Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்

"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அவனது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பாப் தலை யுவதியிடம்.
குரல் தாக்குதல் தொடர்ந்தது. பங்காருப் பேட்டையிலிருந்து சென்னைக்கே கேட்கும் போல கத்தினான். "டு யு திங் வி ஆர் ஃப்ரம் அன் இல்லிட்ரேட் ஃபேமிலி? ஹவ் கேன் யு ஆஸ்க் திஸ் கொஸ்ஸன் டு மை ஃபாதர் யு @#₹%&? வாட் இஸ் யுவர் ஏஜ்? வாட் இஸ் மை ஃபாதர்ஸ் ஏஜ்? அறிவில்ல ஒனக்கு? அட்ச்சி பல்லெல்லாம் ஒட்சிர்வேன். ஹவ் கேன் யு டெல் லைக் திஸ் டு மை ஃபாதர் ஹூ இஸ் ஃப்ரம் அ வெரி டீசண்ட் ஃபேமிலி அண்ட் ஆல்ஸோ வித் அ ரெஸ்பெக்டபிள் ப்ரொஃபெஸ்ஸன். எச்ச நாயி!. யு லுக் லைக் அ பிட்ச் ஃப்ரம் அ லோக்கல் இன் சென்னை." - உச்சஸ்தாயியில் கத்தினான்.
அந்தப் பெண்மணி சக பயணிகளைப் பார்த்து, "என்னங்க இவ்ரு இப்டி பேஸரார்? ஐ ஜஸ்ட் ஆஸ்க்டு ஹிம் - கொஞ்சம் நேரா உக்காருங்க, மேல படுது-ன்னு! இது தப்பா? வாட்ஸ் ராங் இன் தட்?"
கடோத்கஜ இளைஞன் இம்முறை மும்பைக்கே கேட்கும்படி இரைந்தான். "வாட் த ஃப்.. நீ எப்டி கேக்கலாம்? அவருக்கு அம்பத்து மூணு வயசு." இந்த சண்டையில் மேலே இடித்ததாகச் சொல்லப்பட்ட அவன் தந்தை "என்னப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? நான் என்ன பொறுக்கியா? யு ஸூட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்."
போனை எடுத்துக் காதில் வைத்தார். கடோத்கஜன் "கமிஷனர கூப்டுங்கப்பா.. இவள சும்மா விடக்கூடாது.." இதை மூன்றாம் உலகப்போராக மாற்றியே தீருவது என்கிற தீர்மானத்துடன் அவனும் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.
அப்பனும் மகனும் உறுமிக்கொண்டே கோச்சுக்குள் வேறு பக்கம் நகர்ந்து போனார்கள். அவர்கள் அந்தப்பக்கம் போனதும் இந்த அம்மணி நியாயம் கேட்டுக் கத்த ஆரம்பித்தாள். உடனே அந்தப் பையனின் அம்மா அவளிடம் வந்து ஏதோ காதில் சொல்ல, பாப்தலைப் பெண்மணி "நீங்க எதுக்கூ என் கால்லே வுளறீங்க. உங்க பைய்னை ஒழுங்கா வளக்கப் பார்ங்க. எப்டி இண்டீஸண்டா கத்றான் பாருங்க.. அதுவும் இன் சச் அ பப்ளிக் ப்ளேஸ்.. ஸ்கவ்ண்ட்ரல்.."
பையனும் அப்பனும் காதில் ஃபோனோடு திரும்பவும் சம்பவ இடத்துக்கு பரபரப்பாக வந்தார்கள். இருவர் கண்களிலும் கனல் பறந்தது. அந்தப் பெண்மணியை நெருப்பாகப் பார்த்தார்கள். பிறகு மீண்டும் ஃபோனில் ரயில்வே போலீஸ், கமிஷனர், ஐஜி, ஹை கோர்ட் ஜட்ஜ், 108 ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ், கமாண்டோ படை, சீ.பி.ஆர்.எஃப், சி.பி.ஐ, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, இடைக்கால முதல்வர், பிரதம மந்திரி, ராணுவ அதிகாரிகள், குடியரசுத் தலைவர், எஃப்.பி.ஐ, யு.எஸ். நேவி ஸீல், இஸ்ரேல் உளவு அமைப்புகள், அவன் ஆஃபிஸ் வாட்ச்மேன் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு லைன் கிடைக்காமல் 'டிடிஆரை கூப்டுப்பா..' என்றான் கடைசியாக. "ஐ வாண்ட் திஸ் ப்ளடி லேடி டு கெட் டவுன் இன் தி நெக்ஸ்ட் ஸ்டேஷன். ஸோ தட் எவ்ரிபடி இன் திஸ் ட்ரெய்ன் கேன் கண்டின்யூ திஸ் ஜர்னி இன் அ பீஸ்ஃபுல் மேன்னர். அதர்வைஸ், நான் இவளப் புடிச்சு வெளில தள்ளி கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய் பத்தே நாள்ள வெளில வந்துருவேன். பாக்றீங்களா.. பாக்றீங்களா? யாருகிட்ட? இவ அத்தினி பேரு முன்னாடியும் எங்கப்பாகிட்ட மன்னிப்புக் கேக்கணும். இல்லேன்னா நான் சும்மா விட மாட்டேன். யு ஆல் டோண்ட் நோ ஹூ ஐ ஏம். ஐ வில் ஷோ நவ்.. ரைட்ட்ட் நவ்.."
அர்னாப் கோசாமியிடம் ட்ரெய்னிங்க் எடுத்ததுபோல அவன் குரல் டெஸிபல் எக்கச்சக்கமாக உயர்ந்து ரயிலின் மேற்கூரை பிளக்கும் அபாயம் எழுந்தது. அவன் ஓங்கி அடித்தால் ரயில் தடம் புரண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
