மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்


முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையாகச் சொல்வார்கள். அவர் கையிலோ சட்டைப் பாக்கெட்டிலோ வைத்திருக்கும் வாக்கி டாக்கியானது சகிக்க இயலாவண்ணம் இடையிடையே ஒரு பாம்புச் சீறல் சப்தத்துடன் அடித்தொண்டையில் கமறிக்கொண்டிருக்கும். அதே போல பெரியவர்கள் யாராவது கை காட்டினால் நிறுத்திவிடுவேன். சில டாஸ்மாக் பயனர்களும் அதில் அடங்குவர். (அதாவது அடங்க மாட்டார்கள்).

எனது கோவை நண்பரொருவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். கோவையில் அவர் பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது லிஃப்ட் கேட்டிருக்கிறார் ஒரு டிப்டாப்(!) ஆசாமி. இவரும் கொடுத்திருக்கிறார். ஒரு இருட்டான இடம் வந்ததும் ’இங்கே இறங்கிக் கொள்கிறேன்’ என்று நிறுத்தச் சொல்லி நண்பர் சுதாரிப்பதற்குள் அவர் கண்களில் ஆச்சி மிளகாப் பொடியைத் தூவி அவரை ஸ்தம்பிக்க வைத்து கத்தி முனையில் பர்ஸ், செயின் முதலானவற்றை வழிப்பறி செய்யப்பார்க்க, ஏற்பட்ட எரிச்சலில் சடாரென்று நடுரோட்டில் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு இறங்கி கத்திவாலாவை நண்பர் நையப் புடைக்க ஆரம்பித்தாராம். அவனைக் கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்து பிறகு அவ்வழியே வந்த ஒவ்வொருவராக இக்காட்சியைக் கண்ணுற்று தன் பங்குக்கு ’பொதுமாத்துக்’கலையை பயில ஆரம்பித்தார்களாம். இத்தனைக்கும் நண்பர் சீனாவிலுள்ள ஷாலின் டெம்பிளின் முப்பத்தாறு சேம்பர்களில் எந்த ஒன்றிலும் மழைக்குக் கூட ஒதுங்காதவர். ஆனால் மரண அடி கொடுத்தாராம்.

’அதனால யாருக்கும் லிஃப்ட் குடுக்கவே குடுக்காதீங்க” என்று அறிவுறுத்தினார். அசிடிட்டி காரணமாக எனக்கு மிளகாய்ப் பொடி அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது என்பதால் நிறைய யோசித்து பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இனிமேல் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினேன்.

அதன் பிறகு என் வண்டிக்கு முன் நீண்ட கரங்கள் அனைத்தும் தோல்வியுடன் கீழே விழுந்தன. யார் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாலும் ஒரு தலையசைப்பைக் கூட வழங்காமல் விர்ரென்று ஸ்பீடைக்கூட்டிப் போய்விடுவேன்.

இன்று காலை ஒரு சாலைத் திருப்பத்தில் என் ஹோண்டா ஆக்டிவாவைத் திருப்பும்போது ஒரு எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு அழுக்கான பையன் ‘ண்ணா ..ண்ணா’ என்று கை நீட்டினான். ‘அங்க விட்ருங்கண்ணா..’ என்றான். நான் எனது லிஃப்ட் மறுப்புக் கொள்கையைத் தளர்த்தாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்க அவன் வலது கையில் பிடித்திருந்த மாங்கொட்டையைச் சப்பியபடி கூடவே ஓடிவந்தான். திருப்பம் என்பதால் நான் வண்டியின் வேகத்தைக் குறைத்திருக்க அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஓடும் வண்டியைப் பிடித்து ஏறப்பார்த்தான். எனக்குப் பதறிவிட்டது. எங்கேயாவது விழுந்துவிடப்போகிறானே என்று வேகத்தை இன்னும் குறைத்த மறுகணம் லாகவமாக ஏறி பில்லியனில் உட்கார்ந்துவிட்டான்.

ஏறி உட்கார்ந்த மறுகணம் அவன் என் இடுப்பைப் பிடித்துக்கொள்ளப் பார்க்க, “எலேய்.. என்னப் புடிக்காம உக்காரு.. எங்கடா போணும்?” என்றேன். நான் நெளிய என் வாகனமும் நெளிந்தது. அவன் கையில் மாம்பழச்சாறு முழங்கை வரை வழிந்துகொண்டிருந்தது. நான் போட்டிருந்ததோ வெள்ளை நிறம் கலந்த ஒரு டீ-சர்ட். கறை நல்லதுதான். ஆனால் போகாது.

