குழலினிது

ஆடியோ ஸிஸ்டத்தில் கொஞ்சம் புல்லாங்குழலிசையை வழியவிட்ட பிறகே இந்தப் பதிவை எழுதுகிற மூடு வந்தது. அதுவும் புல்லாங்குழலிசை பற்றிய அல்லது அதற்கும் எனக்கும் உள்ள சொற்பமான தொடர்பு பற்றிய விஷயம் என்பதால் அது தேவைப்படுகிறது. எங்கேயோ காட்டில் விளைகிற மூங்கில் துண்டொன்றில் ஏழோ எட்டோ துளை போட்டு அதற்குள் கொஞ்சம் மூச்சுக் காற்றை அனுப்பி விரல்களால் வருடினால் மனதையும் உயிரையும் சுருட்டிப் போட்டுவிடுகிற மாயத்தை அது நிகழ்த்தி விடுகிறதெப்படி என்பது எனக்கு இன்னும் யோசித்துத் தீராத ஆச்சரியமாயிருக்கிறது.

சின்ன வயசிலிருந்தே இந்தக் காற்றுக்கருவி மீது அமோக மோகம். ஆல் இண்டியா ரேடியோவில் பாடல்கள் கேட்டு வளர்ந்த பருவத்திலிருந்தே பாடல்களை விட “கேப் ம்யூஸிக்” (Gap Music) என்று நானாகவே பெயர் வைத்துக் கொண்ட சரணங்களுக்கு நடுவே வருகிற இசையை உற்றுக் கேட்பது பழக்கம். அதிலும் முக்கியமாய் ஏதாவது குழலிசைத் துண்டு வந்தால் இன்னும் உன்னிப்பாக. எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்களிலிருந்து இந்தத் தேடல் தொடர்ந்து வந்தது. இதன் விளைவாக என்றாவது ஒருநாள் நானும் என் விருப்ப இசைக்கருவியான புல்லாங்குழலை கற்றுக் கொண்டே தீருவேன் என்றொரு ஆசையோ வைராக்கியமோ ஏதோ ஒன்று மனதில் கூடு கட்டியிருந்தது. எம்.எஸ்.வி-யிலிருந்து இளையராஜாவுக்குத் தாவி அப்புறம் திரைப்படப் பாடல்களும் வாழ்க்கையும் பிரிக்க இயலாத ஜோடிகளான பிறகு பு.குழலின்மேல் அதை இசைப்பவர்களின் மேல் தனி மரியாதை தொடர்ந்தது.

இளையராஜா புல்லாங்குழலை பாடல்களில் பொருத்தமான இடங்களில் மிக்ஸ் பண்ணுவதில் கைதேர்ந்தவர் என்பதற்குச் சாட்சியாக பல பாடல்களைச் சொல்லலாம். இவருடைய ஃப்ளுட்டிஸ்ட் அருண்மொழி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதிகாலை நிலவே, நானென்பது நீயல்லவோ, ஆதாமும் ஏவாளும் போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர். இவர் புல்லாங்குழல் விளையாடின திரைப்படப் பாடல்கள் ஏராளம். அதென்னமோ இளையராஜாவின் புல்லாங்குழல் கேட்கிறபோது எங்கேயோ ஒரு கிராமத்தின் தென்னந்தோப்புக்குள் ஸ்லோமோஷனில் ஓடிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு எஃபெக்ட்தான் எப்போதும் கிடைக்கிறது. அவர் ’போவோமா ஊர்கோலம், இந்தமான் எந்தன் சொந்தமான் ’ மாதிரியான கிராமப் பின்னணியில் அமைந்த படங்களுக்கே இந்தக் கருவியை பிற்காலத்தில் நிறைய உபயோகப்படுத்தினார் என்பதனாலோ என்னவோ.

ஹரிப்பிரசாத் செளராஸியாவின் குழலிசையை இளையராஜா “Nothing but wind" மூலம் நம் காதுகளில் ஒலிக்கவிட்ட போது சோறு தண்ணியில்லாமல் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டு கிடந்தேன். அவர் புல்லாங்குழலை இன்னும் எந்தெந்தப் பாடல்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தினார் என்றெல்லாம் இந்த ஒரே ஒரு பாராவுக்குள் சொல்லமுடிகிற காரியமில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ரஹ்மான் வந்த பிறகு இந்த புல்லாங்குழலிசையில் ஏதோ ஒரு மாற்றம் வந்து சேர்ந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அது இளையராஜாவினுடைது போலல்லாமல் வேறுமாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமாக, இன்னும் கொஞ்சம் உருக்கமாய் உயிரை நிரடியது. என்னவளே, மார்கழிப் பூவே, அஞ்சலி அஞ்சலி, பம்பாய் தீம் ம்யூசிக், வெள்ளி நிலவே, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஜாக்கி ஷ்ராஃப் ஊர்மிளாவைத் துரத்தும் ஹேராமா ஏ க்யாகுவா எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் புதுசாய் இதுவரை கேட்காத ஒரு தவிப்பு துடிப்பு அழுத்தம் எல்லாம் சேர்ந்த கலவையாய் இருந்தது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள் நவீன் என்று ஒருத்தர்தான் ரஹ்மானின் புல்லாங்குழலார் என்று. மனதை லயிக்க வைக்கிற விதமாய் இப்படி அனுபவித்து வாசிக்கற ஆளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று தேடியபோது விவரங்கள் சிக்கின. ஆசாமி கோலிவுட்டில் அநேகம் இசையமைப்பாளர்களால் தேடப் படுகிற படு பிஸியான ஃப்ளூட்டிஸ்டாம். ரஹ்மானுக்கு பாம்பே ட்ரீம்ஸ் வரை வாசித்திருக்கிறார். "Fluid" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஆனந்தத் தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்காக வாசித்த தீம் ம்யூசிக் கிறங்கடிக்கிறது. (காற்றலை சுழற்சியிலே என்ற பாடலின் இசை வடிவம்.) . நவீன் வாசித்ததனால் என்றில்லாமல் புல்லாங்குழலைப் பொறுத்தவரையில் ராஜாவைவிட ரஹ்மான்தான் என்னை அதிகம் உருக்கினதும் உலுக்கினதும். (ஆனால் நான் ஒரு தீவிர ராஜா ரசிகனும்கூட என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.)

எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் பாடல்களில் புல்லாங்குழலின் பயன்பாடு பற்றி யாரவது எழுதினாலோ சொன்னாலோ (அல்லது வாசித்துக் காட்டினாலோ நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.)

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் கோவை பி.எஸ்.ஜி காலேஜின் இசைக்குழுவுக்குத் தலைமை வகித்தார் என்கிற வகையில் புல்லாங்குழல் நன்றாக வாசிப்பார். அவர் மேசையில் 3, 4 1/2 என்றெல்லாம் நம்பர் போட்டு நிறைய புல்லாங்குழல் வைத்திருப்பார். அலுவலகத்தில் என்றாவது ஒருநாள் திடீரென்று மின்சாரம் நின்று விட்டால் அப்புறம் கச்சேரிதான். அதாவது நான் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். ”அஞ்சலி அஞ்சலி” அவருடைய ஃபேவரிட். அப்புறம் அவரது இசை நண்பர் பாலு ஒருநாள் அங்கே வர திடீரென ஆர்வம் வந்து அவரிடம் புல்லாங்குழல் கற்றுக்கொள்ளச் சேர்ந்துவிட்டேன். சேர்வதற்குமுன் என்னிடம் குழலைக் கொடுத்து ஊதச் சொல்லி சப்தம் வருகிறதா என்று பரிசோதித்தார். பிரமாதமாக வந்தது. வெஸ்டெர்ன் கற்றுக் கொள்ளத்தான் நான் சேர்ந்தது என்றாலும் ஒரிஜினல் கர்நாடக புல்லாங்குழலை (இதில் எட்டு துளை இருக்கும். வெஸ்டெர்னில் ஏழுதானாம்.) எனக்குக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். எட்டாவது துளைக்கு என் சுண்டுவிரல் எட்டாமல் போனதாலோ, காலை ஆறரைக்கு தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வரை போக சோம்பேறித்தனப் பட்டதாலோ இரண்டே மாதங்களோடு என் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிந்தது எனக்கு இருந்தது கற்றுக் கொள்கிற ஆசை மட்டுமே தவிர வைராக்கியம் அல்ல என்று. ஆக உலக இசை ரசிகர்கள் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அப்போது வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் பார்வையில் படுகிறமாதிரி அந்த கர்நாடக புல்லாங்குழலை வரவேற்பறையில் தொங்கவிட்டிருப்பேன். அப்புறம் அதைப் பார்க்கிறவர்கள் என்னை ஒரு பெரிய சங்கீத சிரோன்மணி என்கிற தோரணையில் பார்க்கத் தொடங்கியபோது எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். பின் எவ்வளவு நாள்தான் எனக்குத் தெரிந்த ஒரே ட்யூன் ஆன “mary had a little lamb" -ஐ மட்டுமே அவர்கள் கேட்கிறபோது வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க முடியும்?.

அவரிடம் கற்றுக் கொண்ட வெஸ்டெர்ன் நோட்ஸ் அறிவை வைத்துக் கொண்டு பின்னாளில் கீபோர்டில் ”மலரே மலரே உல்லாசம்” (பல்லவியை மட்டும்) வாசிக்க முடிந்தபோது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் என்னை நானே வியந்து பாராட்டிக்கொண்டேன்.

மாலி, சஷாங், சவுராஸியா போன்ற அருமையான புல்லாங்குழல் கலைஞர்கள் பற்றி இங்கே பேசவேண்டுமானால் அவர்களைப் பற்றியும், அவர்களது இசையைப் பற்றியும் நான் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறதென்று தோன்றுவதால் விட்டுவிடுகிறேன்.

ராகம் தாளம் என்று இசையை பகுத்துணர்ந்து கேட்கத் தெரியாது. சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படைகள் புரியாது. ஸ்ருதி லயம், ஆரோகணம் அவரோகணம், அபஸ்வரம் இன்னபிற சங்கீத சங்கதிகள் பற்றிய ஞானமில்லை. ஆனால் இசை என்பது அநேக சமயங்களில் காதுகளுக்குள் இறங்கி வட்ட வட்டமாய் அலைகள் பரவுகிற ஒரு குளத்தின் மேற்பரப்பு மாதிரி மனசுக்குள் அலையெழுப்பும்போது உணர்ந்து ரசிக்கத் தெரிந்தால் போதாதா? கேட்கத் தெரியும். ரசிக்கத் தெரியும். சொல்லப்போனால் பீச்சில், ரயிலில் புல்லாங்குழல் விற்பவர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்த மாதிரி வாசிக்கிற “பர்தேஸி பர்தேஸி ஜானா நஹி” என்கிற ஒரே ட்யூனைக்கூட இன்னும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகையில் இந்த அளவிலான இசை ரசனையே எனக்குப் மிகப் பெரும் வாழ்வியல் திருப்தியைத் தருகின்றது. குழலைப் பொறுத்தவரையிலும் கூட அதுவேதான்.

உதாரணத்திற்கு கலோனியல் கசின் ஆல்பத்தின் கிருஷ்ணா நீ பேகனே -வின் நடுவில் வருமே ஒரு flute interlude!! அதை பன்னிரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதேபோல் ரன் படத்தின் பனிக்காற்றே தீம், போறாளே பொன்னுத்தாயி ஓபனிங்..

வேண்டாம்! பெரிய லிஸ்ட் அது!