"தம்பி.. விடுப்பா.. கீப் கொயட் ஃபார் சம் டைம். தெரியாம ஏதோ சொல்லிட்டாங்க.. விடு விடு.. போய் உக்காரு" என்ற ஒருவரை.. "உங்கப்பாவ யாராச்சும் தப்பா பேசினா கேட்டுட்டு சும்மா இருப்பீங்களா?" என்று கேட்டான். கேட்டவர் காதில் நிச்சயம் ஓட்டை ஏற்பட்டிருக்கும். சத்தம் அப்படி!
பாப்தலை கோபம் தலைக்கேறி திடீரென்று "அ யம் காலிங் த போலீஸ் நவ்.."என்று அறிவித்தாள். போனை எடுத்தாள்.
" கூப்டுறீ.. பொறம்போக்கு.. வரச் சொல்லு.. நாங்க இங்கதான் இருப்போம். பெரியவங்ககிட்ட எப்டிப் பேசணும்னு தெரியாத எச்சக்கல.." துணைக்கு அப்பங்காரனும் சேர்ந்துகொண்டார்.
நான் பொறுமையிழந்து.."ப்ரதர்.. விடுங்க.. போய் உக்காருங்க. ஒரு சின்ன விஷயத்துக்கு ஏன் இப்டி கோபப்படறீங்க... அமைதியா இருங்க.." என்றேன். அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'உன்னையும் ரயிலிலிருந்து தள்ளி விடுவேன்" என்கிற பதில் இருந்தது.
தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அவன் அம்மா எழுந்து இருவரிடமும் "போதும் விடுங்க.. ப்ளீஸ்.." என்று கும்பிட்டுக் கெஞ்ச, பவுன்ஸர் பாய் கண்களை உருட்டி "அம்மா.. இது சும்மா வுட வேண்டிய பிரச்னயில்ல. நீ பேசாம உக்காரு.. அயம் டாக்கிங் டு அ தேர்ட் ரேட்டட் பன்னாட ஹூ ஹேஸ் டிஸ்ஹானர்ட் யுவர் ஹஸ்பண்ட் இன் அ பப்ளிக் ப்ளேஸ்.. மைண்ட் இட்... நீ இப்டி அவளுக்கு வக்காலத்து வாங்கினா மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பா..."
அவனை அடங்கி உட்காரச் சொல்லி ரயிலுக்குள் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவனோ 'அவள எங்கப்பாட்ட மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க..' என்கிற ஒரே தீவிரவாதக் கோரிக்கையை திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருந்தான்.' இந்தக் களேபரத்துக்கு நடுவில் "பஜ்ஜீ.. சூடான வடேய்ய்ய்ய்.." என்று இடைபுகுந்தவனுக்கு வழிவிட்டு .."நீங்க போங்கண்ணா.. போய் வ்யாபாரத்தப் பாருங்க.." என்றுவிட்டு ஆடியன்ஸிடம்.. "ஹவ் டேர் ஷீ.. " என்று மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தான்.
ஒரு மிகப்பெரிய கோர சம்பவம் இந்த ரயிலில் நிகழப் போவதை அறியாமல் என் பக்கத்து இருக்கைக்காரர் மொபைலில் 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' பார்த்துக் கொண்டிருந்தார். எதிர் ஸீட்டு ஜடாமுடி இளைஞன் சரசர சத்தத்தோடு "லேஸ்' பாக்கெட்டைக் காலி செய்துகொண்டே என்னிடம் 'அயம் ப்ரெத்தி ஸ்ஸ்ஸ்யூர் தத் தீஸ் கைஸ் கான்னா எந்தத்தெய்ன்ன்ன் அஸ் ஃபார் நெக்ஸ்த் தூ அண்த் ஹாஃப் அவஸ்.." என்றான்.
"பட்டப் பகலில் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டு பெண்.." என்று நான் தினத்தந்தி தலைப்பு யோசித்துக் கொண்டிருக்கும்போது டிடிஆர் வந்தார். என்ன ப்ரச்ச்னை என்று குசுகுசுவென்று கேட்டார். அவனது கத்தலை அவர் லாகவமாகக் கையாண்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து "நான் உங்களுக்கு வேற ஸீட் தர்ரேன்.. வாங்க" என்று பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குக் கூட்டிப் போனார். கடைசிவரை மன்னிப்பெல்லாம் கேட்காமல் "பாஸ்டர்ட்ஸ்.." என்று சன்னமாய் சொல்லிக்கொண்டே டிடிஆரின் பின்னால் போனாள். தடியன் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தான்.
அவள் போன திசையைப் பார்த்து ஹிஸ்டீரியா வந்தவனைப் போல "ஐ வில் கில் யூ" என்று கத்தினான். கொஞ்ச நேரத்தில் குரல் தளர்ந்து இருக்கையில் விழுந்தான். பிறகு ரயிலின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. நான் எழுந்து பாத்ரூம் போகும் வழியில் அவனைப் பார்த்தேன். வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்நியனிலிருந்து அம்பியாக மாறியிருந்தான். ஒரு கருட புராண கபீம் குபாம் தவிர்க்கப்பட்ட நிம்மதியுடன் அனைவரும் தத்தம் மொபைல்களில் மீண்டும் அமிழத் தொடங்கினார்கள்.

மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

குறுநூல் - சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்

 சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை, அனுபவங்களை சிறு சிறு குறிப்புகளாக வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் அவற்றை எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.

பின்னர் ’குறுநூல்’ ஐடிவாவை திரு. சொக்கன் சொன்னபோது பேசாமல் இதை குறுநூல் ஆக்கிவிடலாம் என்று தோன்றியது. அவருக்கு என் நன்றிகள். 

இது விலையில்லாப் புத்தகமாக இப்போது கூகுள் புக்ஸில் கிடைக்கும். இதை நீங்கள் டவுன்லோடு செய்தபிறகு மற்றவர்களுக்கும்கூட பகிரலாம்.

சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு அதன் அதிசயங்களை, சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிற அளவில் மட்டுமே இந்த நூல் இருக்கும்.

கூகுள் புக்ஸில் இந்த மின்னூலைப் பெற இங்கே க்ளிக்கவும்.

காலிக்கட்

ஒரு சில தினங்கள் முன்பு மாமா பெண்ணிற்குத் திருமணம் என்ற வகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குள் பிரவேசிக்க வாய்ப்புக் கிடைத்தது.  நடந்த இடம்: காலிக்கட் என்று பிரிட்டீஷாரால் திரிக்கப்பட்ட கோழிக்கோடு.

தென்னக ரயில்வேயின் இரண்டாம் வகுப்புப் பயணப் பெட்டியில் சென்னையிலிருந்து பன்னிரண்டு மணி நேர பயணம். இடையிடையே ஏதேதோ ஸ்டேஷன்களில் ஏறி ரிசர்வேஷன் ஸீட்டுக்களை அனுமதியில்லாமல் ஆக்கிரமிக்கிற பிரயாணிகள், கழிப்பறை நாற்றம், குடும்ப சமேதம் இருக்கைகள் முழுக்க ஊர்கிற கரப்பான் பூச்சிகள், நடு இரவில் மற்றவர் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் இரைந்து பேசுகிற ஹிந்திக்காரர்கள், மொபைலில் FM பாட்டு போன்ற எல்லா உபாதைகளும் காலையில் கேரளத்தின் கோடானு கோடி தென்னை மரங்களைப் பார்த்ததும் மறந்துவிட்டது. பசுமை, மரங்கள், நீர் நிலைகள், பரந்து விரிந்து கிடந்த கல்லாயி ஆறு, வயல்கள், வரப்புகள், தோப்புகளுக்கு நடுவே தரவாட்டு மச்சுவீடுகள் என குளுமையாய் விரிகிற காட்சிகளில் மனம் மயங்கிவிட்டது.

Vasco da Gama
கோழிக்கோடு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடா காமா 1498-ல் மூன்று கப்பல், 170 ஆட்கள் சகிதம் கடல்வழிப் பயணமாக இங்குதான் வந்திறங்கினார். முன்னாளில் மலபாரின் பகுதியாக இருந்த ஒரு நகரம்.