அடுத்த திருப்பத்தில் இறங்குவான் என்று பார்த்தால் அவன் பயணம் முடிவிலியாக இருந்தது. எனக்கு கவனம் முழுக்க அவன் மாங்கொட்டையில் மையம் கொண்டிருந்தது. திடீரென்று முப்பது கிமீ வேகத்தில் செல்லும் என் வாகனத்தை ஓவர்டேக் செய்து ஏதோ ஒரு வஸ்து மஞ்சளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன். வேறொன்றுமில்லை. தன் கடைசி ருசிவரை உறிஞ்சப்பட்ட மாங்கொட்டைதான். அடுத்ததாக அவனுக்கு தன் கையை என் டீசர்ட்டில் துடைக்கும் எண்ணம் உதிக்கும் முன்னே சட்டென்று நிறுத்தினேன். ‘எறங்கிக்கடா.. நான் இங்கே எறங்கணும்..”

அவன் நிறுத்திவிட்டு “தாங்ஸ்ண்ணா..” என்று குதிநடை போட்டு இலக்கில்லாமல் அடுத்த சந்தில் திரும்பினான்.

அவனை நிறுத்தி “எப்டியோ.. என் சட்டை பூரா மாம்பழக் கையத் தொடச்சிட்ட..” என்றேன்.

’இல்லண்ணா..’ என்று சொல்லிவிட்டு தொள தொள பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்தான். அவன் கை கொள்ளாத இன்னொரு பெரிய மாம்பழம். அதை பந்து போல தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டே சினிமாவில் க்ளைமேக்ஸில் வருவது போல ஆடியன்ஸூக்கு முதுகைக் காட்டியவாறு நடந்து போய்க்கொண்டேயிருந்தான்.

நான் ஏரிக்கரை மேலிருந்து..

சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஓர் ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவிட்டது.

மக்கள் மேல் அக்கறை கொண்ட இந்தப் பகுதியின் கவுன்சிலரோ யாரோ ஏரிக்கரையோரமாக இருந்த சாலையை சரி செய்து, மின் கம்பங்கள் அமைத்து, பெஞ்சுகள் போட்டு மெருகூட்டியதில் அதிகாலையில் வாக்கிங், ஜாக்கிங் என களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஏகப்பட்ட குடும்பங்கள் காற்று வாங்க அங்கே வர ஆரம்பிக்க ஒரு மினி கடற்கரை போல் மாறிவிட்டது இந்த ஏரிக்கரை.

கூட்டம் சேர்ந்ததும் சூப், காளான் ஃப்ரை, பேல் பூரி, பானிப்பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின. நடைபாதையில் நடக்க முடியாத அளவுக்குக் கூட்டம்.

இன்று குடும்பத்துடன் ஒரு நடை போய்வந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் தலைகள். வரிசையாக டூவீலர்கள், கார்கள். நிறைய கல்லூரி மாணவர்களுக்கு ‘ஹாங்க் அவுட்’ இடமாகவும் இது மாறிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால் அவர்களெல்லோரும் தத்தம் நண்பர்களுடன் வந்திருந்தாலும் ஆளுக்கொரு மொபைலில் ஆழ்ந்திருந்தார்கள்.

ஏரியானது டிசம்பரில் பெய்த பெருமழையின் மிச்சத்தை இன்னும் தன் மடியில் தேக்கிவைத்து மின்விளக்குகளை அழகாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசியது. ஏரிக்குள் இருட்டில் அசை போட்டபடி எருமைகள் மிதந்தன. நிறைய குப்பைத் தொட்டிகள் இருக்க, காகித, ப்ளாஸ்டிக் குப்பைகள் ஏரிக்கரை சரிவில் பெருமளவில் வீசப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அலங்கோலமாக இருக்கும் ஒரு இடத்தை அழகாக்கி மறுபடி அதை வேறுவிதத்தில் அலங்கோலமாக்குவதில் நம் மக்களுக்கு ஈடு இணை கிடையாது.

நடைபாதையில் ஓரிடத்தில் வரிசையாக ஆறு இளைஞர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை முதுகுப் பக்கமாக நாங்கள் கடக்கும்போது, ஆறு பேர் கையிலும் ஒவ்வொரு மொபைல் இருப்பது கண்ணில் பட்டது. ஆறையும் “லாண்ட்ஸ்கேப்” பொசிஷனில் வைத்திருந்தார்கள். ஆறிலும் ஒரே வீடியோ, ஒரே காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுபேரும் அதை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் என் மகனிடம் “ஒரே வீடியோவை தனித்தனியா ஒரே நேரத்துல ஓடவிட்டுப் பாக்கறாங்க. அதுக்கு எல்லோரும் ஒரே மொபைல்ல பாத்தா பேட்டரியாவது மிச்சமாகும்.” என்றேன்.