வர்ணமயமான வாழ்க்கை

என் எழுத்தாள நண்பர்கள் எழுதின புத்தகங்களை சும்மா எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது அதில் ஐந்தாறு புத்தகங்களின் அட்டையை நான் வடிவமைத்திருந்ததைப் பார்த்தேன். ரொம்ப மோசம் என்று சொல்லமுடியாமல் சுமார் ரகத்தில் இருந்தன அவை. கோவை ஞானியின் ’தமிழன் - வாழ்வும் வரலாறும்’ என்கிற சின்ன புத்தகத்திற்கான அட்டைப்படம்தான் முதல் முயற்சி. அதில் நான் வரைந்து கொடுத்த ஒரு ஓவியம் அட்டையாய் வந்தது.


ஃபோட்டோஷாப் என்கிற வஸ்து என் வாழ்வில் வந்ததற்கப்புறம் கிரியேட்டிவிட்டியை கையாள்கிற விஷயம் சுலபமாய்ப் போய்விட்டது. அதை நான் முதன் முதலில் உபயோகித்து உருவாக்கினது பாலைநிலவனின் “கடல்முகம்” கவிதைத் தொகுப்பின் முகப்பு. அதற்கப்புறம் சில பல அட்டைகள். ஒரு நல்ல கிராஃபிக் டிசைனராக நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்பட்டிருந்தேன் என்பது இந்த மாதிரி வடிவமைப்பு வாய்ப்புகளுக்கு ஆதாரமாய் இருந்தது.

சின்ன வயதில் கையில் கிடைத்த பேப்பரிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பேன். அப்பாவிடம் லோடு லோடாக திட்டுவாங்க அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு பதினைந்து வயதிற்கப்புறம் திடீரென பெண்களின் முகங்களை வரைவதின்பால் ஒரு நாட்டம் ஏற்பட்டது. பென்சில், கரி, பேனா, சாக்பீஸ் என்று எது கிடைத்தாலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் கண்களையாவது வரைந்துவிடுவது என்பது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது. பொம்பளைப் படம் வரைவதைத் தவிர வேறு எதுவும் இவனுக்கு உருப்படியாகத் தெரியாது என்பது அப்பாவும் தன் தினசரி கண்டனக் கடமையை தவறாமல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் குடிபோகிற வீடுகளிலெல்லாம் சமையலறை சுவற்றில் ஒரு பெண்ணின் முகத்தை பென்சிலால் தீட்டி வைத்திருப்பேன். (அப்பா அதிகம் நுழையாத இடம் அது ஒன்றுதான் என்பதால்). இப்போதுகூட என் வீட்டு வரவேற்பறை ஹால் சுவற்றில் அதுபோல ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இப்போது பையன் “என்னை wall-ல scribble பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் பண்றே?” என்று திட்டுகிறான். ஆக இரண்டு தலைமுறைகளாக எதிர்ப்பு தொடர்கிறது.

நண்பர்கள் நடத்தின கீதம் என்கிற கையெழுத்துப் பிரதிகள் என் கிராஃபிக் டிசைன் திறமையை பட்டை தீட்டிய முதல் கல். வெள்ளைத்தாள்களில் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் ஓவியம் வரைந்து பள பளா பத்திரிக்கைகளிலிருந்து படங்கள் கத்தரித்து ஒட்டி, பார்டர் போட்டு லே-அவுட் எல்லாம் செய்து வெளியிட்ட காலத்திலிருந்து இந்த டிசைனிங் ஆர்வம் படிப்படியாக வளர்ந்து ஒரு நாள் இன்ஜினியரிங் துறையிலிருந்து என்னைக் கழற்றி விளம்பரக் கம்பெனியின் வாசலில் வீசிவிட்டது.

விளம்பரக் கம்பெனிகளுக்கு வருவதற்கு முன்னால், ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக (!) முதன் முதலாக கணினியில் நான் கற்றுக்கொண்டது ஆட்டோ கேட் (AutoCad) என்கிற மென்பொருள். அதில் பிள்ளையார் சுழிக்குப் பதில் முதன் முதலில் ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து முதலாளியிலிருந்து ஆஃபீஸ் பையன் வரை பாராட்டு வாங்கி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் அதையே செய்து கொண்டிருந்தால் சம்பளம் கிடைக்காதென்பது புரிந்து வேறு வழியில்லாமல் இன்ஜினியரிங் ட்ராயிங்கும் போட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

இந்த கிராஃபிக் டிசைன் மற்றும் மல்டிமீடியா என்கிற இந்த கிரியேட்டிவ் துறைக்குள் நான் எப்படி அடியெடுத்து வைத்தேன் என்று ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் ஓட்டிப் பார்த்தேன். நிறைய விஷயங்கள் அலையடித்தன. கோயமுத்தூரில் True illusions Graphics & Animations Private Limited என்ற பெரிய பெயர் கொண்ட ஒரு விளம்பர நிறுவனம்தான் முதன் முதலில் என்னை சுவீகரித்து இந்தத் திசையில் என் பயணத்திற்கு உதவியது எனலாம். “உங்களுக்கு கோரல்ட்ரா (CorelDraw) தெரியுமா?” என்று இன்டர்வ்யூவில் என்னைப் பார்த்து கேட்ட அந்த நிறுவன நிர்வாக மேலாளரிடம் “ஓ! நன்றாய்த் தெரியும்” என்று நான் அப்பட்டமாய் சொன்ன பொய்யினால்தான் இந்த திருப்பம் நிகழ்ந்தது. (இந்த ரகசியத்தை அப்புறம் அவரிடம் சொல்லிவிட்டேன்).

கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக இந்தக் குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லது ஓட்டிக்கொண்டிருக்கிறேன். WANTED என்று 5 செ.மீ x 2 காலத்திற்கு கட்டம் கட்டின தினத்தந்தி விளம்பரங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் Brand Identity, Print Design, மல்டிமீடியா, இணையதள வடிவமைப்பு (web designing), eLearning, Deskop GUI என இந்த ஏரியாவின் அநேக இடங்களிலும் கால் பதித்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கான நகர்தலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நேற்று http://www.thefwa.com என்ற வலைத்தளத்தை மறுபடி மேய்ந்துகொண்டிருந்தபோது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது.

