Showing posts with label என்.சொக்கன். Show all posts
Showing posts with label என்.சொக்கன். Show all posts

நான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் சமூகத்திற்கு ‘சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்’ கற்றுக்கொடுக்க தமிழில் ஒரு புத்தகமெழுதினால் என்ன என்று எழுத்தாளர்கள் என்.சொக்கனும், சத்யராஜ்குமாரும் விவாதித்துக்கொண்டிருந்த கட்டத்தில் என்னையும், காஞ்சி ரகுராமையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தார்கள். காஞ்சி ரகுராமாவது 100% அக்மார்க் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் ஆசாமி. நான் எதற்கு சம்பந்தமில்லாமல் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதில் என்னுடைய பங்களிப்பை அறிந்துகொள்ள சொக்கன் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு நான் எழுதிய பதில் இது.ஜிமெயில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டதை இங்கே பதிகிறேன்.

*****************

அன்புள்ள சொக்கன்,

யாதும் நலம்.

உங்கள் ஐடியா கண்டிப்பாக சிரிக்கத் தகுந்த பொருளல்ல. மாறாக ப்ரோக்ராமிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிற ஆனால் அதை இங்கிலீஸில் படித்து மண்டை உடைத்துக் கொண்டவர்களுக்கு (கொள்பவர்களுக்கு) பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆசையின் உன்னத வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.

நான் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள முனைந்தபோது அதை எனக்குச் சொல்லித்தர லைஃப்டைம் ரிஸ்க் எடுத்து தன் (என் அல்ல) நேரத்தை வீணடித்தவர் சத்யராஜ்குமார். சில நேரங்களில் என் மக்கு மண்டையில் நறுக் என்று குட்டவேண்டும் என்கிற கோபத்தை அடக்கிக் கொண்டு எப்படி எனக்கு பொறுமையுடன் சொல்லித்தர முயற்சித்தார் என்று மிகுந்த ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் கடைசியில் விழலுக்கிறைக்கிற நீர் என்று ஒரு வழியாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஏன் ப்ரோக்ராமிங் என்பது எனக்கு அலர்ஜியாகவே இருந்தது, இருக்கிறது என்பதற்கு பலவாறான சாக்கு போக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதோ எனது வம்சாவளியில் யாரோ ஒருவர் கிரியேட்டிவ் ஆக இருந்து தொலைத்து அது வழி வழியாக ஜீன்களில் பதியப்பட்டு எக்குத்தப்பாக எனக்கு வந்து சேர்ந்துவிட்டது என்கிற தப்பான மிதப்பு. கிரியேட்டிவ் ஆன ஆட்களுக்கு வலது மூளையில் சோம்பேறி நியூரான்கள் ஜாஸ்தி. ப்ரோக்ராமிங் சமாச்சாரத்தையெல்லாம் அரைக்கண்ணைத் திறந்துகூடப் பார்க்காது என்பது அவ்வகையான சாக்குகளில் சில. (என் தொழில் கிராஃபிக் டிசைன் சம்பந்தப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்).

ஆனால் வேறு வழியில்லாமல் HTML மற்றும் CSS-ம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏரோப்ளேன் ஓட்டுவதைவிட மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவது மிக எளிதல்லவா? ஆனால் ஜாவாஸ்கிரிப்ட் முயற்சி செய்து பார்த்து அது கோவக்காய் பொரியல் மாதிரி பிடிக்காமலேயே போய்விட்டது.

ஆனால் விதி வேறொரு உருவத்தில் வந்து விளையாடிப் பார்த்தது. கிராஃபிக் டிசைன் மென்பொருள்களில் ஒன்றான Adobe Flash-ல் அனிமேஷன் என்பது Action Script சம்பந்தபட்டது என்பதால் கொஞ்சமேனும் அதைக் கற்றுக் கொள்ளவேண்டிய நிர்பந்தம். Basic லெவலில் ஜிகினா வேலைகள் செய்து ஒப்பேற்றலாம். ஆனால் வேறு தளத்தில் அதை ஆழமாகப் படித்தே ஆகவேண்டியிருந்தது. அதற்கு basic programming அறிவு தேவையாயிருந்தது.

