங்கள் இன்றைய நகர நெரிசல் வாழ்க்கையில் பரபரத்துத் திரியும் மக்களின் பொதுவான மனோபாவத்தைக் குறித்து சிந்திக்கவைக்கிறது. மேற்கூறிய சம்பவங்களில் ஒரு சிலது நகர மனிதர்களுக்கு அடுத்தவர் மேலுள்ள அக்கறையின் கிராஃப் இறங்கிவிட்டதைக் குறிக்கிறது. ஒரு சில சம்பவங்கள் வாடிக்கையாளரின் திருப்தியை முன்னிறுத்திய சேவையை பொருட்படுத்தாமல் தேமே என்று வேலை செய்யும் பெருவாரியான கூட்டத்தை அடையாளம் காட்டுகிறது. அண்டை அயலார் மீதான பொதுவான நேசம் அல்லது சகோதரத்துவம் அருகி விட்டதென்பதை இன்னும் சிலது எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிலைப்பாட்டை தினசரி எதிர்கொள்ள நேரிடுகிற சலிப்பை, எரிச்சலோ கோபமோ கலந்த வார்த்தைகளிலோ செயல்களிலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆயுள் போதாது என்றும் தோன்றுகிறது.

ஆகவே சாந்தி சாந்தி ஓம் சாந்தி.

வேலிகளுக்கு அப்பால்...


2008-ல் வெளிவந்த ‘தி பாய் இன் த ஸ்ட்ரைப்டு பைஜாமாஸ்’ (The boy in the striped pajamas) என்கிற படத்தை இன்று பார்த்தேன். யூத இனப் படுகொலைகளை மையமாய் வைத்து உருவாக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்களில் இந்தப் படமும் ஒன்று என்றாலும் ஒரு வரலாற்றின் கொடுமையை இத்தனை நறுக்கென்று நெருடும்படி சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மாலை வேளையில் வெளியே ’சோ’வென்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியும் மழையுடன் முடிகிறது. படம் முடிந்தவுடன் மழையும் முடிந்து ஜன்னல் வழி ஊடுறுவும் காற்றின் ஜில்லிப்பும் இந்தப் படம் பார்த்த நிகழ்வும் ஆக ஒரு இனந்தெரியாத பாரம் நெஞ்சைக் கவ்வுகிறது.

சிறுவர் சிறுமிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற கணக்கற்ற உலகப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். அதி அற்புதமான படங்களான “லைஃப் இஸ் பியூட்டிஃபுல், தி பியானிஸ்ட்’ வரிசையில் நிச்சயம் சேர்க்கப் படவேண்டியது இது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் நாஜிப் படைகளின் “மரணக் கூடாரங்கள்” மற்றும் அங்கே நடைபெறும் கொடுமைகளையும் பதிவு செய்வது இந்தப்படத்திலும் களமாக இருந்தாலும் ஒரு சில மணித்துளிகள் தவிர அதையும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையோ அதிகமாகக் காட்டாமலே மிக அழகான மற்ற காட்சிகளாலேயே அந்த துயரங்களை மவுனமாய் உணர்ந்து உறையச் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பணியாற்றும் ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் மகனான ஒரு எட்டு வயதுச் சிறுவனின் பார்வையில் நகருகிறது கதை. மிக ஒதுக்குப்புறமான தனியான இடத்தில் குடிவரும் ஜெர்மன் அதிகாரியின் மகனான ப்ரூனோ, காவலர்களால் நன்கு பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்ட வீட்டில் விளையாடத் தோழர்கள் இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறான். பெரியவனாகி உலகைச் சுற்றும் ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை. திறந்திருக்கிற பக்கவாட்டுக் கதவை திறந்து யாருமறியாமல் பின் பக்கப் புதர்களையும், மரங்கள் அடர்ந்த பகுதிகளையும், சிறு ஓடையையும் கடந்து செல்கிற அவனது தேடல் ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியருகே சென்று முடிகிறது. வேலிக்கு அந்தப்புறம் உள்ள காம்ப்-ன் உள்ளே முடி வெட்டப்பட்ட, கைதி எண்ணைத் தாங்கிய அழுக்கடைந்த பைஜாமாவை அணிந்த யூதச் சிறுவனைக் காண்கிறான். தினமும் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஸ்ம்யுல் என்கிற அந்தப் பையனுடன் ப்ரூனோ ஏற்படுத்திக் கொள்ளும் நட்பும் அதன் தொடர்ச்சியான விளைவுகளுமாகக் கொண்டு நகர்கிறது படம்.