பதினோராயிரத்தில் ஒருவன்

கிரிக்கெட் என்கிற வார்த்தை முதல் முதலில் என் காதில் விழுந்தபோது எனக்கு எட்டோ ஒன்பதோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன். Made in Japan என்று எழுதியிருந்த அப்பாவின் சிவப்புக் கலர் Sanyo - ரேடியோவிலிருந்து ஒலிபரப்பான கமெண்ட்ரியிலிருந்துதான் அந்த வார்த்தையை முதலில் கேட்க நேரிட்டது. எங்கேயோ விளையாட்டு மைதானத்தின் விண்ணைப் பிளக்கிற கரகோஷத்துக்கு நடுவே நடக்கிற விளையாட்டை ஒருத்தர் மூச்சு விடாமல் வர்ணிக்கிறார்.

"...வருகிறார், வீசுகிறார், அருமையான பந்து. அந்தப் பந்தானது சுழன்று இறங்கி... இதோ கவாஸ்கர் மட்டையை வீசுகிறார். சரியான வீச்சு. பந்து பார்வையாளர் திசை நோக்கி பறக்கிறது. இதோ ஸிக்ஸர். இன்னும் அதிக டெசிபலில் கரகோஷம். 6 ரன்கள். இப்போது ஸ்கோர்: 152-2. கரகோஷமோ, வர்ணனையாளரின் உச்சஸ்தாயி குரலோ, ஸ்கோரோ எதுவும் பாதிக்காமல் அப்பா சலனமற்று கேட்டுக் கொண்டிருந்தார். எதுவும் புரியாமல் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இது என்ன விளையாட்டு என்று கேட்டபோது Eleven fools are playing. Eleven thousand fools are watching என்றார். அன்றைய வயதுக்கு அது என்னமோ மண்டைக்குள் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

அதனால் கிரிக்கெட் என்கிற அந்த வார்த்தையானது, என் வயதையொத்த சக நண்பர்களுக்கு ஏற்படுத்தின பரவசத்தை எனக்குள் ஏனோ ஏற்படுத்தவில்லை. ஆனால் பரமபதத்திலிருந்து பம்பரம்வரை வகை தொகை பாராமல் விளையாண்டு கொண்டிருந்த என் நண்பர்கள் சட்டென்று மட்டையும் கையுமாய் அலைய ஆரம்பித்தது மட்டும் எனக்கு ஏனோ ஏமாற்றமாயிருந்தது.

இது இப்படி இருக்கிறதென்றால் பக்கத்து வீட்டில் சுப்ரமணியபுரம் சசிகுமார் மாதிரியாகத் தோற்றமளிக்கிற ஒரு அண்ணன் ஒரு சின்ன ட்ரான்ஸிஸ்டரை காதோடு அணைத்து புஸ் என்ற சப்தத்துடன் வாசலில் அமர்ந்து கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடத்தில் கிரிக்கெட் பற்றிய குறைந்த பட்ச விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று போனேன். வெங்சர்க்கார் எனப்படுகிற கிரிக்கெட் வீரர் அவர் காதுக்குள் பந்து வீசி முடித்தவுடன் ரேடியோவை அகற்றி என்ன என்றார். சொன்னேன். அவர் நான் சொன்னதை சட்டை செய்யாமல் "அது இருக்கட்டும், உன் பேரை இனிமே யார் கேட்டாலும் ரகுநாத வர்ம சேதுபதி கணேஷ சுந்தர பாண்டிய குலோத்துங்க வீர வெங்கடேஷ்வர யோகி ஜகந்நாத சூர்ய காந்திப் ப்ரகாஷ ராவ்-ன்னு சொல்லணும். எங்கே சொல்லு பாக்கலாம். சொல்லேன்னா டைகரை அவுத்து விடுவேன்" என்றார் சம்பந்தமில்லாமல். தன் பெயர் உச்சரிக்கப்பட்ட மாத்திரத்தில் டைகர் என்றழைக்கப்படுகிற அல்சேஷன் நாய் கழுத்துச் சங்கிலியை இழுத்து "வ்வ்வவ்" என்று குறைத்துப் பரபரத்தது. ஒருவேளை வீரமாய் நகராமல் நான் அங்கேயே நின்றிருந்தால் என் மனத் துணிவை பாராட்டி குறைந்த பட்சம் "ஃபோர்" என்பதும் "பவுண்டரி" என்பதும் ஒன்றுதான் என்பதையாவது அவர் எனக்குச் சொல்லிகொடுத்திருக்கக் கூடும்.

அதன் பிறகு கிரிக்கெட்டின் மேல் எனக்கு எந்த ஒரு சுவாரஸ்யமும் ஏற்படாமல் அது எனக்கு ஒரு அந்நிய விளையாட்டாக மாறிப் போனது. பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள். இந்தச் சொற்றொடரின் கவர்ச்சி பிடித்துப் போக, எனக்கு இந்த விளையாட்டு பிடிக்காமல் போனதற்கான சாக்காக இதை எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன். அது என்ன ஒரு பந்தை சுழற்றிச் சுழற்றி வீசுவதும் அதை ஒருவன் அடிப்பதும் ஒருவன் பிடிப்பதும். இதெல்லாம் ஒரு விளையாட்டா? சுத்த போர்.

ஆனால் இதனை மனதுக்குள் வர விடாமல் எத்தனை வேலி போட்டுத் தடுத்தாலும் டி.வி திரையில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் மட்டையுடன் தோன்றி பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்றார். (இதைப்பற்றி முன்னொரு பதிவின் நடுவில் எழுதியிருந்தேன். அது இங்கே) கபில்தேவின் தட்டையான மட்டையைவிட கட்டையான மீசை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நான் பெரிதானால் இப்படித்தான் மீசை வைத்திருக்கவேண்டும் என்பதற்கு என் ரோல் மாடல்கள் லிஸ்டில் 1) வாழ்வே மாயம் கமல் 2) கபில்தேவ் 3) சிசர்ஸ் விளம்பரத்தில் வருகிற ஒருவர்.