இங்குதான் அட்டாச்டு டாய்லட்-காரர் வந்தார். அவர் பெயர் ரகுராம். என் அலுவலகத்தில் டெக்னிகல் ஆர்க்கிடெக்டாக பணி புரிபவர். வாழ்க்கையில் software evangelist ஆக வேண்டுமென்ற லட்சியத்தோடு அலைகிற ஆசாமி. 10 நாளில் என்னை ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ளவைக்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக்கொண்ட வேகத்தில் தோல்வியைத் தழுவியவர். இதற்காக Action Scripting 2.0 என்ற புத்தகத்தை வாங்கின காசுக்கு சஞ்சீவனத்தில் நான்கு தடவை ராஜகீயச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம் என்று சொன்னேன். இப்போதும் என்னை விடாமல் ஒரு ப்ராஜக்டுக்காக Microsoft Expression Blend-ல் XAML Programming படி என்று ஆயாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ப்ரோக்ராமிங் என்பது நீங்கள் சொன்னமாதிரி என்னை நெளிய வைக்கிற அய்ட்டமாகவே இருக்கிறது. அடிப்படையிலேயே எங்கேயோ தப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனால் எப்போதும் ஒரு Tech Savvy ஆக இருக்கிற (அல்லது காட்டிக்கொள்கிற) ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. புதிய டெக்னாலஜிகள் பற்றி இணையத்தில் மேய்வதும், அறியாத பயல்களிடம் அவை பற்றி (அவர்களின் கொட்டாவியை பொருட்படுத்தாது) சிலாகித்து ஜல்லியடிப்பதும் எனக்கு பொழுது போக்கு.

நிறைய டெக்னிக்கல் சமாசாரங்களைச் சொல்லிக்கொடுத்து என்னுடைய ஞானக்கண்ணில் அரைவாசி திறந்துவைத்த பெருமை சத்யராஜ்குமாரையே சேரும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மென்பொருள் இமயம். புதிதாய் ஒரு மொழி வந்தால் (லெட்ஸ் ஸே ஃபர் எக்ஸாம்பிள் : C# அல்லது dot Net) அதற்கான புத்தகத்தை சென்னை ஈஸ்வர் புக் ஸ்டோரிலோ லேண்ட் மார்க்கிலோ வாங்கிவந்து ராஜேஷ்குமார் புத்தகம் மாதிரி கடகடவென்று விடிவதற்குள் படித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவார். மறுநாள் அவருக்கு டாட் நெட் தெரிந்திருக்கும்). இளம் தம்பதிகளுக்காக பிரத்யேகமாக Safe Period Indicator ப்ரோக்ராம் ஒன்றை அவர்.... சரி அதை பிறகு சொல்கிறேன்.

ஆக “என் மூளைக்கு எட்டலை” என்று உதறித்தள்ளியவர்களில் நானும் ஒருவன். கிராஃபிக் டிசைன் என்பதுடன் ப்ரோக்ராமிங் சரிவிகிதத்தில் கலக்கும்போது கிடைக்கிற அட்வாண்டேஜ் கேரியர் கிராஃபில் எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கும். நான்கூட லெக்ஸிங்டன் குதிரை ரேஸ் கம்பெனிக்காக ஃப்ளெக்ஸ் ப்ரோக்ராமில் விளையாடியிருக்கலாம். ஆக ப்ரோக்ராம் அடிப்படைகளை தோளில் கைபோட்டுக்கொண்டு நித்யரஞ்சிதமாகச் சொல்லிக்கொடுக்கிற ஒரு புத்தகம் இல்லை என்பது ஒரு குறைபாடுதான். கொஞ்சம் நாற்றமடித்தாலும் டாய்லெட் உதாரணத்தால் வேரியபிளுக்கு விளக்கம் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லமுடிகிறதல்லவா. இதை சரியான இடத்தில் சரியான சமயத்தில் நீங்கள் யோசித்திருப்பது புரிகிறது. சுஜாதாவின் தலைமைச் செயலகம், ஏன் எதற்கு எப்படியெல்லாம் ஒரு பாமரனுக்கும் கூட நிறைய விஷயங்களை எப்படி எளிதில் புரியும்படி விளக்கியதோ அப்படி. சம்சாரத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு “முடியாது. ஆனால் சினிமாவுக்குப் போய்வந்து நைலக்ஸ் புடவையைக் களையும் போது ஒரு மாதிரி சரசரவென்று சத்தம் வரும். அதுவேண்டுமானால் நிகழலாம்.” என்று Static current என்பதை ரகளையான உதாரணத்தோடு சொல்லிக்கொடுத்திருப்பார்.

மனப்பாடமாக டெக்ஸ்ட் புக் எழுதி விற்றுத் தாக்குகிற புத்தகங்களிலிருந்து விலகி வித்தியாசமாய் இந்தமாதிரி எழுதலாம்தான். நல்ல ஐடியா. என்னை மாதிரி ப்ரோக்ராமிங்கை வெறுத்தவர்களுக்கும் ஒரு புதிய சுவாரஸ்யத்தை உண்டு பண்ணும் என்றுதான் தோன்றுகிறது.

என்னுடைய இந்த மின்னஞ்சல் வேறு உத்திகள் உதாரணங்கள் எதுவுமில்லாமல் சுய எள்ளலுடன் கூடிய புராணமாக இருப்பதையும் உணர்கிறேன். சும்மா ஒரு ஆரம்பநிலை உரையாடல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

சித்ரன்

பி.கு: இந்த முயற்சி ஒரு சில அடிகள் முன்னேறி பிறகு நின்றுபோய்விட்டது.