வசிப்பிடங்கள் பற்றிய ஒரு ஆய்வில் கோழிக்கோடு என்பது இந்தியாவில் வசிப்பதற்கேற்ற இரண்டாவது சிறந்த நகரம் என்று சொல்கிறார்கள். அது உண்மைதான் என்று நினைக்கும் வகையில் ஓரிரு விஷயங்கள் தென்பட்டன. சுத்தமாக இருக்கும் சாலைகள். மீட்டர் போடும் ஆட்டோக்கள். ரொம்ப இரைச்சல்கள் இல்லாமல் லேசாகத் தெரியும் சிறு சதவிகித சிங்கப்பூர்த்தனம்.

எங்கு பார்த்தாலும் ”ஊதும் அத்தரும்” என்று மலையாளத்தில் எழுதப்பட்ட ஏராளமான செண்ட் கடைகள் இருக்கின்றன. பக்கத்தில் போனால் கமகமவென்று மணக்கிறது. சவுதியிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் போலும். அடுத்த நாள் பக்ரீத் அன்று கோழிக்கோட்டின் பெரும்பாலான கடைகள் விடுமுறையாக இருந்தன. எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் என தமிழ்ப்பட போஸ்டர்களைக் காண முடிந்தது.

Calicut Beach
இரண்டு நாள் பயணம் என்பதால் திருமண மண்டபத்தைவிட்டு அதிகம் வெளியே செல்ல முடியாத சூழல் இருந்தது. கிடைத்த அவகாசத்தில் ஆட்டோவுக்கு ரூ 22.50 கொடுத்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தென்னைமரங்களுடன் கூடிய ஒரு கடற்கரைக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அதிகம் அலைகளில்லாமல் அமைதியான அரபிக்கடல். மேலே வட்டமிடும் ஏகப்பட்ட பருந்துகள் மற்றும் காக்கைகள். என்னடாவென்று உற்றுப் பார்த்தால், ரோமங்களுடன் கூடிய இரைச்சித் துண்டங்கள், குடல்கள், எலும்புகள் என்று எக்கச்சக்கமாய் கரை ஒதுங்க ஆரம்பித்தன. ஏதோ ஒரு பெரிய விலங்கினை துண்டு துண்டாய் வெட்டி கடலில் தூக்கி எறிந்த மாதிரி. அவைகளைக் கொத்திக் கொண்டு பறக்கும் காக்கைகளும் பருந்துகளும்.

ஒரு பரவசமான மனநிலைக்கு திருஷ்டியாய் அமைந்தது இந்தக் காட்சி மட்டுமே.

ரோம் - பயணக் கட்டுரை

'இத்தாலியிலுள்ள ரோம் ஒரு அழகிய நகரம். அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்' என்று ட்விட்டரில் எழுதிவிட்டுப் போய்விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படியே எழுதிப் போட்டாலும் ட்விட்டரில் இன்னும் 39 எழுத்துக்கள் மிச்சமிருக்கும் என்பதாலும், மிகத் தொன்மையான நகரமான ரோமின் உலகளாவிய பேரழகை இப்படி ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் போனால் 16-ஆம் நூற்றாண்டு ரோமாபுரி பேரரசர்களின் ஆவிகள் என்னை மன்னிக்காது என்பதாலும் ஒரு சிறிய பதிவாகப் போட்டுவிடுகிறேன்.

நான் முதலில் சென்று இறங்கிய இடம் லியனார்டோ டாவின்ஸி ஃபியுமிசீனோ விமானநிலையம் என்றெல்லாம் எழுதி உங்களுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணப் போவதில்லை. இறங்கின இடமும் திரும்பிய இடமுமா முக்கியம்? எப்போதும் மெயின் பிக்சர்தானே நமக்கு முக்கியம். ஆகவே நேராக தெருவில் இறங்குகிறேன். ஒரு நகரம் என்பது தெருக்களின் தொகுப்புதானே?

இத்தாலிய மொழியில் ரோமா என்றும் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரோமை நகரம் என்றழைக்கப்படும் இந்நகரமானது கி.மு.753-ல் அமைக்கப்பட்டு அப்போதிருந்தே மக்கள் வசிக்க ஆரம்பித்த வரலாற்று விவரங்கள் எல்லாம் நேரமும் வாய்ப்பும் இருந்தால் இன்னொரு பதிவில் விவரமாய் எழுதி விடுகிறேன். ஏனென்றால் இது ஒரு மிகச் சிறிய பயணக்கட்டுரை மட்டுமே.