மீசை என்பதெல்லாம் நாய்க்குட்டி மாதிரி நம் இஷ்டத்துக்கு தேர்ந்தெடுத்து வளர்க்கிற ஒன்றல்ல என்று புரிகிற பருவம் வந்தபோது ரேடியோவுக்கு மவுசு குறைந்து டி.வி வந்திருந்தது. அப்போதுதான் ரேடியோவில் மட்டையும் பந்தும் வீசின நிபுணர்களை யார் யார் என்று அடையாளம் தெரிந்தது. அம்பயர் என்று ஒரு கேரக்டர் நடுவில் நின்று கொண்டிருப்பார் என்பதும். அப்புறம் என் நண்பர்கள் குழாம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம் என்று என்னை தனிமைப் படுத்தி வெறுப்பேற்ற ஆரம்பித்தார்கள். காலனிக்கு வெளியே காலி மனைகளில் மூன்று குச்சிகள் நட்டி டீம் பிரித்து விளையாட ஆரம்பித்தார்கள்.எனக்கு இது எதுவும் பிடிக்காவிட்டாலும், டி.வி- மேட்சில் விளையாடுபவர்களைப் போலவே பந்தை தொடையில் தேய்த்து தேய்த்து பசங்கள் பவுலிங் போடுவதை அசுவாரஸ்யமாய் மரத்தடி நிழலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பக்கத்தில் இருக்கிற தண்ணீரற்ற பொட்டல் கிணற்றில் அடிக்கடி விழுந்து விடுகிற பந்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நண்பர்கள் முழித்துக் கொண்டிருக்கும்போது நான் கயிறு கட்டி இறங்கி அட்வென்ஞ்சர் எல்லாம் செய்து எடுத்துக் கொடுப்பேன்.

அனில் கும்ளே, வினோத் காம்ப்ளி, ஸ்ரீகாந்த், கிரண்மோர், ரன் ரேட், ஓ.டி.ஐ, உலகக் கோப்பை, எல்.பி.டபிள்யூ, வைடு, நோ பால் என்று என்னென்னவோ பெயர்களும் வார்த்தைகளும் என் அனுமதியில்லாமலே அவ்வப்போது என் காதில் விழுந்து கொண்டிருந்தது. கல்கியில் வெளியான என் முதல் கதைக்கு "25 வயது சித்ரனின் முதன் இன்னிங்ஸ் இச்சிறுகதை" என்று அறிமுகம் கொடுத்து போட்டபோதுகூட கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் என்றால் என்ன என்று தெரியாமல்தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்கிறதே எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் அறிவூட்டப்பட்டது.

அப்படியாக கிரிக்கெட்டை என் வாழ்க்கையின் கூண்டுக்குள் வர விடாமல் நான் பட்ட எத்தனங்கள் எல்லாவற்றையும் திடீரென இப்போது ஒதுக்கி வைக்க வேண்டியதாய் போயிற்று. காரணம் என் 8 வயது வாண்டு. அவன் ஒண்ணரை வயதாய் இருக்கும்போது சும்மா ஒரு ப்ளாஸ்டிக் கிரிக்கெட் பேட் ஒன்றை ஃபோட்டோ எடுப்பதற்காக கையில் கொடுத்தது தப்பாகப் போய்விட்டது. இன்று வரை அவனிடமிருந்து அதைப் பிடுங்க முடியவில்லை. டொக் டொக் என்று சதா வீட்டுக்குள் ப்ளாஸ்டிக் பேட்டின், பந்தின் சப்தம் கேட்க ஆரம்பித்தது. அவனது கிரிக்கெட் ஆர்வம் நாளடைவில் அதிகமாகி தீவிரமாகியது. ஒரு தடவை மொட்டை மாடியில் அவன் சகாப் பொடியன்களுடன் ஆடிய வேர்ல்டு கப் மேட்சில் சிக்ஸருக்குப் போன ஒரு பந்தைப் பிடிக்கப் போய் இடது கையில் Green Stick Fracture உடன் அழுதுகொண்டே திரும்பி வந்தான். மூன்று மாதம் மாவுக்கட்டு. அப்படியும் அடங்காமல் மாவுக் கட்டுத் தொட்டிலுடனேயே இல்லாத பேட்டால் இல்லாத பந்தை பவுண்டரிக்கோ, அரங்கத்துக்கு வெளியேயோ இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தான். வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடமும் பந்தைக் கொடுத்து அவனுக்கு பவுலிங் போடச் சொல்லி ஆட்டத்துக்கு இழுத்துவிடுவான்.

என் அலுவலக நண்பர்கள் அடையாறு காந்தி நகர் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டபோது என் மகனுக்காக ஞாயிற்றுக் கிழமை தூக்கத்தைக் தியாகம் செய்து அதிகாலை ஐந்தரை மணிக்குப் போனோம். நான் முதன் முதலாக பேட்டிங் செய்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. எனக்கு விளையாடத் தெரியாது என்று சொல்லியும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பவுலிங் போட்டு முதல் பந்திலேயே அவுட் ஆக்கிவிட்டதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நீ சுத்த வேஸ்ட்டு என்கிற மாதிரி பார்த்த மகனின் பார்வையைத் தவிர்த்து அந்தப் பக்கம் பார்த்தேன். அவன் இது நாள்வரை என்னை இன்னொரு சச்சின் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். பையனின் உயரத்துக்கும் உருவத்துக்கும் வயது வந்தவர்களின் மட்டையும் அதன் எடையும் ஒத்து வரவில்லையென்றாலும் சளைக்காமல் அதையும் முயற்சித்துப் பார்த்தான்.