என். சொக்கனின் 'ஏ.ஆர் ரஹ்மான்'

’ஹைவே’ படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மானின் Implosive silence என்கிற இசையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நண்பர் என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம் எனது ஃபோல்டருக்குள் (மின்புத்தகமாக) வெகுகாலமாகப் படிக்கப்படாமல் தூங்கிக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. இனியும் தாமதிக்கலாகாது என எடுத்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்படிச் சொல்வதிலிருந்தே அது எவ்வளவு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருந்தது என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக அருமையாக, எளிமையாக, அரிய தகவல்களுடன்.

பொள்ளாச்சியில் நண்பர்கள் குழுவுடன் இளையராஜா, மற்றும் இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை சிலாகித்தும், கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தும் திரிந்துகொண்டிருந்த காலகட்டம். பொள்ளாச்சியின் கிராமங்களில் சுற்றித் திரியும்போது பின்னணியில் எங்கேயாவது எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் கிராமம் சார்ந்த படப்பாடல்கள் (கிழக்கு வாசல், சின்னத் தம்பி, மற்றும் பல ராமராஜன் படத்துப் பாடல்கள்) அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக, மனதுக்கு மிக நெருக்கமானதாக இருந்தன. 'மொட்டை.. சான்ஸே இல்ல..’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வெளியாகும் ராஜாவின் பாடல்களை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு கிடந்த சமயத்தில் இனிய அதிர்ச்சியாக, அழகான ஆச்சரியமாக வந்து விழுந்தது “சின்னச் சின்ன ஆசை..”. ’யாருய்யா இது?’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக அதே சமயம் அட்டகாசமான பாடல்கள்.

சின்னச் சின்ன ஆசை வருவதற்கு முன்னரே DD-யில் வரும் உகாதி புரஸ்கார் என்னும் நிகழ்ச்சியில் ஏ.எஸ்.திலீப்குமார் இசைத்த அருமையான டைட்டில் இசைக்கு ரசிகனாக இருந்தேன். வாராவாரம் அதைக் கேட்பதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பேன். அந்த திலீப்குமார்தான் இந்த ரஹ்மான் என்றறிந்ததில் மேலும் ஆச்சரியமாகிப் போனது.

அடுத்தடுத்து வந்த ரஹ்மான் பாடல்கள் திரையிசையில் ஒரு புதிய துவக்கம் நிகழ்ந்திருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தன. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை ரஹ்மானின் மகா ரசிகனாக ஆனவன் நான்.

ராஜாவைப் போலவே ரஹ்மானும் ஒரு மகா இசை ஆளுமை. ராஜாவை எவ்வளவு பிடிக்குமோ ரஹ்மானையும் அதே அளவு பிடிக்கும். ஒரு அபாரமான பர்சனாலிட்டியாகவும் ரஹ்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஹ்மான் பிரபலமடையத் தொடங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சென்னை ஸ்பென்ஸர் ப்ளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என் அருகில் நின்று ஷெல்ஃப்பிலிருந்து ஏதோ புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகு சட்டென்று புரிந்துகொண்டேன். அவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். அவரோ புத்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பி யாரையோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். ஆர்வமேற்பட்டு நானும் திரும்பிப் பார்த்தால் ஒரு பத்து பேருக்கு மத்தியில் நடுநாயமாக நின்றுகொண்டு ஏதோ இசை ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தார் ரஹ்மான். அப்போது இந்த மனிதர் இவ்வளவு உயரம் போவார் என்று தெரிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகத்தில் சின்னச் சின்னச் சுவாரஸ்யமான தகவல்களுடன் ரஹ்மானின் இசைப் பயணத்தை, வாழ்க்கையை, அவரது உழைப்பை, இசையில் இந்த உயரத்தை எட்ட ரஹ்மான் அனுபவித்த கஷ்டங்களை ஒரு சாதாரணனுக்குக் கதை சொல்வது போலச் சொல்கிறார் சொக்கன். இந்தப் புத்தகம் ஒரு சின்ன மன எழுச்சியைக்கூட தந்தது எனலாம். கடின உழைப்பு + வித்தியாசமான சிந்தனைகள் + தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் + செய்வதை புதிதாக, நேர்த்தியாகச் செய்தல் + எப்போதும் அமைதியாக, தளும்பாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருத்தல் - இவைதான் மாபெரும் வெற்றிக்கான சூத்திரம். இதையும் இந்தப் புத்தகத்தில் ரஹ்மானின் வாழ்க்கையை படிப்பதினூடே உணர்ந்துகொள்ளவும் முடிவதே அந்த மன எழுச்சிக்குக் காரணம்.

இப்புத்தகத்தை இலவசமாக அளித்த என்.சொக்கனுக்கு நன்றிகள் பல.

இந்த இலவச மின்புத்தகத்தை PDF ஆக டவுன்லோடு செய்து படிப்பதற்கான சுட்டி கீழே:

http://600024.com/store/a-r-rahman-biography-free-tamil-e-book