யூதர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்க்கையின், நாட்டின் குடிகெடுக்க வந்தவர்கள் என்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியரால் போதிக்கப்படுவது, யூதர்கள் காம்ப்-பின் தூரத்துச் புகைபோக்கியிலிருந்து வரும் புகையும் நாற்றமும் என்ன என்று அறிந்து கொள்கிற அதிகாரியின் மனைவி உடைந்து போய் அழுவது, காம்ப்-பினுள் தூரத்தில் கேட்கும் விசில் சப்தத்தைக் கேட்டு யூதச் சிறுவன் பதறித் திரும்பி ஓடுவது போன்ற காட்சிகள் மூலமாகவே பின்புலமாய் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார் இயக்குநர்.

யூதர்களை சித்திரவதை செய்யவும், அடிமைகளாக வேலை வாங்கவும், சிறுவர்களை ஜெர்மன் டாக்டர்களின் கொடூரமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், கும்பலாக காஸ் சேம்பர்களில் அடைத்துக் கொல்லவும் ஆக பெருமளவு பயன்படுத்தப் பட்ட Auschwitz கான்ஸண்ட்ரேஷன் காம்ப்-பை பிண்ணனியாகக் கொண்ட படம் என்று சொல்கிறார்கள். இசையும் அளவான வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் மிகப் பெரிய அம்சங்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் கனம் ஆகி கொஞ்ச நேரமாவது நெகிழ்வுடன் உத்தரத்தை வெறித்துக் கொண்டோ அல்லது கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டோ உட்கார வைக்கும் என்பது உறுதி.

இதைப்பற்றின மிக விரிவான கதை விமர்சனம் விரும்புபவர்கள் ஹாலிவுட் பாலா எழுதின பதிவைப் படிக்கலாம்.

புகைப்படக் கலைஞர்கள் மன்னிக்கவும்

Sony Ericsson K750i என்ற கைப்பேசியை இரண்டு வருடங்களுக்குமுன் நான் வாங்கும்போது அதில் 2 mega pixel-களையுடைய ஒரு கேமரா இருக்கிறது என்கிற அம்சம் என்னை வெகுவாக கவரவில்லைதான். இருந்தாலும் அதை வாங்கினபிறகு போகிற வருகிற இடமெல்லாம் கேமரா ஃபோனை வைத்துக் கொண்டு கிளிக்கிக் கொண்டிருப்பவர்கள் வரிசையில் நானும் அப்போது என்னையறியாமலேயே இணைந்துவிட்டிருந்தேன். எடுத்தவைகளை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தால் ஒரு படம் சுமாராக இருந்தது. ஒரு படம் சுத்த வேஸ்ட் என்று கலவையாய் அதன் ரிஸல்ட் இருந்தது. ரெண்டு மெகா பிக்ஷலுக்கு இவ்ளோதாண்டா என்றுவிட்டு கிடைத்ததையெல்லாம் படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

SE-K750i-ல் மேக்ரோ (Macro) என்றொரு அம்சம் இருந்ததும், அதன் அபாரமான பயன்பாடும் மிக தாமதமாக தெரியவந்தது. அதே நேரத்தில் எனக்குள் பாய் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரன் கண்ணைக் கசக்கி விழித்துக்கொண்டதும் வந்தது வினை. மேக்ரோ தவிர அதில் பனோரமா (panaroma), எக்ஸ்போஷர் வேல்யூ (EV) அட்ஜஸ்ட்மெண்ட், ஒயிட் பேலன்ஸ் (White balance) என்று என்னவெல்லாமோ இருக்கிறது என்றும் கண்டுகொண்டேன். சர்ரென்று ஆர்வம் உயர புகைப்படக் கலை பற்றி மேலதிக விஷயங்கள் கற்றுக்கொள்ள இணையம் உதவியது. கற்றதை பற்பல காம்பினேஷன்களில் முயற்சித்துப் பார்த்ததில் மொபைலிலேயே சில அபார புகைப்படங்கள் தேறியது எனக்கே ஆச்சரியம்.