இது தவிர பொடியன் இப்போது டி.வியில் பழைய மேட்செல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டான். எல்லா நாட்டினுடைய எல்லா அணி மெம்பர்களையும் உருப்போட்டு வைத்திருக்கிறான். எந்த மேட்சில் யார் எத்தனை ரன் எடுத்த்தார்கள், எப்படி அவுட் ஆனார்கள் என்று அவன் ரேன்ஞ்சுக்கு ஒரு மினி கிரிக்கெட் என்சைக்ளோப்பீடியாவாக உலா வந்து கொண்டிருக்கிறான். Puma Ballistic என்று எழுதியிருக்கிற மட்டைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கிக் கொண்டான். இதுவரை 128 பந்துகளைத் மொட்டை மாடியில் ஸிக்ஸர் அடித்துத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை அவன் இன்னும் சின்னக் குழந்தைதானே என்று என் மனைவி அவனுக்கு சோறு ஊட்டும்போது 'கிரீஸ்'-க்கு வெளில நின்னு ஊட்டினா எனக்கு எப்படி எட்டும். இன்னும் பக்கத்துல வா! என்றான். முழங்காலில் கட்டுகிற பட்டை, கையுறை, ஸ்டம்ப்ஸ் எல்லாம் வைத்திருக்கிறான். அஜந்தா மெந்திஸ்-ன் ஸ்பின் இப்படித்தான் இருக்கும் என்று சுழற்றி வீசி என் நெற்றியைப் பதம் பார்க்கிறான். கம்ப்யூட்டரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடுகிறான். இவையெல்லாற்றையும் மையப்படுத்தி, "அவனுக்கு கிரிக்கெட்-ல பயங்கர இண்டரெஸ்ட் இருக்கு, கோச்சிங் போட்டிருங்க." என்று ஒருத்தர் தவறாமல் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வரவேற்பறையில் அவன் கிரிக்கெட் விளையாடி இரண்டு ட்யூப் லைட், ஒரு சுவர் கடிகாரம், இரண்டு மூன்று ஃபோட்டோ ஃப்ரேம் அப்புறம் பக்கத்து வீட்டு அகல் விளக்கு, காலிங் பெல் ஸ்விட்ச் என்று ஏகத்துக்கு உடைத்திருந்தாலும், கோச்சிங் பற்றி யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

கிரிக்கெட் பேட்டை எப்படி கையில் சரியாகப் பிடித்து நிற்பது என்பதை முதன் முதலாக மகனிடமிருந்து சென்ற வாரம் கற்றுக் கொண்டேன்.

சண்டை

முன்னொரு காலத்தில் சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்றழைக்கப்படும் நடிகர்கள் வாழ்ந்து வந்தார்கள். சினிமாவில் எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் அக்கிரமக்கார்கள் அப்பாவிகளுக்கு வஞ்சனையால் அநீதியிழைக்கிறார்களோ, அங்கெல்லாம் குதிரை, ரிக்ஷா போன்ற கிடைக்கிற வாகனங்களில் கடுகி விரைந்து வந்து வானத்தில் எம்பிக் குதித்து அக்கிரமக்காரர்களை உதைத்து பூமியில் உருட்டிவிட்டார்கள். சாட்டை, பட்டாக்கத்தி, வாள், வேல் முதலான சாமானியர்கள் கையாள்வதற்கியலாத ஆயுதங்களை அநாயசமாக கையாண்டு சளைக்காமல் சண்டையிட்டார்கள். அடிபட்டு விழுந்தாலும் வில்லனை நோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு இதழ்கடையோரம் அரும்பிய உதிரத்தை வலது கை கட்டை விரலால் ஸ்டைலாக துடைத்துவிட்டு முழு வீச்சோடு பாய்ந்தார்கள். இறுதியில் தன் சக்தியையெல்லாம் இழந்து கீழே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் பகைவனின் நெஞ்சில் காலும் அவன் கழுத்தில் கத்தியும் பதித்து ஓரிரு டயலாக் உதிர்த்து அவனை மன்னித்து விடுதலை செய்தார்கள். அல்லது உத்தரத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கடைசி காட்சியில் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டரிடம் அவனை ஒப்படைத்துவிட்டு சட்டத்துக்கு காவலர்களானார்கள்.

இந்த மாதிரி காட்சிகளில் கத்திச் சண்டையாயிருந்தால் டிணிங் டிணிங் என்ற சப்தமும், வெறும் கை என்றால் டிஸ்யூம் டிஸ்யூம் என்ற சப்தமும் ஒரு இருபது நிமிடங்களுக்கு இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். பிண்ணனியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்பொருட்டு பாம் பாம் பாம், தடுபுடுதடுபுடுதடுபுடுதடுபுடு என்று இசையமைப்பாளர் ட்ரம்ஸையும் ட்ரம்பட்டையும் உருட்டியவாறிருந்தார். இடையிடையே கதாநாயகர்களின் அருமை வளர்ப்பான குதிரை, அல்லது கறுப்பு நாய் முதலானவை, வில்லனால் கட்டிப்போடப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கட்டை அவிழ்த்தோ அல்லது வெடிக்கவிருக்கும் குண்டின் திரியில் சிறுநீர் கழித்தோ தம்மாலான வகையில் நீதிக்குத் துணைபுரிந்தன.

இந்தமாதிரி சண்டைக்காட்சிகளில் திரையரங்கில் கரகோ்ஷங்களும், விசில்களுமாக அதிர்ந்து தூள் பறந்தன. சினிமா அதன் அழகிய பொய்களை, செல்லுலாய்ட் கதாநாயகர்களின் வீரத்தோடு கலந்து உறுத்தாமல் ரசிகர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்களின் மனம் திரையரங்கைவிட்டு வெளியில் வரும்போது மிக உற்சாகமாயிருந்தது.
கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றோர் வந்தபிறகு வில்லன்கள் சற்று ஆடித்தான் போனார்கள். பின்னே இவர்களுக்கு கராத்தேவும், குங்ஃபூவும் வேறு தெரிந்திருக்கிறதே. செகண்டுக்கு முப்பத்தியிரண்டு குண்டுகள் வீதம் பொழியும் இருபத்துக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சாக்கில் கட்டி கடலில் வீசினாலும் மிதந்து எழுந்து வந்தார்கள். நிஜமான பராக்கிரமசாலிகள்தான். ஆகவே இதுபோன்ற சாகாவரம்பெற்ற கதாநாயகர்களை அடியோடு ஒழித்துக்கட்ட ராக்கெட் லாஞ்ச்சர்களும், க்ரானைடு குண்டுகளும் வில்லன்களுக்கு நிறைய தேவைப்பட்டன. கமலஹாசனுக்கே இப்படியென்றால் மாருதி காரையெல்லாம் ஒற்றைவிரலால் தூக்குகிற சரத்குமார்களை வெறுங்கையால் சண்டையிட்டுக்கொல்வதென்ன சாதாரண விஷயமா என்ன? தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுக்கத் தொடங்கியது.