அதற்கு அவன் “அது வீடியோ இல்ல. மினி மிலிஷியான்னு ஒரு கேம். ஒரே நேரத்துல எல்லாரும் விளையாடறது. குண்டு போட்டுக்கிட்டே சுட்டுக்கிட்டே இருக்கணும். கடைசி வரை யார் தாக்குப் பிடிக்கறாங்களோ அவங்கதான் வின்னு.”

“அதுக்கு அவங்கவங்க வீட்லயே ஒக்காந்து விளையாடலாமில்ல..” என்றேன்.

பிறகு “நாங்கெல்லாம் அந்தக் காலத்துல..” என்று ஆரம்பிக்க வாய் துடித்ததை அடக்கிக்கொண்டேன். அப்புறம் அடுத்த தடவை ஏரிக்கரைக்குக் கூப்பிட்டால் வர யோசிப்பான்.

தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்: ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்

http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/
ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்” - எனது இந்த வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு. இதில் சுமார் ஐம்பது பதிவுகள் உள்ளன. இதை இலவச மின்னூலாக வெளியிட்டிருப்பது Freetamilebooks,com

இதனை PDF, ePub மற்றும் Mobi வடிவங்களில் இங்கே தரவிறக்கிப் படிக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் ’என்னுரை’-யிலிருந்து:
2004 ஏப்ரல் ஐந்தாம் தேதியை சுபதினமாக பாவித்து வலைப்பதிவு எழுத ஆரம்பித்தேன். ‘புள்ளி’ என்று நாமகரணமிட்டு பொட்டு பூவெல்லாம் வைத்து அமர்க்களமாகத்தான் துவங்கினேன். அப்போதிருந்த சக வலைப்பதிவர்களுடன் போட்டிபோட்டு (அப்போது சுமார் 50 பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திற்குள்ளேயே மளமளவென்று நான்கு ஐந்து பதிவுகள் எழுதிக் குவித்தேன்!) இதோ இத்தோடு பதினொரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. (அட எல்லோருடையதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). அதில் என்னுடையது எவ்வளவு என்று பார்த்தால் சற்றேறக்குறைய ஆயிரத்திலிருந்து தொள்ளாயிரத்தைம்பதை கழித்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு.
எண்ணிக்கையா முக்கியம்? என்ன எழுதினோம் என்பதுதானே முக்கியம் என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொள்கிறேன். முத்தோ குப்பையோ அவ்வப்போது எதையாவது கிறுக்கிக்கொண்டு, இன்னும் இழுத்து சாத்தப்படாத ப்ளாக்கர் மற்றும் வேர்டுப்ரஸ் கடைகள் உபயத்தில் என் வலைப்பதிவுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு தோராயமாக என்னையும் சேர்த்து பதினேழரைப் பேர் பார்க்கிறார்கள்.
‘புள்ளி’ என்ற என்னுடைய வலைத்தளம் தவிர சித்ரன் டாட் காம் மற்றும் “இன்று” தளங்களிலும் அவ்வவ்போது எழுதிக்கொண்டிருந்தேன். ‘இன்று’ என்பது ஒரு கூட்டு வலைப்பதிவு என்பதால் இதைவிட அங்கே வாசகர்கள் ஜாஸ்தி.
ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று நண்பர்கள் என்னிடம் கேட்கும்போது அதை ஒரு எதிரொலி போல உடனே என்னிடமே கேட்டுவிடுவேன். அப்போது வந்து குதிக்கும் பாருங்கள் சால்ஜாப்புகள்!! அப்பப்பா! எல்லோரும் பொதுவாகச் சொல்கிற காரணமான “எங்க சார்? எதுக்குமே டைமே கிடைக்கறதில்ல” என்ற ஒரு அருமையான சாக்கு இருக்கிறதே! சில சமயம் “ரைட்டர்ஸ் ப்ளாக்” (Writer’s block) என்கிற மிகப்பெரிய சவுகரிய வட்டத்துக்குள் உட்கார்ந்துகொண்டு பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கான வேலைகளை மட்டும் சிரமேற்கொண்டிருந்தேன்.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்கிற சப்பைக்கட்டு அது என்று எனக்கே தெரியும்தான். ரொம்ப யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சின்ன ஆயாசம். வாழ்க்கையில் எதையோ தேடி ஓடுகிற அவசரத்தில் “எழுத்துதானே? கிடக்கட்டும் கழுதை!” என்கிற அலட்சியம். இன்னும் பல காரணங்களைச் சொல்லலாம். எதுவும் எழுதாமலே “எழுத்தாளர்” என்கிற பட்டத்தைச் சுமப்பது தர்மசங்கடத்திற்குரியது. ஒரு நாளைக்கு ஐந்து KB கூட எழுதாதவன் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியும்?
“சிறுகதை எழுதுதல்” என்கிற விஷயத்தில்தான் என் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது. முன்னணிப் பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வெளியானதும், கிழக்கு பதிப்பகம் வெளியாடாக ஒரு சிறுகதைத் தொகுப்பு பதிப்பிக்கப்பட்டதும், மின்னூலாக இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டதையும் தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி வேறு கின்னஸ் சாதனைகள் இல்லை.
ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் ஆயிரெத்தெட்டு வலைப்பதிவுகளும், தொடர்களும், கதைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பவர்கள் எப்போதுமே எனது மதிப்பிற்கும் பொறாமைக்கும் உரியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரம் வாய்க்கிறது?
ஆனாலும் இந்த எழுத்துக் கழுதை கூடவே வருகிற பிராணியாக இருக்கிறது. அதற்கு ஆகாரம், குடியிருக்கக் கொட்டாரம் என்றெல்லாம் கொடுத்து ரொம்பவும் சிஷ்ருஷை செய்ய முடியாவிட்டாலும் ஒரு ஓரமாய் படுத்துக்கிடக்கட்டுமே என்று தோன்றுகிறது. எதையாவது எழுதித் தொலையேண்டா என்று அரற்றுகிற மனக் குரல் இதனால் கொஞ்சம் சமாதானமடையலாம். அப்படியாக சின்னச் சின்னதாக சுவாரஸ்யமாக எதையாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்தப் பதிவுகள்.
பல வருடங்களுக்கு முன் மைக்ரோ ப்ளாகிங் ட்ரெண்டெல்லாம் வருவதற்கு முன்னால் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். மேலும் இதில் நிறைய விஷயங்கள் அந்தந்த கால கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கும் என்பது முன்கூட்டிய டிஸ்க்ளைமர்.
கணினி என்பது அலைபேசியாகவும், டேப்லட் ஆகவும் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் இனிமேல் தேவைப்பட்டாலொழிய நீளமான வலைப்பதிவுகள் எழுதுவதில்லை என்பது தீர்மானம். இந்த துரித உணவு உலகில் இரண்டு பேராக்களுக்குமேல் ஒரு வாசகரை உட்கார வைப்பது பாவச் செயல். அப்படிச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் கிண்டி உயிரியல் பூங்காவில் ஆமையாகப் பிறந்து ஊர்ந்து ஊர்ந்தே நூற்றைம்பது வருடங்கள் வாழவேண்டியிருக்கும்.