அப்புறம் அடுத்த முயற்சியாய் சிங்கப்பூரில் வாங்கிய Sony Cybershot - 7Mega Pixel கேமரா என் ஆர்வத்தீயை மேலும் கிளறிவிட்டது. கேமரா என்பது வெறும் ஒருகருவிதான். அதில் எடுக்கப்படும் ஒரு படம் அசத்தலாக அனைவரும் பாரட்டும்படி அமைவது என்பது கேமராவிலுள்ள செட்டிங்குகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும், நமது கிரியேட்டிவிட்டியையும் பொறுத்தே அமைகிறது என்பது புரிந்தது. இந்த விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் நண்பர் கெளதம். அவரைப் பற்றி இங்கே லேசாகவாவது சொல்லவேண்டும். அவர் ஒரு Oceanographer. அடிப்படையில் பொறியாளரான கெளதம், அவரது தொழில் தவிர இன்னபிற ஏனைய விஷயங்களில் அவர் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன். சதா சர்வ நேரமும் எதையாவது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேயிருப்பவர். அதில் மிகத் தீவிரமான ஹாபியாக அவர் மேற்கொள்வது 1. ஃபோட்டோகிராபி. 2. பறவைகள் / பூச்சிகள் பற்றிய விஷயங்கள்(Birds/insects watching).

உதாணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு தும்பியை (Dragon Fly) எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வகைகள், அது எங்கேயெல்லாம் காணப்படும், எங்கே உட்காரும், என்ன சாப்பிடும், அதன் உடல் அமைப்பு என்ன, அது வாலைத்தூக்கிக்கொண்டு கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று புட்டுப் புட்டு வைப்பார். அதை நேக்காக எப்படி மேக்ரோ லென்ஸ் உபயோகித்து மிகத்துல்லியமாக புகைப்படம் எடுப்பதென்பதெல்லாம் அவருக்குத் தண்ணி பட்ட பாடு. Canon 40D என்றொரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமராவோடு மேக்ரோலென்ஸுகள், ஜூம் லென்ஸுகள், ட்ரைபாட் (Tripod) என்று ஒரு பை நிறைய அவர் வைத்திருக்கிற விஷயங்கள் ஒரு லகரத்தைத் தாண்டும். மொத்தத்தில் மிக சுவாரஸ்யமான மனிதர்.

கொஞ்ச நாள் முன்பு ஃபோட்டோகிராபி பற்றி எதையாவது சொல்லிக் கொடுங்கள் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நானும் அவரும் இன்னொரு நண்பருமாக கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஒரு ஃபோட்டோ செஷனுக்காக போயிருந்தோம். என்னுடைய சின்ன டிஜிட்டல் கேமராவை வைத்துக்கொண்டே செய்யக் கூடிய வித்தைகள் என்னென்ன என்று தெளிவாக துல்லியமாக சொல்லிக் கொடுத்தார். Focus, Aperture, Metering Mode, ISO, Histogram என்று அதில் இன்னும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். இவைகளை வைத்துக்கொண்டே ஒரு நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி? EV, ISO-க்களை அட்ஜஸ்ட்செய்யும் போது கிடைக்கக் கூடிய விளைவுகள் யாவை, கேமராவுக்குள் என்னென்ன செட்டிங்குகளில் என்னென்ன நடக்கிறது? DOF என்பது யாது? எடுக்கிற புகைப்படம் மசமசவென்று வராமல் தெளிவாக நச்சென்றிருக்க என்ன செய்யவேண்டும்? எந்தெந்த வெளிச்ச நிலைகளில் எப்படிக் கையாளவேண்டும் என்று நிறையக் கற்றுக் கொடுத்தார்.

பொறுமையாய் கற்றுக் கொண்டேன். என்றாலும் அவர் கழுத்தில் தொங்குகிற DSLR கேமராவையே நாள் முழுவதும் பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தது அதுதான் என்று முடிவு செய்துவிட்டேன். வீட்டிற்குள் கிடைத்ததை வைத்துக் கொண்டு நான் செய்கிற புகைப்பட சோதனை முயற்சிகளை மகனும் மனைவியும் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக கொஞ்சம் வித்தியாசமாய் முயற்சித்ததில் சிலதெல்லாம் நன்றாகவே வந்துவிட்டது. ஃபோட்டோஷாப் என்கிற "image editing" மென்பொருளைத் தெரிந்து வைத்திருப்பது இன்னும் கூடுதல் செளகரியம். கேமராவில் சொதப்பியதை அதில் "post processing" என்று சரி செய்துகொள்ளலாம்.