சினிமாவில் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் மறைந்து, தங்கத்தைக் கடத்துபவர்களின் ட்ராஃபிக் அதிகமாகத் தொடங்கியது. அப்புறம் தங்கம் தீர்ந்துபோய் அதிகம் சிரமமில்லாமல் ப்ரெளன் சுகர். இடைஞ்சலாய் இருக்கிற கதாநாயகர்களை துவம்சம் செய்யப் போன அடியாட்கள் கைகாலில் கட்டுடன் திரும்பி வந்தார்கள். ஆட்கள் போதவில்லை. ஆயுதங்களும். எத்தனை நாள்தான் கஞ்சாவையே கடத்துதென்று அலுத்து சாராயம் காய்ச்சிப் பார்த்தார்கள். அங்கேயும் விஜயகாந்த் எழுந்தருளி மேற்படி சட்டவிரோதக்காரர்களை பக்கத்து மரத்தில் கால் வைத்து எகிறி அடித்தமையால் பேசாமல் அரசியல்வாதியாவதைத் தவிர வில்லன்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அரசியலென்றால் எப்படியும் அடியாட்கள் எனப்படுபவர்களையும் கழுத்தில் ஒரு கிலோ சங்கலியணிந்த தாதா என்றழைக்கப்படுகிற அதிபயங்கர வில்லன்களையும் ஏவி கதாநாயர்களின் வீரத்துக்கு சவால்விட ஆரம்பிக்கலாமே. இதன் மூலம் அணுகுண்டை நெஞ்சில் தடுத்து மாண்புமிகு வில்லர்களின்பால் திருப்பியனுப்பும் கதாநாயகனுக்கு அரிவாள் என்கிற ஒரு பயங்கர ஆயுதத்தை அறிமுகம் செய்ததன்மூலம் தமிழ்த்திரை சண்டைக்காட்சி ரசிகர்களை கொஞ்சமாய் நகர்த்தி சீட் நுனியில் உட்கார வைத்தார்கள்.

இப்போது ரசிகன் உற்றுப் பார்க்க... ஸாரி... கேட்க ஆரம்பித்தான். அடடே... அந்த டிஸ்யூம் டிஸ்யூம் சப்தத்தையே காணோமே. அதற்குப் பதில் என்ன இது இடி இடிக்கிற மாதிரி.. ஓ... DTS... அப்படியொன்று வந்துதான் பல நாட்களாயிற்றே..! வருடங்கள் எத்தனை உருண்டிருந்தாலும், எத்தனைதான் நையப் புடைத்து அனுப்பியிருந்தாலும் மறுபடி மறுபடி எதிரே தோன்றுகிற இந்த தாதாக்களை ஒழிக்க நம்மருமை கதாநாயகனுக்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. அது தப்பித்து ஓடுகிற மாதிரி ஓடி துரத்துகிற அடியாட்களை ஒரு சந்து முனையில் கார்னர் செய்து திரும்பி நின்று எரிமலையை கண்களில் தேக்கி வைத்து முறைப்பது. இந்த இடத்தில் ரீ ரெகார்டிங் அனைத்தையும் நிறுத்திவிட்டு நம் கதாநாயகனின் வலது அல்லது இடது கை விரல்கள் மடங்குவதை ஒரு மாதிரி நெறிபடுகிற சப்தத்துடன் மிக மிக டைட் குளோசப்பில் காட்டவேண்டும். அரை நூற்றாண்டு காலமாக சண்டைக் காட்சிகளில் ஊறித் திளைத்திருந்த ரசிகப் பெருமகனானவன் அடுத்து என்ன நடக்கிறதென்பதை மிக சுளுவாக ஊகித்துக்கொண்டான். கதாநாயகனிடம் முதல் அடி வாங்குகிற அடியாளைப் பார்த்தீர்களா? அந்த முதல் அடி என்பது மிக முக்கியம். அது நாயகன் எப்படிப் பட்டிவன் என்பதற்கான முன்னுரை. திடீரென DTS சர்ரெளண்ட் சவுண்டு ஸ்பீக்கர் தன் அதிக பட்ச இடியை ரசிகனின் காது ஜவ்வுகள் அதிரப் பாய்ச்ச இதோ அடியாள் அந்தரத்தில் 13 கரணம் போட்டு (இது கொஞ்சம் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு) தூரத்தில் ஊருக்கு ஒளி வழங்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றின்மேல் பொறி தெரிக்க (இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபாஸ்ட் மேட்ரிக்ஸ் எஃபெக்டில்) வெடித்து விழுந்தான் பாருங்கள். மற்ற அடியாட்கள் தொண்டையில் எச்சில் விழுங்கினார்கள். பின்னே கதாநாயகனும் முன்பு தாதாவாக இருந்ததும் அவனுக்கு இன்னொரு பெயர் இருந்ததும் பின்னர் தெரிய வந்தது.

