புத்தாண்டுத் தீர்மானங்களைப் பற்றி ரகளையாய் பலவித மீம்ஸ்கள் உலாவரும் இக்காலகட்டத்தில் இதைச் சமூகத்துக்கு சொல்லலாம் என்று தோன்றியது. New year resolutions என்பது ஒரு கிளர்ச்சி மனநிலையில் தோன்றுவது என்பதால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்காது. உலகம் முழுவதும் மக்கள் திடீர் ஆரோக்கிய resolution எடுத்துவிட்டு ஜனவரி ஒண்ணாம் தேதி முதல் வாக்கிங் போக ஆரம்பிப்பார்கள். நடைபாதையெங்கும் கூட்டம் அம்மும். ஒரு வாரத்திற்கப்புறம் காற்று வாங்கும்.
Resolution எடுப்பதற்குப் பதிலாக 'SMART Goal Setting' - ஐ முயன்று பார்க்கலாம். நிறுவனங்களில் இது பிரபலம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்த வருடத்தில் இதைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தால் அதை எப்படி அளப்பது (Measure) என்பதையும் வரையறுத்துவிடவேண்டும்.உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். இந்த வருடம் சில சிறுகதைகள் எழுதவேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். இந்த 'சில' என்பதற்கு வரையறை கிடையாது என்பதால் இதன் மேலுள்ள கவனம் சிதறி கொஞ்ச நாட்கள் கழித்து இலக்கானது நீர்த்துப்போய்விடும். ஆகவே மார்ச் 30-க்குள் மூன்று சிறுகதைகள் என்று வரையறை செய்யவேண்டும். இந்த நம்பர்கள் மனதில் பதிந்து அதற்குத் தகுந்தார்ப்போல் நீங்கள் திட்டமிடத் துவங்குவீர்கள்.
உங்களுக்கு 'எடை குறைப்பது' என்பது இலக்கு எனில் 'ஜூன் மாத இறுதிக்குள் பத்து கிலோ குறைப்பு' என்பது அளக்கக் கூடிய வரையறை. அதை நோக்கி ஓடலாம். இப்படி எல்லாவற்றிற்கும் ஏதாவது எண்களை இணைத்துவிடுவது உங்கள் இலக்கை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தொடர்சியாக அதை நோக்கி நகர முடியும். அதுவே ஒரு உத்வேகத்தையும் கொடுக்கும்.
நூறு நாட்கள், நூறு படம் வரைவது என்கிற சவாலை நான் சென்ற வருடம் ஏற்றபோது இதுதான் நிகழ்ந்தது. எதைச் செய்கிறோம், செய்துகொண்டிருக்கிறோம், இன்னும் அடைய வேண்டிய தூரம் என்ன என்கிற தெளிவை இது கொடுத்தது. 100% வெற்றியும் கிட்டியது.
இப்படி எல்லாவற்றிற்கும் எண்களை இணைத்துவிடமுடியாதுதான். உதாரணத்துக்கு 'குடும்பத்தினருடனான தனிப்பட்ட உறவை மேம்படுத்துவேன்" என்பதை நீங்கள் நோக்கமாகக் கொள்வீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை எப்படி அளக்கமுடியும்? இங்கே நம்பர்கள் உதவாது. குடும்பத்தினர் முகத்தில் கூடும் புன்னகைகளும், அதிகரிக்கும் இனிய பொழுதுகளும்தான் இதற்கான அளவை. இதைக் கவனித்துக்கொண்டே வரவேண்டும். இதுதான் கணக்கு!
SMART Goals பற்றித் தெரியாதவர்களுக்காக:
Specific, Measurable, Achievable, Relevant, and Time-Bound. என்பதன் சுருக்கமே SMART.
இலக்கானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக, அளக்கக்கூடியதாக, அடையக்கூடியதாக, தொடர்புடையதாக, நேர வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
உதா: இந்த வருடம் சில சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிடுவது என்பது என்பது உங்கள் இலக்கானால் அதை இப்படி எழுதி வையுங்கள்:
2023 டிசம்பர் 31-க்குள் மூன்று மாதத்திற்கு ஒரு இடம் என்கிற கணக்கில், தென்னிந்தியாவில், வாகேமான், கூர்க், பாண்டிச்சேரி, மைசூர் ஆகியவைகளை பார்த்துவிடவேண்டும். இதற்கான பட்ஜெட் இருக்கிறதா, உடல்நிலை, காலநிலை, குடும்ப சூழ்நிலை ஒத்து வருமா என்பதெல்லாம் Achievable வகையில் வரும். மற்றதெல்லாவற்றையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
நான் இந்த வருடத்திற்கு இப்படித்தான் Goal போட்டு வைத்திருக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்களும் இதை முயன்று பார்க்கலாம்.