"All roads lead to Rome" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. உலகம் முழுவதுமுள்ள, பயணங்களை விரும்புகிற மக்கள் அனைவருக்குமான வாழ்நாள் டூரிஸ்ட் டெஸ்டினேஷன் இது. பின்னே உலகின் மொத்த அழகும் இங்கேயே கொட்டிக்கிடந்தால் மக்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

ரோமுக்குள் நுழைந்தவுடனேயே வாட்டிகன் மியூசியம், போர்கீஷ் காலரி மற்றும் ம்யூசி கேப்பிடோலினி, கலோசியம் ஆகிய நான்கையும் முதலில் பார்த்துவிடவேண்டுமென்று ஒரே துடிப்பாய் துடித்தது மனது. (இந்த மாதிரி இடங்களின், தெருக்களின் பெயர்களை நான் சரியாக உச்சரிக்கவில்லை எனில் இத்தாலிய மக்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயமும் இருந்தது). ரோம் பற்றியெரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த இடம் எங்கேயிருக்கிறதென்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வருவார்களோ என்ற யோசனையுடன் ஊர் சுற்றக் கிளம்பினேன்.

ரோமர்கள் அவர்களது ஆட்சிக்காலத்தில் ரொம்ப போரடித்தால் உயர உயரமாய் தூண்கள் வைத்து வானளாவிய கட்டிடங்களை எழுப்புவார்கள் என்று கருதத்தக்க வகையில் பிரம்மாண்டங்கள், சிதிலங்கள், வரலாற்று மிச்சங்கள், புராதனம், வெள்ளையும் கருப்புமாய் மிகப் பெரிய சிலைகள். நம்மூரின் கட்டிடங்களுக்கும் ரோமாபுரியின் கட்டிடங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!! ரோமர்களின் ஆர்க்கிடெக்ச்சர் நுட்பங்கள் அப்படி வியப்பளிப்பதாக இருக்கிறது. அதுவும் கட்டிடங்களில் இந்தத் தூண்கள் இருக்கிறதே! அப்படி ஒரு ஆகிருதி. ஒவ்வொரு தூணும் பத்து பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கவேண்டும் என்பது போல் இருக்கின்றன. ஆனால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அது நடக்காது. அவ்வளவு உயரம். ஆக ரோம்-ஐ தூண்களின் நகரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரோமன் ஹாலிடேஸ் என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் நான் கண்ணுற்ற ரோம் இப்படி வண்ணமயமாய் காணக் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. இதை நினைக்கும் இதே நேரம் அந்தப் படத்தில் நடித்த அந்நாள் அழகுப் பதுமை ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) பற்றியும் ஒரிரு விநாடிகள் மறைந்த எழுத்தாளர் ஆதவன் உபயத்தால் நினைவு கூர முடிந்தது.

Piazza Venezia (நகரத்தின் இதயம் என்று பொருள்படும்) என்கிற இடத்தில் Altare Della Patria என்ற புராதன வரலாற்று கட்டிடம்... ச்சே!! அதை கட்டிடம் என்று சொல்லுவது ரோமாபுரிவாழ் மக்களைக் கேவலப்படுத்துவது போலாகும் - ஆகவே அரண்மனை? சரி.. ஏதோ ஒன்று. இங்கும் மறுபடி பிரம்மாண்ட தூண்கள். இதற்குமுன் இருக்கும் ஒரு மிகப் பெரிய சிலையருகே என்னைப் போலவே உலகமெங்குமிருந்தும் வருகை புரிந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் காணமுடிந்தது. இதுபோல எண்ணற்ற கட்டமைப்புகள். எண்ணற்ற பழங்காலச் சின்னங்கள். எண்ணற்ற.. எண்ணற்ற.. ம்ம்.. சரி விடுங்கள்.

ரோமிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கட்டிடத்துக்குள்ளும் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் (விடுவார்களா தெரியவில்லை) என்கிற அளவுக்கு எல்லாமே அழகழகாய் இருக்கின்றன. நம்புங்கள்!! ரோம்-ல் உள்ள எல்லா இடங்களையும் ரசித்து அனுபவித்துப் பார்க்க வேண்டுமென்றால் நம் ஆயுள் போதாது என்று தோன்றிவிட்டது. ஏனென்றால் அவைகளையெல்லாம் கட்டி முடிப்பதற்கே அவர்கள் ஆயுள் போதவில்லை பாருங்கள். எனக்குக் கூட எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறது. அத்தனை அத்தனை..

அதே மாதிரி சர்ச்சுகளை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய லிஸ்ட்டே போடுமளவுக்கு இருக்கிறது என்றார்கள். யாராவது ஏற்கனவே அந்த லிஸ்ட்டைப் போட்டிருப்பார்கள் என்பதால் நான் அதை செய்யவேண்டாமென்று தீர்மானித்தேன். ஆனால் நான் பார்த்தவரையில் எனக்கு எந்தச் சர்ச்சும் கண்ணில் படவில்லை. அல்லது பார்த்தது எல்லாமே சர்ச்தானா?