அதற்கப்புறம் விழந்த ஒவ்வொரு அடியிலும் தியேட்டரில் ரசிகனின் தாடை கிழிந்து தொங்கியது. அவன் ரத்தம் சூடாகி நரம்புகள் ஜிலீர் ஜீலீர் என்று அதிர்ந்தன. அடியா இது. இடி. போததற்கு ஒரு பாட்டி வேறு வந்து கதாநாயகனை உற்சாகப் படுத்தும் வகையில் பாட நிஜமாகவே அவன் ஒரு சூறாவளிக் காற்றென சுழன்று எழுந்தான். க.நா அடியாட்களின் கைகளைத் திருகி வீசுகிற போது எக்ஸ்ரேயில் எலும்புகள் ஒடிவது தெரிந்தன. இந்த கிராஃபிக்ஸ் என்று ஒன்று வந்து சேர்ந்துவிட்டதாமே நடுவில். நல்லதாகப் போயிற்று. இனி தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் சிம்ம சொப்பனம்தான். வில்லனைப் பந்தாட விஜய் நடந்துவரும்போது அவர் ஷுவில் பட்டாசு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அப்புறம் எப்படி சாணை பிடிப்பது மாதிரி தீப்பொறி பறக்கிறது? ஓ! கிராஃபிக்ஸ். இனி காலைச்சுழற்றி தரையில் புயல்காற்றை உருவாக்கி வில்லன்களை கதிகலங்கச் செய்வது சுலபம். இப்படி எத்தனையோ!

கதாநாயகன் DTS, க்ராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் துணைகொண்டு முஷ்டி மடக்கி விசிறின ஒவ்வொரு அடியிலும், மண்டை பிளந்து, கைகால் முறிந்து, தாடைச் சதைகள் பிய்ந்துபோய், கழுத்தெலும்பு மளுக்கென்று முறிக்கப்பட்டு, சுவரோடு அடித்துத் துவைக்கப்பட்டு, கண்கள் பிதுங்கி, நரம்புகள் தளர்ந்து உயிர்நாடி ஊசலாடி ஓய்ந்து இருக்கைகளில் கிடக்கிறான், தொன்று தொட்டு குடும்பத்தோடு திரைப்படம் காணவந்து கொண்டிருக்கும் ரசிகன். இதற்கு முன் பார்த்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியினைக் கண்ணுற்று இதயம் நடுங்கி அதிர்ந்து மிகவும் பயந்துபோய் இரவெல்லாம் உளறின தன் குழந்தைக்கு காதில் வைப்பதற்கு பஞ்சோடு இன்றைக்கு "அந்நியன்" என்ற இந்தப் படத்தைக் காண வந்தவனும் கொஞ்சம் நடுங்கித்தான் போய்விட்டான் இந்தத் தடவை. வெளியே வந்தபோது விண் விண் என்று தலை வலித்தது.

வந்த கையோடு இந்த வலைப்பதிவையும் எழுதி வைத்தான். எம்.ஜியாரும் சிவாஜியும் வந்து இந்த DTS என்கிற வில்லனை எப்படியாவது ஒழித்துக்கட்டினால் இனி குழந்தைகளையும் தைரியமாய் சண்டைப்படத்துக்கு கூட்டிக்கொண்டு போகலாமென்று அவனுக்குத் தோன்றுகிறது.

இன்னொரு மழைக்கு முன்பு

என் நண்பரும் எழுத்தாளருமான சரசுராமின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'இன்னொரு மழைக்கு முன்பு' மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் வெளியீடாக வந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

17 சிறுகதைகளால் ஆன இந்த தொகுப்பில் உள்ளடங்கிய கதைகள் அனைத்தும் ஆனந்த விகடன், சாவி, கல்கி, புதிய பார்வை, தினமணி கதிர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானவை. 136 பக்கங்கள்.

மனித உறவுப் பின்னல்களின் நுண்ணிய சிக்கல்களையும், யதார்த்த உணர்வுகளின் நீரோட்டத்தையும், நெகிழ்ந்த மன வெளிப்பாடுகளின் உன்னத கணங்களையும், மென்மை தோய்ந்த அணுகுமுறையில் சிறந்த சிறுகதைகளாய் மாற்றும் திறமை சரசுராமின் பேனாவுக்கு உண்டு. மரங்கள் அடர்ந்த சாலையில் சன்னமாய் அடிக்கிற காற்றில் ஒரு சாயங்கால வேளை slow cycling மாதிரி எந்தப் பரபரப்பில்லாமல் மென்மையாய் கைபற்றி சீரான வேகத்தில் நம்மைக் கூட்டிச் செல்கிறது சரசுராமின் இத்தொகுப்பு.

இந்த புத்தகத்தின் முன்னுரையில் "என் கதைகள் பெரும்பாலும் பாசிட்டிவான விஷயங்களாக இருப்பதாகக் கேள்வி வந்ததுண்டு. இனிமேலும் வரலாம். அதற்கு என் பதில் - என் வாழ்வில் எனக்கு நடந்த சம்பவங்கள் பெரும்பாலும் நல்லவையே. நான் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களே. ஆக, இது என் அனுபவம். இவர்கள் என் மனிதர்கள். நான் ஆசைப்படும் மனிதர்கள் அல்லது நான் எதிர்பார்க்கும் மனிதர்கள். இவர்களைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அப்படி எழுதுவதையே பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சரசுராம். முற்றிலும் உண்மை.

என்றைக்கோ வந்திருக்கவேண்டிய இத்தொகுப்பு மிக தாமதமாக வெளிவந்திருந்தாலும் நல்ல சிறுகதை வாசிப்பை விரும்பும் வாசகர்களை இத்தொகுப்பு திருப்தி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நானும் சிறுகதை எழுத ஆசைப்பட்டபோது அதன் வடிவம், உள்ளமைப்பு, உரைநடை உள்ளிட்ட இன்னபிற நுணுக்கங்களைக் கற்றுத்தந்து என்னை சிறுகதையாளனாக உருமாற்றிய பெருமைகூட சரசுராமையே சேரும்.

சரசுராம் இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பது திரைத்துறையில் இணை இயக்குநராக.

இன்னுமொரு மழைக்கு முன்பு
சிறுகதை தொகுப்பு - சரசுராம்
விலை - ரூ. 75
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்
32/9, ஆற்காடு சாலை
கோடம்பாக்கம், சென்னை - 600024
போன் : +91 44 23723182, 24735314
mithra2001in@yahoo.co.in