புகைப்படக்கலையில் நான் ஒரு கற்றுக்குட்டிதான் என்றாலும், உங்கள் ஹாபி என்ன என்று யாராவது கேட்டால் இதையும் சொல்லுமளவுக்குத் தேறியிருக்கிறேன். அந்தப் புகைப்படங்களை என் ஃப்ளிக்கரில் பக்கத்தில் (Flickr) காணலாம். கேமரா ஃபோனும், டிஜிட்டல் கேமராக்களும் மலிந்து போன இந்தக் காலகட்டத்தில் எல்லாருமே எப்படி புகைப்படக்காரர்களாகிப் போனார்கள் என்று ஏற்கெனவே ஒரு சின்ன பதிவு எழுதியிருக்கிறேன். ஆகவே இப்போதெல்லாம் சும்மா அப்படி இப்படி விரயமாய் மனைவி, மகன், நாய், பூனைஎன்று கிளிக்கிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாய் கோணங்கள் அமைத்து நான் இந்தப் பதிவில் ஜல்லியடித்திருக்கிற விஷயங்களுடன் கொஞ்சம் முயற்சித்துப் பார்த்ததில் புகைப்படமெடுப்பதில் எப்படியாவது அமெச்சூரிலிருந்து நிபுணர் ஆகிவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது.

ஆக, கையில் கேமராவை வைத்துக்கொண்டு எங்கேயாவது எப்போதாவது ஒரு புகைப்படக்காரர் தீவிரமாக எதையாவது ‘Focus' செய்துகொண்டிருந்தால் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். ஹி.ஹி! அது நானாகக் கூட இருக்கலாம்.

கதை படிக்கிற குரல்

ஒரு லோக்கல் வாராந்தர நியூஸ் பேப்பரில் இந்த சின்ன வரி விளம்பரத்தைக் கண்டேன்.

"Wanted a lady to read novels in Tamil to an elderly gentleman. Clarity and good voice essential. Hours required 10 am to 11.30 or 3.30 to 5.00, 6 times a week. Kindly ring ......"

லேசான ஆச்சரியமும் நிறைய கேள்விகளும் எழுந்தன.

இதை ஒரு ஓய்வு பெற்ற கனவானின் பொழுது போக்கு அம்சமாய் மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. தமிழில் கதை, நாவல் படிக்க விரும்புகிறார். அதுவும் வாரத்துக்கு 6 நாட்கள், குறைந்த பட்சம் ஒன்றரை மணி நேரம். ஓய்வு நாட்களில் தன்னை எந்த வகையிலாவது பிஸியாக வைத்துக் கொள்ள அந்த முதியவரே செய்து கொள்கிற ஏற்பாடா? இல்லை மகன், மகள், மனைவி என்று வேறு யாராவது அவருக்காக எடுத்துக் கொண்ட முயற்சியா? அவருக்குத் தமிழ் தெரியாதா? அல்லது தெரிந்தும் படிக்க சோம்பேறித்தனமா? அல்லது வேறு காரணங்களா? ஏன் அவருக்கு ஆண் குரல் வேண்டாம்? எந்த மாதிரி தமிழ் நாவல்கள்? ராஜேஷ்குமாரா, பட்டுக்கோட்டை பிரபாகரா, சுஜாதாவா? அல்லது ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போல இலக்கிய நாவல்களா? சாண்டில்யன், கல்கி? எதுவானாலும் படிப்பதோ படிக்கச்சொல்லிக் கேட்பதோ நல்ல விஷயம்தான்.

ஈஸிச் சேரில் கண்ணை மூடிச் சாய்ந்து கொண்டு ஒரு பெண்மணி பக்கத்தில் உட்கார்ந்து கணீர் என்ற குரலில் கதை படிக்க, அந்த கதா பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு அவர் ஒரு புது உலகிற்கு சஞ்சரிக்கிற காட்சி ஓடுகிறது.

“அந்த பாராவை மறுபடி படி(ங்க)”
“சுத்த இழுவையா இருக்கே. இந்த நாவல் போதும். அடுத்ததைப் படிக்கலாம்”.
“மணி பதினொன்னரை ஆயிருச்சா? சரி ’தொடரும்’ போட்ரலாம். நாளைக்கு வாங்க.”
“என்ன இன்னிக்கு குரல் கரகரங்குது? த்ரோட் இன்ஃபெக்‌ஷனா?”

என்னுடைய ரிடையர்மென்ட் காலத்தை எப்படி பிஸியாக வைத்துக் கொள்ளப் போகிறேன் என்கிற யோசிப்பை கிளறிவிட்டது இது.