சிங்கப்பூர் மாதிரியே சாலைகள் படு சுத்தம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து யாரோ கூட்டமாய் இறங்கிவந்து இரவோடு இரவாக குப்பைகளை அள்ளித் துடைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கும்படிக்கு அபார சுத்தம். ஆனால் பார்த்த சில இடங்களில் உறுத்தின ஒரே விஷயம் கார்களும் ஸ்கூட்டர்களும் (டூ வீலரில் அதிகம் ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்) பல இடங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான். நேனோ மாதிரி குறுங்கார்கள் நிறைய கண்ணில் பட்டன. சர்வசாதாரணமாக ஏழு எட்டு சாலைகள் ஒருங்கே சந்திக்கும் வீதி முக்குகள் இருக்கின்றன. இந்த மாதிரி முக்குகள் நம்மூரில் இருந்து வீதி முனையில் ட்ராஃபிக் போலீசை நிற்கவைத்தால் முழி பிதுங்கிவிடுவார் என்று நினைக்கும் போது பாவமாக இருந்தது. ரோமில் மக்கள் தொகை குறைவு என்பதால் ’பாரத் பந்த்’ தினம் மாதிரி நிறைய சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எங்கேயும் போக்குவரத்து நெரிசலே இல்லை. Iron Man, Saw IV போன்ற ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் வாசலில் நான்கே நான்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருக்க மொத்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நம்மூர் தாழ்தள சொகுசுப் பேருந்தின் பத்தாவது வெர்ஷன் மாதிரியான பஸ்கள் நல்ல சிவப்பு நிறங்களில் சாலையெங்கும் ஓடுகின்றன. மக்கள் நவீனமாக வண்ணமயமாக உடையணிகிறார்கள். பெரிய கொட்டை எழுத்துக்களில் பார்கள் நம்மை இழுத்து வரவேற்கின்றன.

ரோமில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் யாவை என்று குத்துமதிப்பாக ஆராய்ந்ததில் கீழ்கண்ட லிஸ்ட் கிடைத்தது. மேற்சொன்ன வாட்டிகன் ம்யூசியம் இன்னபிற இடங்கள் தவிர Colosseum, Trevi Fountain, Spanish Steps, Villa Borghese, Galleria Doria Pamphilj, Castel Sant'Angelo, Via Condotti, Piazza del Popolo, Imperial Forum, St. Peter's Basilica, Piazza Navona என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. வாயிலும் பிறகு ஞாபகத்திலும் நுழையாத பெயர்கள் என்றாலும் எல்லாவற்றையும் எப்போது பார்த்து முடிப்பது என்று மலைப்பாக இருந்தது. ஷாப்பிங் போகவேண்டும் என்றால் Piazza Spagna என்ற இடத்திற்கருகிலுள்ள (ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்-க்கும் கூட இது பக்கந்தான்) ஷாப்பிங் ஏரியா மிகப் பிரபலமாம். சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் மாதிரி ஏதேனும் சல்லிசாகக் கிடைக்குமா என்று விசாரிக்கவேண்டும்.

Piazza Spagna என்றதும் பீட்சா ஞாபகம் வந்து திடீரென பசிக்கிற மாதிரி இருந்தது. எங்கேயாவது நல்ல பீட்சா கார்னர் தென்படுகிறதா என்று Via Cola di Rienzo பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி. கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு “ஏய்.. நீ எப்படி இங்க.. ரோமாபுரி-ல?” என்று கேட்பதற்குள் மனைவி முறைத்தபடி.. “ஒக்காந்த எடத்துலயே ஒலகம் சுத்தினது போதும்.. தோசை ஆறுது. வந்து சாப்டுங்க”.

எனக்கும் கூட கூகுள் மேப்ஸ் Street View-இல் உரோமிய வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலது கை ஆள்காட்டி விரல் ரொம்ப வலியெடுக்க ஆரம்பிக்க (மவுசை கிளிக்கி கிளிக்கி) கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு தோசை சாப்பிடக் கிளம்பினேன். நாளைக்கும் இதே மாதிரி ஒரு நடை ஸ்விட்சர்லாந்து போய்வரவேண்டும்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோ 1 : ஓரிரு வருடங்களுக்குமுன் நன்றாய் வெயில் கொளுத்துகிற ஒரு மதிய நேரம். நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள். கோவை சாயிபாபா காலனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தயிர் சாதமும், எலுமிச்சைச் சாதமும் இருபத்தைந்து பொட்டலங்கள் ஆர்டர் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறோம். அடுத்தநாள் மதுரையில் நடக்கவிருக்கும் ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு மதியம் ஒண்ணரை மணி ட்ரெயின் பிடித்து 25 பேர் போகிறோம். எல்லோரும் மதிய உணவை ட்ரெயினிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று சாப்பாடுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பை எங்களிடம் விட்டிருந்தார்கள். பொட்டலங்கள் வந்தன. அவற்றை சேகரித்துக்கொண்டு மணி பார்த்தபோது ஒன்று ஆகியிருந்தது. மீதி 22 பேரும் இந்நேரம் ட்ரெயினுக்கு வந்திருப்பார்கள். நாங்கள் இன்னும் அரை மணிக்குள் ரயில் நிலையம் போக வேண்டும். சரி ஒரு ஆட்டோ பிடித்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினோம். கைதட்டினவுடன் அரை வட்டமடித்து ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஏறிக்கொண்டு எங்கள் அவசரத்தைச் சொன்னோம். நிதானமாய்ப் போனால் போதும் என்றும் உபரியாய் சொல்லி வைத்தோம். ஆட்டோ கிளம்பியது.