இதனால் அறியப்படும் நீதி

அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்ரென்று சாலையில் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு ஒரு ஏழெட்டுத் தடவை கட கடவென உருண்டார்.
நல்லவேளையாக முன்னாலோ, பின்னாலோ கார்களோ, கனரக வாகனங்களோ எதுவும் இல்லை. நானும் இன்னும் ஓரிருவரும் வண்டியை நிறுத்தி அவரையும், அவர் பைக்கையும் ஓரம் கட்டினோம். அது ஒரு கல்லூரி மாணவன். முழங்கையிலும், முழங்காலும் சிராய்த்து சிவப்பாய் ரத்தத் திட்டுகள். அவனால் இடது கையைத் தூக்க முடியவில்லை. வலி முகத்தில் தெரிந்தது. ப்ராக்சர் ஆகியிருக்கலாம் என்று நினைத்தேன். தலை சுற்றுகிறது என்றான். நான் என் பையனின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தேன். பாதி மயக்கத்தில் சரிந்தவனை ஒரு லோடு அடிக்கும் மினி டெம்போவில் உட்காரவைத்தோம்.
தெளிந்தபின் ”எதுக்குப்பா இவ்ளோ வேகமா போற?” என்று கேட்டதற்கு, ”ரோட்டில் பள்ளம் இருந்ததை கவனிக்கவில்லை” என்றான். திரும்பிப் பார்த்தபோது பள்ளம் எதுவும் என் கண்ணில் படவில்லை.
உதவி செய்ய வந்த டெம்போ ட்ரைவரும், இன்னொருவரும் அவனை பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ’நீங்க கிளம்புங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார்கள். அவனிடம் ஃபோன் நம்பர் வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, ’தலைல ஏதாவது அடி பட்டுச்சாப்பா?” என்றேன். “இல்லை” என்றான்.
ஹெல்மெட் அணிந்திருந்தான்.

தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்


http://freetamilebooks.com/ebooks/thodarbu-ellaikku-veliye/
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன.
இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது சம்பவங்களில் கிளர்ந்த சிறு பொறிகள் சிறுகதைகளாய் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் கடந்த ஏழெட்டு வருட கால கட்டங்களில் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவைகளை வெளியிட்ட கல்கி, குமுதம், ஃபெமினா தமிழ், நம் தோழி ஆகிய பத்திரிக்கைகளுக்கும், தமிழோவியம்.காம், பதாகை.காம், செந்தமிழ்.காம் ஆகிய இணைய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக தரவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.