ஒரு அரை ஃபர்லாங் கூட போயிருக்கமாட்டோம். ஒரு வளைவில் ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர் ஸ்டைலாய் திரும்ப, சட்டென்று அந்தக் குறுக்கீட்டில் சுதாரிக்க முடியாமல் யமஹாவின் மீது டமால் என்று நேருக்கு நேர் மோதல். அப்புறம் நடந்ததை எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை. ஒடித்துத் திருப்பியதில் ஆட்டோ நிலை தடுமாறி சைடில் கவிழ்ந்து, இரண்டு முறை உருண்டு செத்த பல்லி மாதிரி சொத்தென்று தலைகீழாய் வீழ்ந்தது தரையில். நேராய் பார்த்தபோது வானம் தெரிந்தது. ஓ! நான் ஆட்டோவுக்கு அடியில் கீழே கிடக்கிறேன். நெஞ்சுப்பகுதி விலா எலும்பில் வலி உயிர் போகிறது. அலங்கோலமாய்க் கிடந்த எங்கள் மூவரையும் யாரோ வந்து தூக்கிவிட்டார்கள். எனக்குக் கைகால்கள் நடுங்குகின்றன. மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சையான ஆட்டோ ட்ரைவரைச் சுமந்து கொண்டு இன்னொரு ஆட்டோ ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. ரோடெங்கும் தயிர்சாத, எலுமிச்சைச் சாத பொட்டலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

ஆட்டோ 2 : நான். என் நண்பர். அவர் மனைவி, குழந்தை. சென்னை சென்ட்ரலிலிருந்து எங்களைச் சுமந்துகொண்டு தி. நகருக்கு விரைகிறது அந்த ஆட்டோ. ட்ரைவர் அப்போதுதான் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துவிட்டு வருகிறார் போல. கச கசவென்று வாகனங்கள் விரைகிற மெளண்ட் ரோட்டில் முறுக்கிப் பிடித்து அமுக்குகிறார் ஆக்ஸிலேட்டரை. சிக்னல்களில் ஆரஞ்சு விழுந்தாலும் மதிக்காமல் பறக்கிறது ஆட்டோ. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது எப்படி என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நண்பர் ட்ரைவரைக் கூப்பிட்டு இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார். எங்களுக்கு அவசரமில்லை. மெதுவாகவே போகலாம். அதற்கப்புறம்தான் ஜேம்ஸ்பாண்டுக்கு உற்சாகம் பீறிட்டுவிட்டது. ஆக்ஸிலேட்டரே பிய்ந்துபோகுமளவுக்கு முறுக்க ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாய் உயிர் பயத்தை மிகவும் உணர்ந்தது அன்றுதான் எனலாம். ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு ஈடான த்ரில் அடி வயிற்றில் பந்தாய் உருள்கிறது. சரி! இந்தாள் பாச்சா உஸ்மான் ரோடு வந்தால் பலிக்காது. அங்கே நெரிக்கிற ட்ராஃபிக்குக்கு வேகத்தைக் குறைத்தே ஆகவேண்டும். ஆனால் நாம் வாழ்க்கையில் தப்புக்கணக்குப் போடுகிறோம்.

உஸ்மான் ரோடு வந்ததும் ட்ரைவர் நாங்கள் மயிர்க்கூச்செரியும் வகையில் ஒரு காரியம் செய்தார். அவர் இருக்கையிலிருந்து டக் என்று எழுந்து நின்று ஓட்ட ஆரம்பித்தார். வளைந்து வளைந்து லாவகமாய் வழியில் நிறைய பேருக்கு உயிர்ப்பிச்சையிட்டபடி ஆட்டோ பாய்கிறது. ஒரு வழியாய் தப்பித்து வீடு வந்து சேர்ந்தோம். நண்பர் 'நீ ஓட்டின ஓட்டுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்' என்று சொல்லிவிட்டு பேசினதில் பாதித் தொகையை மட்டும் கோபத்துடன் அவனிடம் வீசி விட்டு திரும்பி வீட்டுக்குள் போய்விட்டார். கொஞ்ச நேரம் புலம்பிக்கொண்டிருந்துவிட்டு ஆட்டோ அரைவட்டம் போட்டுத்திரும்பிப் போனது.

ஆட்டோ 3 : மறுபடியும் சென்ட்ரலிலிருந்து ஒரு பயணம். இந்தத் தடவை என் அக்கா குடும்பம். இரண்டு குழந்தைகள். இந்த ஆட்டோ ட்ரைவர் இன்னொரு ஜேம்ஸ்பாண்டு. சீறிப் பாய்ந்து கிளம்பிய அந்த ஆட்டோவின் ட்ரைவர் எங்களை கதிகலங்க வைக்கப் பண்ணின முதல் காரியம் சர் என்று ஒரு ஒருவழிப் பாதைக்குள் புகுந்தது. எதிர் வரும் வாகனங்கள் நிலைதடுமாறி ஒதுங்க.. ஆட்டோ ட்ரைவருக்கு எந்தக் கவலையுமில்லை. நான் அவரைக் கூப்பிட்டு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஆனால் வேகத்தை துளியேனும் குறைப்பது அவமானமாய் போய்விடும் என்று நினைத்தார் போலும். மேலும் திடீரென்று ஹாண்டில் பாரிலிருந்து இரண்டு கையையும் விட்டு சர்ட் காலரை ஸ்டைலாய் இழுத்துவிட்டுக்கொண்டார். பிறகு ஒரு பான்பராக் பாக்கெட்டை லாவகமாய் பிரித்து வாயில் அடக்கினார். ஆட்டோ ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப்பட்டார்போல அதுபாட்டுக்கு தேமே என்று போய்க்கொண்டிருக்கிறது. நான் மற்றும் என் அக்கா குடும்பம் கிடைத்த கம்பிகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப்போய் உட்கார்ந்திருந்தோம். போக்குவரத்து விதிகள் என்று என்னென்ன இருக்கிறதோ அது அத்தனையையும் ஒன்று விடாமல் மீறின ஒருத்தனை அன்றுதான் பார்த்தேன். ராயப்பேட்டை பாலம் தாண்டின அந்தப் பெட்ரோல் பங்க் அருகில் இன்னொரு ஆட்டோ பெட்ரோல் போட சரேலென்று திரும்ப ட்ரைவர் நிதானமிழந்து ஆட்டோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து.. டமார் என்று நேருக்கு நேர் மோதி.. அதன் தாக்கத்தில் ஆட்டோ இடப்பக்கம் சாய்ந்து கிட்டத்தட்ட கவிழப்போய் பின் என்ன நினைத்ததோ இரக்கம் கொண்டு பழைய நிலைக்கே ஆடி நின்றது. அன்று குழந்தைகள் இருவரும் கத்திய கத்தல் இன்னும் காதுக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு வாய்த்த இன்னும் சில மோசமான ஆட்டோ அனுபவங்களை இங்கே சொல்லவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படி வாய்த்ததா என்றும்கூட நினைத்ததுண்டு. குறிப்பாய் சென்ட்ரலிலிருந்து வேறு வேறு திசைகளுக்குப் பயணிக்கிற ஆட்டோக்கள் மட்டும்தான் இப்படியிருக்கிறதோ என்று ஒரு சந்தேகமும் உண்டு. திரும்பி வந்து அடுத்த ட்ரெயினிலிருந்து இறங்குகிற கூட்டத்திலிருந்து சவாரி பிடிப்பதற்கான அவசரம்தான் அவர்களை இவ்வளவு வேகமாக ஓட்டத் தூண்டுகிற காரணம் என்று நினைக்கிறேன். என்றாலும் குடும்பமாய் குழந்தைகளையும், லக்கேஜையும் சுமந்துகொண்டு நம்பிக்கையாய் பயணம்போகிறவர்களின் உணர்வுகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்று புரியவில்லை. ஒரு நிதானத்துடன், பயணிகளின் மற்றும் சாலையில் நடக்கிறவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டும் ஆட்டோ ட்ரைவர்கள் ரொம்பக் குறைவே என்று தோன்றுகிறது. ஒரு அவசரத்துக்கும் செளகரியத்துக்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இந்த ஆட்டோப் பயணம் காசையும் கொடுத்துவிட்டு கலவரத்தை அடிமடியில் கட்டிக்கொண்டு போகும் விஷயமாகவே படுகிறது. மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. நிஜமாகவே அட்வெஞ்சரில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே ஒரு சில ஆட்டோக்களை முயன்று பார்க்கலாம்.

"சார் ஆட்டோ வேணுமா?" என்று குரல் கேட்டால் இப்போதெல்லாம் வேகமாய் திரும்பி நடந்துவிடுகிறேன்.